உள்ளூர் செய்திகள்

பேரழகியின் பெருங்கனவு!

கோழிகளுக்குத் தீவனம் வைத்துக் கொண்டிருந்தாள், பூர்ணிமா. அழைப்பு மணி சத்தம் கேட்டதும், கைகளை அலம்பி, முகம் கழுவி முன் வாசலுக்கு வரவேண்டும் என்றால், ஐந்து நிமிடங்கள் ஆகும். ராணுவத்திலிருந்து பணி ஓய்வு பெற்ற, கணவர் மகேஸ்வரனிடம், ''என்னங்க, நான் இங்க வேலையா இருக்கேன். போய் யார் வந்திருக்காங்கன்னு பாருங்க,'' என்றாள்.அறையில், அவரது குறட்டை ஒலி கேட்கவே, தானே எழுந்து கை கழுவி, கதவைத் திறந்தாள், பூர்ணிமா.வெளியே சலிப்பாக நின்றிருந்தனர், சங்கீதாவும், அவளது கணவன் திவாகரனும்.பூர்ணிமாவும், சங்கீதாவும் நேருக்கு நேர் வைத்த கண் எடுக்காமல் பார்த்தனர். பூர்ணிமாவாகத் தான் இருக்கும் என்று ஒரு உத்தேசத்தில், ''பூர்ணிமா...'' என, குரல் தந்தாள் சங்கீதா. ''நீங்க?'' என்று இழுத்தாள். அவள் முகம் புன்னகையால் நிறைந்திருந்தது.''நான் சங்கீதா, 1982- - 84 காலகட்டத்தில், பிளஸ் 2வில் ஒண்ணாப் படிச்சோமே.''''சங்கீதாவா...'' உதடுகள் அகல விரிந்து, ஆச்சரியத்தில் பேச வார்த்தைகளின்றி, நின்றாள் பூர்ணிமா.சங்கீதா அவளைக் கட்டி அணைக்க நெருங்கி வந்தபோது, தீவனத்தின் வாசம் வீசியது. ''கோழிகளுக்குத் தீவனம் வெச்சிட்டு இருந்தேன். உள்ளே வாங்க,'' என அழைத்து, சோபாவில் அமர வைத்தாள். ''இவர் என் வீட்டுக்காரர், பேர் திவாகரன். வாத்தியார் வேலை பார்த்துட்டு, போன மாசம் தான் ஓய்வு பெற்றார்.'' ''வணக்கம், நான் ரெண்டு நிமிஷத்துல வந்துடுறேன். அதுவரைக்கும் நீங்க ரெண்டு பேரும் என் மக கல்யாண ஆல்பத்தைப் பார்த்துக்கிட்டு இருங்க,'' என சொல்லி, அலமாரியிலிருந்த ஆல்பத்தை எடுத்து கொடுத்தாள்.அறைக்கு சென்று, கணவரை எழுப்பினாள். ''பைத்தியமே... ஏன்டி, துாங்கிக்கிட்டு இருந்த என்னை ஏன் எழுப்பின,'' என, கோபம் காட்டினான். ''என் கிளாஸ்மெட்டும், அவ புருஷனும் வந்திருக்காங்க. அவங்ககிட்ட பேசிக்கிட்டு இருங்க. நான் குளிச்சுட்டு வரேன்,'' என சொல்லி, பதிலுக்கு காத்திருக்காமல் குளியலறைக்கு ஓடினாள். கோபத்தில் வந்த வார்த்தைகளை அடக்கி கொண்டான், மகேஸ்வரன். எழுந்து வாஷ்பேஷனில் முகம் கழுவி, நரைத்த அடர்ந்த மீசையை முறுக்கி விட்டபடி ஹாலுக்கு வந்து புன்னகைத்தான்.''வாங்க வாங்க, சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் கண் அசந்துட்டேன். நீங்க, பிளஸ் 2 கிளாஸ்மெட்டா, இல்ல காலேஜ் கிளாஸ்மெட்டா?''''பிளஸ் 2 கிளாஸ்மெட், அங்க ஒண்ணாதான் படிச்சோம். அப்புறம் நான், மார்த்தாண்டம் நேசமணி நினைவுக் கிறிஸ்தவக் கல்லுாரியிலும், பூர்ணிமா, நாகர்கோவில், ேஹாலிகிராஸ் காலேஜிலும் படிச்சா. இவர், என் வீட்டுக்காரர். சேலத்துல பள்ளிக்கூடத்தில வாத்தியாரா வேலை பார்த்து, 'ரிட்டையர்டு' ஆகிட்டார்.'' ''நான், 30 வருஷமா மிலிட்டரியில இருந்து, 52 வயசுல, 'ரிட்டையர்டு' ஆகிட்டேன். அப்புறம், 'பிசினஸ்' பண்ணினேன்; 'கொரோனா'வுக்கு பின், அது படுத்துகிச்சு. இப்ப வீட்டுல சும்மா தான் இருக்கேன்.''