உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

பா - கேடீ கடை பெஞ்ச் புகழ் அந்தோணிசாமியின் மகன் வழி பேரனுக்கு, முதலாவது பிறந்த நாள். விழாவுக்கு, நண்பர்கள் அனைவரையும் அழைத்திருந்தார்.அழைப்பை ஏற்று, நாங்கள், அவர் வீட்டுக்கு சென்றபோது, அந்தோணிசாமியின் பேரன், தொட்டிலில் துாங்கிக் கொண்டிருந்தான்.வீட்டிலிருந்தவர்கள், எங்களை வரவேற்று, அமர செய்து, விழாவுக்கான வேலைகளில் ஈடுபட்டனர்.அச்சமயம் தொட்டிலில் இருந்த குழந்தை அழ ஆரம்பித்தது. குழந்தையின் அம்மா, சமையலறையில் ஏதோ வேலையில் இருக்க, குழந்தையின் அழுகையை நிறுத்த, தொட்டிலை வேகமாக ஆட்டினார், அந்தோணிசாமி. அழுகை நின்றபாடில்லை.மகனை அழைத்து, குழந்தையின் அழுகையை நிறுத்த சொன்னார். அவரும் வந்து, என்னென்னவோ விளையாட்டு காட்டி, தொட்டிலை ஆட்டிப் பார்த்தும், அழுகையை நிறுத்த முடியவில்லை.'குழந்தையை சமாதானப்படுத்த முடியாதா உங்களால்...' என்று முணங்கியபடி குழந்தையின் அம்மா வர, குழந்தையின் தாத்தாவும், அப்பாவும் தலைமறைவாயினர்.தொட்டிலை மெதுவாக ஆட்டி, ஏதோ கொஞ்சி பேசி, குழந்தையை சமாதானப்படுத்தி, மீண்டும் துாங்க செய்துவிட்டு சென்றார், அதன் அம்மா.'குழந்தையை அழ வைக்கிறதுன்னா, அது அப்பாவால தான் முடியும். ஆனால், அழற குழந்தையை சமாதானப்படுத்தறதுன்னா, அது அம்மாவால தான் முடியும்...' என்றார், அருகிலிருந்த குப்பண்ணா.'ஓய்... நீர் எந்த காலத்துல இருக்கிறீர்... அம்மாவோ, அப்பாவோ அல்லது குடும்பத்தில் உள்ள யார் வேண்டுமானாலும் குழந்தையின் அழுகையை நிறுத்த முடியும்.'அது எப்படி என்றால், குழந்தை அழ ஆரம்பித்ததும், அதை அப்படியே மொபைல் போனில் பதிவு பண்ணிக்கணும். குழந்தை, மீண்டும் அழ ஆரம்பித்த உடனே, இந்த பதிவை போட்டுக் காட்டணும். குழந்தை, 'கப் சிப்'ன்னு அழுகையை நிறுத்திடும்.'அதே மாதிரி, மருந்து பாட்டிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு பொருளை குழந்தை தொடக் கூடாது என்று கருதினால், அந்த பாட்டில் அல்லது பொருளின் மீது, அழற குழந்தை படத்தை ஒட்டி வைக்கணும். அதைப் பார்க்கும் குழந்தைகள், அப்பொருட்களை தொடறதுக்கு தயங்கும்.'ஆஸ்திரேலிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், இதை சோதனை செய்து பார்த்துட்டு சொல்லியிருக்காங்க...' என்றார், லென்ஸ் மாமா.'அடடா... இதுவரை இந்த விஷயம் தெரியாமல் போச்சே. இதோ வரேன்...' என்று, தன் மொபைல் போனை எடுத்து, தொட்டில் அருகே சென்றார், அந்தோணிசாமி.'ஓய்... இப்பத்தான் குழந்தை அழாம சமர்த்தா துாங்கிட்டு இருக்கே... குழந்தையை கிள்ளி விட்டு அழ வைக்கப் போறீரா...' என்று, குப்பண்ணா அதட்டல் போட, அமைதியாக திரும்பி வந்தார், அந்தோணிசாமி.உங்க வீட்டிலும், இதை முயற்சி செய்து பார்க்கலாமே!இப்போதெல்லாம், 50 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும், மனதளவிலும், 'இனி, என்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது...' என்று, நம்மில் பலர், முடிவு செய்து விடுகின்றனர்.ஐம்பது வயதுக்கு பிறகு தான், பலமான, வளமான மூளையோடு நாம் பயணிக்க ஆரம்பிக்கிறோம். பல விஷயங்களில் அனுபவப்பட்டு, தெளிந்து, வாழ்க்கையை புரிதலோடு பார்க்கிற பருவம், இந்த இரண்டாவது, 'இன்னிங்ஸ்' தான்.ஐம்பது வயதுக்கு மேல் தவறாமல் செய்ய வேண்டிய அவசியமான விஷயங்கள்:* புதிய உந்து சக்தியை உருவாக்க, புதிய சவால் ஒன்றை கையிலெடுங்கள்* உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள, கடினமான இலக்கை முன்னிலைப்படுத்தி, அதை நோக்கி நிதானமாக, ஆனால், உறுதியோடு செல்லுங்கள்* எப்போதுமே புதிய விஷயங்களை தேடுங்கள்; புதிய மனிதர்களிடம் பேசுங்கள்* இளைஞர்களோடு பழகுங்கள், 25 வயதிலிருந்த உத்வேகம் அவர்களிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும்* அழகான உடைகளை, ரசனையுடன் தேர்வு செய்து, மிடுக்காக உடுத்துங்கள். 50 வயதில் நரையும், வழுக்கையும் அழகு தான்* உலகின் மிகப்பெரிய சாதனைகளை செய்தவர்கள், நிறைய பேரை ஈர்க்கின்றவர்களில், 50+ வயசுக்காரர்கள் தான் அதிகம்*பெரும்பாலான இளைஞர்களுடன் மற்றும் ஒத்த கருத்து நண்பர்களுடன், புதிய இடங்களுக்கு, புதிய அனுபவங்களைத் தேடி, பயணம் செல்லுங்கள்*  வேறுபட்ட மனிதரோடு  உரையாடுங்கள். திசையறியா ஆர்வமூட்டும் பயணங்கள், நம்மை பள்ளிப் பருவத்திற்கு அழைத்து சென்று, துள்ளிக் குதிக்க வைக்கும்* புதிய நவீன சிந்தனையாளர்களின் புத்தகங்களை தேடி, நிறைய படியுங்கள். உங்கள் மூளைக்கு தீனி போட, நிறைய புதிய விஷயங்களை, தேடி தேடிப் படியுங்கள்* நகைச்சுவைக் கதைகளை படியுங்கள், 'டிவி'யில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை பாருங்கள். சிரித்து பேசுங்கள், பிறர் சிரிக்கப் பேசுங்கள், உங்களைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் நிலையாகும்* விரோதிகளை விலக்குங்கள், பெருமைக் காரர்கள் மற்றும் பொறாமைக்காரர்களை கால விரயம் கருதி ஒதுக்குங்கள்* மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் பேணுங்கள். நடை பயிற்சி, மூச்சுப் பயிற்சி, சிறு சிறு யோகாசனங்கள் தவறாது செய்யுங்கள்* வாரம் ஒருமுறையாவது, உங்களுக்கு இணக்கமானவர்களுடன் ஒன்றாக அமர்ந்து, உண்டு மகிழுங்கள்*  மறந்தும் சாய்வு நாற்காலிவாசிகள் பக்கம் ஒதுங்கி விடாதீர்கள். உங்களை, அவர்கள் பக்கத்திலேயே படுக்க வைத்து விடுவர்* பொது சேவையில் நாட்டம் கொள்ளுங்கள். ஏரி, குளம், துாய்மை, சுற்றுச்சூழல், பசுமை காப்பதில் ஆர்வம் கொள்ளுங்கள்*  யார் மீதும் கோபப்படாதீர்கள்*  முதலில் நம்மை சார்ந்தவர்களுக்கு, பின்னர் அடுத்தவர்களுக்கு மற்றும் உதவி தேவைப்படுவோருக்கு, உங்களால் இயன்ற வகையில் உதவுங்கள். அவர்கள் நன்றியில் உங்களை நீங்களே புதிதாக உணர்வீர்கள்*  எப்போதுமே முதல், 'இன்னிங்சை' விட, இரண்டாவதில் தான், நாம் வாழ்ந்த வாழ்வின் அர்த்தங்களை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.மேற்சொன்ன விஷயங்களை சரியாக செய்தால், 50+ வயசுக்கான ஆரோக்கியம் பற்றி கவலைப்படத் தேவையே இல்லை.மூளையும், மனசும், உடலும் சரியாக இயங்க ஏற்பாடு செய்துவிட்ட பிறகு, ஆரோக்கியத்தில் என்ன பிரச்னை வந்துவிடப் போகிறது!எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !