அருட்செல்வர், ஏ.பி.நாகராஜன்! (8)
ஏ.பி.என்., இயக்கத்தில், சிவாஜி நடிப்பில் உருவான, நவராத்திரி படத்தைப் பார்த்து, அதை சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுத்தது, ரஷ்ய அரசாங்கம். இயக்குனர் ஏ.பி.நாகராஜனை கவுரவப்படுத்த, அவரை ரஷ்ய நாட்டுக்கு வரும்படி அழைத்தனர்.'இந்தப் படத்தில், என் கதையின் ஒன்பது பாத்திரங்களுக்கும், சிவாஜி கணேசனே உயிர் கொடுத்தார். என்னையும், நடிகர் சிவாஜியையும் அழைத்து கவுரவித்தால் மட்டுமே, விழாவில் கலந்துகொள்ள இயலும். எனவே, சிவாஜியையும் அழைத்து கவுரவிக்க ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன்...' என, கடிதம் எழுதினார், ஏ.பி.என்., 'அந்த திரைப்படத்தின் இயக்குனர் என்ற முறையில் தங்களை மட்டுமே கவுரவிக்க முடியும். அதைத் தவிர வேறு யாரையும் கவுரவிக்க, எங்கள் தேர்வுக் குழுவின் விதிகள் இடம் கொடுக்கவில்லை...' என, பதில் கடிதம் அனுப்பியது, அந்த அரசாங்கம்.'அவரைக் கவுரவிக்க, உங்களது விதிமுறைகளில் வழிவகைகள் இல்லை என்றால், உங்கள் அழைப்பை ஏற்க, என் வாழ்க்கை பண்பு விதிமுறைகளிலும் இடமில்லை. அதனால், நானும் உங்கள் அரசு விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை...' என்று கடிதம் எழுதி விட்டார், ஏ.பி.என்., அதனால், அவர் ரஷ்யாவுக்கு செல்லவில்லை.தன் ஆரம்ப கால நாடக வாழ்க்கையில் நடித்த, பார்த்து ரசித்த, 'சிவலீலா' என்ற புராணக்கதை, ஏ.பி.நாகராஜன் மனதில் நன்கு பதிந்திருந்தது. அவருக்கு மிகவும் பிடித்த கதையாகவும் இருந்தது.சம்பூர்ண ராமாயணம் படத்துக்குப் பிறகு, தமிழ் திரைப்பட உலகம் போன போக்கிலேயே சென்று, பல நல்ல சமூகக் கதைகளை திரைப்படம் ஆக்கினார், ஏ.பி.என்., ஆனாலும், அவர் அடிமனதில், 'சிவலீலா' ஓடிக்கொண்டே இருந்தது.புறக்கணிக்கப்பட்ட புராணக் கதைகளுக்கு புதிய வடிவம் கொடுத்தால், மசாலாக் கதைகளை பார்த்து பார்த்து, அலுத்துப் போன ரசிகர்கள், அதை ஏற்றுக் கொள்வர் என, அவர் முழுமையாக நம்பினார்.சிவனின் திருவிளையாடல்களில், தருமிக்கு பொற்கிழி கொடுத்தது, பாணபத்திரருக்காக, இறைவன் விறகு வெட்டியாக வந்து, பாண்டிய நாட்டின் கவுரவத்தை காப்பாற்றியது ஆகியவற்றை, படத்தில் இடம்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.ஏனெனில், அக்கதைகளில், இறைவன் ஏழையின் குரலுக்கு இரங்குபவன் என்ற நம்பிக்கை இருப்பதால், படம் பார்ப்பவர்களும் ரசிப்பர் என்று கருதினார்.அடுத்து, பழத்துக்காக, பரமசிவன் குடும்பத்தில் பிளவு ஏற்படுத்திய நாரதர் கதையையும் இணைத்தார். நாரதர் கலகத்தின் கருத்து, 'உலகம் என்றால் அம்மை - அப்பன் தான்' என்ற தத்துவத்தையும், இது புரியாமல், கோபித்துச் செல்லும் முருகனை சமாதானப்படுத்தும் தாய் பாசத்தின் மகிமையையும், சிவனின் திருவிளையாடல்கள் மூலம் சொல்ல வைத்தார். இதற்காக வலுவானதொரு திரைக்கதையை அமைத்தார்.அடுத்து, திருவிளையாடல் படத்தில், பழம் கிடைக்காததால் கோபத்துடன் செல்லும், முருகனின் கோபத்தை தணிக்க, அவ்வையார் வருவதாக அக்கதையில், கதாபாத்திரத்தை சேர்த்தார், ஏ.பி.என்., அவ்வையின் கதாபாத்திரத்தை கதையில் இணைப்பது பற்றி அவர் நடத்திய விவாதமொன்று, சர்ச்சையை கிளப்பியது. அவ்வையார், சிவன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் இல்லை. அதனால், அவ்வையார் பாத்திரத்தை திரைப்படத்தில் சேர்ப்பது தவறு என, கருத்துக் கூறினர், சிலர்.அந்த சர்ச்சைக்கு முடிவு காண, தமிழ் அறிஞர்களான, கி.வா.ஜெகன்னாதன் மற்றும் ம.பொ.சி., ஆகியோரிடம் கருத்து கேட்டார், ஏ.பி.என்., 'ஒரு நல்ல கருத்தை சொல்ல வரும் நீங்கள், இந்த சர்ச்சையை பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள். தைரியமாக அவ்வையின் பாத்திரத்தை திரைப்படத்தில் சேருங்கள்...' என்றனர். அதன் பின்னரே, அவ்வையின் பாத்திரத்தை, திருவிளையாடல் படத்தில் சேர்த்தார், ஏ.பி.என்.,அதையடுத்து அவ்வையார் பாத்திரத்துக்கு பொருத்தமானவர், கே.பி.சுந்தராம்பாள் அம்மையார் தான் என்று தேர்வு செய்தார். அவரின் சம்மதம் பெற, கோவைக்கு அருகே உள்ள கொடுமுடிக்கு, தன் உதவியாளர் ஒருவரை அனுப்பினார். 'ஏ.பி.நாகராஜன் தம்பியா, திருவிளையாடல் என்ற பெயரில் திரைப்படம் எடுக்கிறார். அவர் நம் ஊரு தம்பி தான், நல்ல ஞானமுள்ளவர். நல்ல நாடக அனுபவமும் உள்ளவர்...' என்று, நாகராஜனைப் பாராட்டினார். 'ஒரு வாரத்தில் என் சம்மதத்தை சொல்லி அனுப்புகிறேன்...' என்றார், சுந்தராம்பாள்.ஒரு வாரம் கழித்து சென்னைக்கு வந்த, கே.பி.எஸ்., நாகராஜனுக்கு சொல்லி அனுப்பினார். கே.பி.எஸ்சை, தன் ஆழ்வார்பேட்டை திரைப்பட அலுவலகத்துக்கு அழைத்து வந்தார். அவ்வையார் பாத்திரம் தொடர்பான விஷயங்களைக் கேட்டு அறிந்தார், கே.பி.எஸ்., 'திரைப்படத்தில் நடிப்பதற்கு எவ்வளவு சம்பளம் தர வேண்டும்...' என்று கேட்டார், ஏ.பி.என்.,'தம்பி நாகராஜா, எனக்கு என்ன சம்பளம் கொடுக்க வேண்டும் என்று உனக்குத் தெரியாதா...' என்றார், கே.பி.எஸ்.,அவ்வையார் பாத்திரத்துக்கு மெருகேற்றி சிறப்பாக நடித்துக் கொடுத்தார், கே.பி.எஸ்.,திருவிளையாடல் படத்தின், ஒவ்வொரு பாத்திரத்திலும் நடிப்பதற்கு, ஏ.பி.நாகராஜன் தேர்ந்து எடுத்த நடிகர்கள் அத்தனை பேரும் மிகச் சரியான தேர்வு. எல்லாவற்றுக்கும் மேலாக, நக்கீரராக வேறு யாரையாவது நடிக்க வைத்தால், அது ஒரு வேளை சிறப்பாக அமையாவிட்டால் என்னாகுமோ என நினைத்து... — தொடரும்நன்றி: அல்லயன்ஸ் கம்பெனி.கார்த்திகேயன்படத்தில் புலவர் தருமி வேடத்தில் நடித்த நாகேஷ், அதற்கு முன் மாதிரியாக அமைந்த சம்பவம் பற்றி இப்படி கூறுகிறார்: மைலாப்பூர் குளத்தில் கோடை காலத்தில் தண்ணீர் இல்லாமல் வற்றி விடும். அதில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவர். அப்போது அங்கு சென்று அமர்ந்திருப்பாராம், நாகேஷ். அங்கு ஒரு பக்தரும் அடிக்கடி வந்து, தனியாக அமர்ந்து தானாகவே புலம்பிக் கொண்டிருப்பாரம். 'கபாலீஸ்வரா பார்த்தியாடா உன் குளத்தில பசங்க கிரிக்கெட் விளையாடற அளவுக்கு ஆயிப்போச்சு. இதெல்லாம் யாராவது கேட்கறாளா, சரி மனுஷா தான் கேட்கலே, நீயாவது கேட்கப்படாதா.'சரி நீ தான் கேட்கலே, உன் சார்பா நான் கேட்கலாம்ன்னு நெனச்சு, கேட்டேன்னு வெச்சுக்கோ, அந்தப் பசங்க, கிரிக்கெட் பேட்டாலேயே என் முட்டிய பேத்துருவானுங்க. அதனால் தான் தானா புலம்பிண்டு இருக்கேன். கத்தி கத்தி என் குரலும் போப்போறது, ஒரு நாள் என் பிராணனும் போப்போறது. போவட்டுமே போவட்டும் இருந்து இப்ப என்னத்த சாதிச்சு கிழிச்சுட்டேன்...' என்பாராம். உதாரணத்துக்கு இந்த ஒரு புலம்பல். அந்த பெரியவர், தினமும் வெவ்வேறு ஏதாவது ஒரு விஷயத்துக்காக புலம்புவது வழக்கமாம்.'அவரை மனசுல வச்சுக்கிட்டுத்தான் நான், தருமி வேடத்தில் புலம்பினேன். அது ரசிகர்களிடையே எனக்கு பெரும் வரவேற்பைப் பெற்று தந்தது...' என்றார், நடிகர் நாகேஷ்.