அருட்செல்வர். ஏ.பி.நாகராஜன்! (12)
திருவருட்செல்வர் படம் சம்பந்தமாக, மதுரை ஆதீனம் கொடுத்திருந்த பத்திரிகை செய்தியை படித்த, ஏ.பி.என்., தன்னிலை விளக்கம் அளிக்கும் நிலைக்கு ஆளானார். 'நான் அக்காட்சியை எடுப்பதற்காக, இரண்டு வரலாற்றுக் குறிப்புகளை படித்தேன். அதில், ஒரு குறிப்பே வரலாற்றுக்கு சற்று நெருக்கமாக இருப்பதாக எனக்கு பட்டது. அதன் அடிப்படையிலேயே அந்த காட்சியை எடுத்தேன்.'ஆதீனம், அந்த குறிப்பையும் படித்திருந்தால், எந்த குறிப்பு வரலாற்றுக்கு சற்று நெருக்கமாக இருக்கிறது என்பது புரிந்திருக்கும். அத்துடன், ஆதீனம், என்னிடம் இந்த சந்தேகத்தை தனிப்பட்ட முறையில் தொலைபேசி மூலம் கேட்டிருந்தால், நான் அதற்கான விளக்கத்தை அளித்திருப்பேன்...' என, பத்திரிகை யாளர்களை அழைத்து விளக்கம் அளித்தார்,ஏ.பி.என்., ஏ.பி.என்., வெளியிட்ட விளக்கத்தை படித்த ஆதீனம் உடனே, நாகராஜிடம் தன் வருத்தத்தை தெரிவித்தார்.திருவருட்செல்வர் படத்தில், சிவாஜி கணேசனுடன் குட்டி பத்மினி நடித்தார். திரைக்கதையின்படி சிவாஜி, நாட்டின் மன்னர். குட்டி பத்மினியின் தாத்தா தான் மன்னரின் அமைச்சர். மன்னரான சிவாஜி, 'கடவுள் எங்கு இருக்கிறார்; எந்த திசையில் இருக்கிறார்; இப்போது என்ன செய்கிறார்...' என்று, மூன்று கேள்விகளைக் அமைச்சரிடம் கேட்பார். அமைச்சரால் பதில் சொல்ல முடியவில்லை. தனக்கு விளங்கும்படி மறுநாள் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று, அமைச்சருக்கு கட்டளை இட்டார், மன்னர். அமைச்சருக்கு ஒரு வழியும் தெரியவில்லை கலங்கி நிற்கிறார்.அப்போது, அமைச்சரின் பேத்தி, 'நான் சென்று, மன்னரின் கேள்விக்கு பதில் சொல்கிறேன்...' என்கிறாள். அவ்வாறே மன்னனைச் சந்தித்து, பதிலும் அளிப்பாள்.அதில் தெளிவுற்ற மன்னன், அவளிடம், 'நீ சின்னப் பெண்ணே அல்ல. என் சந்தேகம் போக்க வந்த கலைமகளின் வடிவமே...' என்று சொல்லி, அச்சிறுபெண்ணின் காலில் விழவேண்டும். இதுதான் அன்று எடுக்கப்பட வேண்டிய காட்சி. சிவாஜி கணேசன், ஒரு சிறு பெண்ணின் காலில் விழுவது போல் காட்சி இருப்பதால், அவர் அப்படி நடிப்பாரா என, சந்தேகம் எழுந்தது. ஒரு வேளை, காலில் விழுவது போல் நடிக்க முடியாது என்று சொன்னால், அதற்கு தக்கபடி காட்சியை வேறு மாதிரி எடுக்கலாம் என்றும் யோசிக்கப்பட்டது.ஆனால், சிவாஜியிடம் இது பற்றி சொன்னபோது, 'அந்த சிறுபெண்ணின் காலில் விழுவது போலவே காட்சியை எடுங்கள். அப்படி எடுத்தால் தான், மன்னன், கர்வம் நீங்கி, தன் தவறை உணர்வது போல் இருக்கும்...' என்றார்.அடுத்து, சிவாஜிக்கு ஈடு கொடுத்து, இந்த சின்னப் பெண் ஆன, குட்டி பத்மினி நடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. படப்பிடிப்பு ஆரம்பமானது. கொஞ்சமும் பயமின்றி மிகவும் தைரியமாகவும், சிறப்பாகவும் நடித்தார், குட்டி பத்மினி. காட்சி மிகவும் சிறப்பாக அமைந்தது. படப்பிடிப்பு முடிந்ததும், அங்கிருந்த இயக்குனர் உட்பட அனைவரும் குட்டி பத்மினிக்கு கை கொடுத்து, 'சிவாஜிக்கு ஈடு கொடுத்து மிகவும் சிறப்பாக நடித்தாய்...' என்று பாராட்டினர்.அன்று நடந்த படப்பிடிப்பில் அனைவரின் பாராட்டையும் ஒரு சேர வாங்கியதில், குட்டி பத்மினிக்கும் மிகவும் மகிழ்ச்சி.சிவன் புகழ்பாடும் அறுபத்தி மூவரான நாயன்மார்களை போலவே, பெருமாளைப் பாடும் பன்னிரு ஆழ்வார்கள் முக்கியமானவர்கள். அந்த பன்னிரு ஆழ்வார்கள் பாடிய திருமாலின் பெருமைகளில் சிலவற்றை, திருமால் பெருமை என்ற திரைப்படமாக்கி இயக்கினார், ஏ.பி.என்.,கதாகாலட்சேபம் என்பது, ஒருவித சுவாரஸ்யமான கதை சொல்லும் முறை. அந்த முறையை கையாண்டு கோவிலில் ஒரு பாகவதர் கதாகாலட்சேபம் சொல்வது போல் படத்தை ஆரம்பிப்பார். நடிகர் நாகேஷ் தான் கதாகாலட்சேபம் பண்ணும் பாகவதர். மிகப்பிரமாதமாக கதையைச் சொல்வார். அவர் கதையைச் சொல்லச் சொல்ல திரைப்படம் பின்னோக்கிச் செல்லும். படத்தில், தான் நடிக்கும் பாத்திரத்துக்கு ஏற்ப, எப்படி வேண்டுமானலும் நடிப்பார், சிவாஜி. அதில் அவர் சிறிதும் கவுரவம் பார்க்க மாட்டார். தான் ஒரு பெரிய நடிகன் என்ற தோரணையும் அவருக்கு கிடையாது.திருமால் பெருமை படத்தில், சிவாஜி கணேசன் திருமங்கை மன்னனாக நடிப்பார். திருமாலுக்கு கோவில் கட்டும் திருப்பணியை மேற்கொண்டிருப்பார். கோவில் கட்டுவதற்கு போதிய பொருள் இல்லாததால், கொள்ளைக்காரனாக மாறி கொள்ளை அடிப்பார். அவரை சோதனை செய்வதற்காக திருமாலே, மணமகன் போன்று வேடமிட்டு, மகாலட்சுமியுடன் வருவார்.திருமங்கை மன்னான சிவாஜி, அவரிடமுள்ள பொருட்களை எல்லாம் கொள்ளை அடிப்பார். இறுதியாக அவரது காலிலுள்ள மிஞ்சியை கழட்டிக் கொடுக்கச் சொல்வார்.அப்போது, மணமகன் வடிவில் வந்திருக்கும் திருமால், 'மிஞ்சியிருக்கும் அந்த மிஞ்சியையும் நீயே கழட்டிக்கொள்...' என்று சொல்வார். அதன்படியே, திருமங்கை மன்னன் அந்த மிஞ்சியை காலிலிருந்து கழட்டுவார். ஆனால், அதை கழட்ட முடியாது.அந்தக் காட்சியில் சிவாஜி, திருமாலாக நடிக்கும், சிவகுமார் காலின் விரலை அவரது வாயில் வைத்து பல்லால் கடித்து, கழட்ட வேண்டும். சிவகுமார் கால் விரலை கடிப்பது போல், சிவாஜி நடிப்பாரா என்ற சந்தேகம், இயக்குனருக்கு வந்தது.ஒரு வேளை, சிவாஜி, கால் விரலைக் கடிக்க மாட்டேன் என்றால், அவரது கையிலுள்ள ஒரு ஆபரணத்தை கழட்டுவது போல் அக்காட்சியை படம் பிடிக்கலாமென்றும் யோசித்து வைக்கப்பட்டிருந்து.பிறகு இந்த காட்சி எப்படி படமாக்கப்பட்டது? — தொடரும். நன்றி: அல்லயன்ஸ் கம்பெனி.- கார்த்திகேயன்