அவரது பேச்சில், மிலிட்டரியின் கம்பீரம் சற்றும் குறையாமல் இருந்தது. ''உங்க பொண்ணு, பூர்ணிமா மாதிரியே இருக்கா. மாப்பிள்ளை என்ன பண்றார்?'' கேட்டாள், சங்கீதா. ''மாப்பிள்ளை, சென்னையில், ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கிறார். என் மகளும், ஐ.டி.,ல தான் வேலை பார்க்கிறா. உங்களுக்கு எத்தனை பிள்ளைங்க?'' கேட்டார், மகேஸ்வரன். ''எங்களுக்கு ஒரே பொண்ணு, அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. மாப்பிள்ளையும், பொண்ணும் சிங்கப்பூர்ல தான் இருக்காங்க,'' மகேஸ்வரனும், திவாகரனும் பழகிய நண்பர்களைப் போல பேசிக் கொண்டிருந்தனர். பூர்ணிமா குளித்து, காட்டன் புடவை கட்டி, சமையல் அறைக்குச் சென்று, டீ போட்டு எடுத்து வந்து, மூவருக்கும் கொடுத்தாள். ''உனக்கு, எப்போ கல்யாணம் ஆச்சு?'' ஆர்வமாய் கேட்டாள், பூர்ணிமா. ''எனக்கு, 1989ல் நடந்தது. கல்யாணம் முடிஞ்சதும், இவர் வேலை பார்க்கிற இடத்துக்கு போய் விட்டோம். தருமபுரி, ஒட்டன்சத்திரம்ன்னு பல ஊர்களில் வேலை பார்த்துட்டு, கடைசியா சேலத்துல, 'ரிட்டையர்டு' ஆகிட்டார். உனக்கு, எப்போ கல்யாணம் ஆச்சு?'' ''எனக்கு, 1991ல் நடந்தது. நாம படிச்ச காலத்துல, தொடர்பு எதுவும் இல்லாம போச்சு. தொடர்பு இருந்திருந்தா, உங்க வீட்டு கல்யாணத்துக்கு நாங்களும், என் வீட்டு கல்யாணத்துக்கு நீங்களும் வந்து, ஜாலியா பேசி இருந்திருக்கலாம். ஆமா, என் வீட்டு முகவரி எப்படி உனக்குத் தெரிஞ்சுது?'' கேட்டாள், பூர்ணிமா.''நம் கூட, பிளஸ் 2வில் ஒண்ணாப் படிச்ச அருள் தான் சொன்னான்,'' என்றாள், சங்கீதா.பூர்ணிமாவின் முகம் சுருங்கியது. மகேஸ்வரன் அண்ணாந்து விட்டத்தைப் பார்த்தார். சட்டென்று சிறு மவுனம் நிலவியது. கடந்த 1982- - 84 காலகட்டத்தில், அந்தப் பள்ளிக்கூடத்தின் அழகு ராணியாக வலம் வந்தவள், பூர்ணிமா.சிவந்த முகத்தில் கண்களுக்கு மை எழுதி, தலை நிறைய மல்லிகைப் பூ சூட்டி, லிப்ஸ்டிக் பூசாத உதடுகளில் புன்னகையைத் தடவி, தாவணி போட்டு, பள்ளிக்கூடத்திற்கு வருவாள். மாணவியரின் மொத்தக் கண்களும் அவளைத் தான் மொய்க்கும்; மாணவர்களைச் சொல்லவே வேண்டியதில்லை. படிக்கும் காலத்தில், நாடகம், பேச்சுப் போட்டி, பாடல் போட்டி எது வந்தாலும் விடுவதில்லை, எல்லாவற்றிலும் கலந்து கொண்டு, முதல் பரிசைத் தட்டிச் செல்வாள். பிளஸ் 2வில், பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்று, நாகர்கோவிலில் ேஹாலிகிராஸ் கல்லுாரியில் படிக்கச் சென்றாள். அத்துடன், சங்கீதாவுடனான தொடர்பு அறுந்து போயிருந்தது. அருள், அவள் அழகில் விழுந்து, அவளை மனதில் தேக்கி கொண்டான். நாகர்கோவிலில் படிக்கச் சென்றபோது, அவளை தினமும் பார்ப்பதற்காகவே, அவனும் நாகர்கோவிலில் கல்லுாரியில் படித்தாலும், அவளிடம் நெருங்கித் தன் காதலைச் சொல்ல முடியவில்லை. கல்லுாரிப் படிப்பு முடிந்து, சொந்தமாகத் தொழில் துவங்கினான், அருள். பொருளாதாரத்தில் உயர்ந்தபோது, தரகரை அனுப்பி, பூர்ணிமாவைப் பெண் கேட்டுப் பார்த்தான். அவளை அரசாங்க உத்தியோகம் பார்க்கும் ஒருவனுக்குத்தான் திருமணம் செய்து வைப்பதாக, பூர்ணிமாவின் வீட்டில் மறுப்பு தெரிவித்தனர். ஒரு தலைக் காதலாக மாறிப் போனது, அருளின் காதல். எழுந்து சமையலறைக்கு வந்தாள், சங்கீதா.அன்று பார்த்த அழகி. இன்று, முகத்தில் சுருக்கம் விழுந்து, சிவந்த உடல் கறுத்து, நரைத்த தலைமுடியோடு, பூர்ணிமா நின்றதை பார்க்க சகிக்கவில்லை, சங்கீதாவுக்கு. அவள் முன்பு இருந்ததற்கும், இப்போது இருப்பதற்கும் நிறைய மாற்றங்கள். அவளது நிலையைப் பார்த்து, சங்கீதாவின் கண்களில் லேசாக நீர் துளிர்த்தது. ''நீ, எதுக்கு கண் கலங்குகிற. நான் நல்லா, சந்தோஷமாத்தான் இருக்கேன். மகளை கல்யாணம் பண்ணிக் குடுத்தாச்சு. அவருக்கு, 'பென்ஷன்' வருது. ஏகப்பட்ட குடும்பச் சொத்து இருக்கு. வந்த வருமானத்தில், நிறைய சொத்துக்கள் வாங்கி சேர்த்துட்டோம். எனக்கு என்ன கவலை,'' என்றாள், பூர்ணிமா.''பூர்ணிமா... சின்ன வயசுல, நீ நாடகத்துல நல்லா நடிப்பே. அது மாதிரி என்கிட்டயும் நடிக்காத. உன் மனசை தொட்டுச் சொல்லு, நீ, இந்த வீட்டில் சந்தோஷமா தான் இருக்கறியா? மனசு புழுங்குறத உன் முகம் காட்டிக் கொடுக்குது.''நீ, இப்படி இருக்க வேண்டியவ இல்ல. நீ நல்லா படிச்சு, அரசாங்க உத்தியோகத்தில் இருப்பேன்னு தான் நினைச்சுகிட்டு இருந்தேன். இங்க வந்து பார்த்தா, ஆடு, மாடு, கோழி வளர்த்து வாழ்க்கையை நகர்த்துற,'' சங்கீதா பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும், வலியோடு அவள் மனதில் இறங்கியது. ''நீ சொன்னியே, அரசாங்க வேலை... டி.என்.பி.எஸ்.சி., பரீட்சை எழுதி, பாஸ் ஆகி வேலையும் கிடைச்சுது. ஆனா, வேலைக்குப் போக வேணாம்ன்னு, என் புருஷன் சொல்லிட்டாரு''''ஏன்?'' ''ஏன்னா, நான் அழகா பொறந்துட்டேனாம். எல்லாரும் அழகா இருக்கணும்ன்னு ஆசைப்படுவாங்க. ஆனா, நான் அழகாப் பொறந்துட்டேன்னு ரொம்ப வருத்தப்பட்டேன். என் புருஷன், மிலிட்டரியில் காட்டுற கட்டுப்பாட்டை, வீட்டுலயும் காட்டுவார்.''அங்கே போகக் கூடாது, இங்க போகக் கூடாது, அவன்கிட்ட பேசக் கூடாது, இவன் கிட்டப் பேசக் கூடாது. எதுக்கெடுத்தாலும் சந்தேகம், கல்யாணம் ஆனதுக்கு அப்புறம், தனிமையா நான் வெளியில போனது கிடையாது. போக அனுமதிச்சதில்லை.''