அக்னி நட்சத்திரம்!
மே 4 - அக்னி நட்சத்திரம் ஆரம்பம்அஸ்வினி முதல் ரேவதி வரையான, 27 நட்சத்திரங்கள் பற்றி மட்டுமே நாம் அறிவோம். வான சாஸ்திர நிபுணர்கள், வானிலுள்ள மற்ற நட்சத்திரங்கள் பற்றியும் அறிவர். அதென்ன அக்னி நட்சத்திரம்... இப்படியொரு தனி நட்சத்திரம் இருக்கிறதா என்ன!சூரியனை ஒரு கிரகம் என்று நாம் சொன்னாலும், அதையும் ஒரு நட்சத்திரமாக எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த கிரகம், பரணி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திற்கு வரும் போது, அதிக உஷ்ணத்தைக் கொட்டுகிறது. பிறகு படிப்படியாக நகர்ந்து கார்த்திகை நட்சத்திரத்தில் உலா வரும்.பரணி மூன்றாம் பாதத்துக்கு வரும் நாள், மே 4 ஆக அமையும். மே 28 அன்று இந்த நட்சத்திர சுற்றுலா நிறைவு பெறும். தமிழில் சித்திரை 21 முதல், வைகாசி 14 வரை, 25 நாட்கள் அக்னி நட்சத்திர காலம். பரணி, 4ம் பாதம் முதல், ரோகிணி முதல் பாதம் வரை, சூரியன் உலா வருவதாகவும் சொல்வதுண்டு. ஆனாலும், இதன் முழு தாக்கம், 21 நாட்கள் தான் நீடிக்கும். கடைசி நேரத்தில், வெப்பம் குறைய ஆரம்பித்து, சாரலுக்கான அறிகுறி தெரியும்.பரணியும், கார்த்திகையும், சூடான நட்சத்திரங்கள். தன் வெப்பத்தைத் தாங்கும் நட்சத்திரங்களை சூரியன் தேர்வு செய்கிறது.ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒவ்வொரு அதிதேவதை, அதாவது, ஒரு நட்சத்திரத்தின் குணத்தை ஒத்த தெய்வம் அல்லது தேவர் எனக் கொள்ளலாம். உதாரணமாக, பரணியின் அதிதேவதை துர்க்கை. இவள் கோபத்தை அனலென கொட்டுபவள்.கார்த்திகையின் அதிதேவதை, அக்னி பகவான். இவரைப் பற்றி சொல்லவே வேண்டாம். இவர் அடுப்பிலும் எரிவார். ஊரையும் கொளுத்துவார். கடும் கோபக்காரர். இந்தக் கோபக்காரர்களை அக்னி நட்சத்திர காலத்தில் உலா வர தேர்ந்தெடுத்துள்ளார். எல்லாரது கோபமும் இணைந்து, அனலென பூமியிலுள்ள உயிர்களை வாட்டுகிறது, சூரியன்.அக்னி நட்சத்திரம் பற்றி, மகாபாரதத்திலும் கதை உண்டு. கிருஷ்ணருடன் காண்டவ வனம் வந்தனர், பாண்டவர்கள். அப்போது, அக்னி பகவான், அவர்கள் முன் தோன்றினார். சோர்வாக இருந்தவரிடம், காரணம் கேட்டார், கிருஷ்ணர்.'துர்வாச முனிவர், 100 ஆண்டுகள் ஒரு யாகம் நடத்தி, நெய்யை யாக குண்டத்தில் வாரி ஊற்றினார். அதைக் குடித்து குடித்து வயிறு மந்தமாகி விட்டது.'இதற்கு ஒரே வழி, காண்டவ வனத்தில் நெருப்பு பற்ற வைத்து, 21 நாட்கள் எரிந்தால், வயிற்றுக்குள் இருக்கும் நெய் உருகி, என் பிரச்னைக்கு விமோசனம் கிடைக்கும்...' என்றார், அக்னி.கிருஷ்ணரும், பாண்டவர்களும் சம்மதித்தனர். அதற்கு பரிசாக, வருணன் மூலமாக, காண்டீபம் எனும் வில்லை, அர்ஜுனனுக்கு அளித்தார், அக்னி. இதைக் கொண்டு தான் கர்ணன், ஜயத்ரதன் போன்ற வீரர்களை அழித்தான், அர்ஜுனன். இந்த, 21 நாட்களே அக்னி நட்சத்திர காலம் என்றும் சொல்லப்படுவதுண்டு.அக்னி நட்சத்திர காலத்தில், குளிர்ந்த குணம் கொண்ட கிருஷ்ணரை வணங்கியும், சிவனுக்கு தாராபிஷேகம் - தண்ணீரை துவாரமுள்ள கலசத்தில் ஊற்றி அபிஷேகம் செய்தும், மங்கள பலன்களை அடையலாம். தி. செல்லப்பா