என் இளமைக் காலத்துல தான் இந்த சந்தேகம் இருந்துச்சுன்னா, எனக்கு வயசு ஆகி, மகளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்ததுக்கு அப்புறமும், என்னை சந்தேகப்படுறார். ''நம் கூட படிச்ச அருள், என்னை கல்யாணம் பண்ண ஆசைப்பட்டான், முடியல. ஏன்னா, நான் அவனை மனசுல கூட நெனச்சுப் பார்க்கல. அவனுக்கு கல்யாணம் ஆகி, அவன் மக கல்யாணத்துக்கு எப்படியோ, என் வீட்டு முகவரி தேடிக் கண்டுபிடிச்சு, வீட்டுக்கு வந்து கூப்பிட்டான்.''அன்று, 'நீயும், அவனை விரும்பினதால தானே நம் வீடு தேடி வந்து பத்திரிகை வெச்சான்'னு, என் வீட்டுல ஐந்து நாள் சண்டை நடந்துச்சு. எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு இருக்கேன். என் உடம்பு இருக்கிற நிலைமையை பாத்தியா...''புருஷன், பொண்டாட்டியா இருந்தாலும், ரெண்டு பேருக்கும் தனித்தனி மொபைல்போன் வெச்சிக்கிற இந்த காலகட்டத்தில், எங்க வீட்டில், எனக்கும், அவருக்கும் சேர்த்து ஒரே மொபைல்போன். அதுவும் பழைய, 'பட்டன்' போன்.''எனக்கும் நிறைய கனவுகள் இருந்துச்சு, அதெல்லாம் நமக்கு கிடைக்காதுன்னு தெரிஞ்சப்ப, என்னடா வாழ்க்கை இதுன்னு நானே பல தடவ அழுதுருக்கேன்,'' குமுறி குமுறி அழுதாள். அழுகையின் வீரியம் அதிகமாக, தாங்க முடியாமல் அவள் தோள் மீது சாய்ந்தாள்.சங்கீதாவுக்கும் அழுகை வந்தது. கனத்த பெருமூச்சோடு கசிந்திருந்த கண்ணீரைத் துடைத்தபடி, சமையலறையை விட்டு வெளியேறினாள். கணவன் - மனைவி இருவரும் பயன்படுத்தும் மொபைல் போன் எண்ணை வாங்கி, கண்ணீரோடு புறப்பட்டாள், சங்கீதா.இரண்டு நாட்களுக்கு பின், சங்கீதாவின் மொபைல் சிணுங்கியது. போனை எடுத்து, ''ஹலோ...'' என்றாள். ''நான் பூர்ணிமா பேசறேன். நீ, வீட்டுக்கு வந்து, என் வாழ்க்கையில் சந்தோஷத்த விதைச்சுட்டுப் போயிட்ட. ரொம்ப தேங்க்ஸ்டி...'' என்றாள்.''எதுக்கு தேங்க்ஸ்... நீ, என்ன சொல்றேன்னு எனக்குப் புரியல!'' ''நீயும், நானும் சமையலறையில் பேசிக்கிட்டு இருந்தப்போ, உன் புருஷனுக்கு போன் அழைப்பு வந்து, பேசிக்கிட்டு வெளியே போயிட்டார். என் புருஷன் சந்தேகப் பேர்வழியா, மெல்ல வந்து நாம ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்ததை ஒட்டுக் கேட்டிருக்கிறார்.''நான் பேசின வார்த்தைகள், அவர் கண்ணை தொறந்துடிச்சு. இன்று, புது ஆண்ட்ராய்டு போன் வாங்கிக் கொடுத்து, 'இனிமே, நீ யார் கூட வேணும்னாலும் பேசு. அந்த அருள் நம்பர் கிடைச்சாலும் அவன்கிட்டயும் பேசு'ன்னு சொல்லிட்டார். ஒருநாள் நானும், என் புருஷனும் உன் வீட்டுக்கு வர்றோம்,'' என்ற வார்த்தையை கேட்ட, சங்கீதாவிற்கு, சந்தோஷம், டன் கணக்கில் கூடியது. அவருக்கு ஏற்பட்ட மன மாற்றத்திற்கு, தானும் ஒரு காரணம் என்பதை நினைக்க நினைக்க, பெருமையாக இருந்தது, சங்கீதாவிற்கு.பால் ராசய்யா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !