ரமணீயம் அம்புஜம்!
''கமலா, எல்லாம் ரெடியா? வேன் ரெடியா இருக்கு. இப்போ கிளம்பினா சரியாயிருக்கும்,'' கேட்டபடி உள்ளே வந்தாள், அம்புஜம்.''அம்மா, ரெடி மா. எல்லாம் வேன்ல ஏத்திடலாம்.''''என்ன விசாலம் மாமி, புளியோதரை இன்னிக்கு ரொம்ப நல்லா வந்திருக்கு போலிருக்கே. வாசனை வாசல் வரைக்கும் வருது.''''எப்பவும் போலத்தான் பண்ணினேன் அம்பு; நீதான் பெருசா சொல்ற.''''கமலா, யாரெல்லாம் போறீங்க? நீ உட்பட நான்கு பேர் போதுமில்லையா?''''போதும்மா. நாங்க பார்த்துக்கிறோம்,'' என்றாள், கமலா.''பாட்டி, நானும் அம்மா கூட போகட்டுமா?'' என்றபடி ஓடி வந்து, அம்புஜத்தைக் கட்டிக் கொண்டாள், கமலத்தின் ஆறு வயது மகள்.''நீ, இன்னும் கொஞ்சம் பெரியவளானதும் போகலாம். இப்போ, இங்கே நான், விசாலம் பாட்டி, எல்லாரும் இருக்காங்க; எங்க கூட இரு. 'ஹோம் ஒர்க்' இருந்தா பண்ணிடு, சரியா?''''சரி பாட்டி.''வேனில் சாப்பாடு எல்லாம் ஏற்றி, அவர்கள் கிளம்பிய பின், ஆபீஸ் அறையில் உட்கார்ந்து, அடுத்தடுத்து வரும் நாட்களில் உள்ள, 'ஆர்டர்'களைப் பார்த்துக் கொண்டிருந்தாள், அம்புஜம்.தை, மாசி மாதங்களில் நிறைய, 'ஆர்டர்'கள். அப்பப்பா, இந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு வளர்ச்சி, முன்னேற்றம். 'ரமணீயம்' என்ற, அவள் வீட்டின் பெயரில் கேட்டரிங் சர்வீஸ் சிறிய அளவில் ஆரம்பித்தாள். இன்று, நகரில் நல்ல பெயர் எடுத்த கேட்டரிங் நிறுவனமாக, ரமணீயத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறாள், அம்புஜம்.வீட்டில், தனியாக சிறிய அளவில் சமையல் செய்து கொடுக்க ஆரம்பித்தாள், அம்புஜம். அவளது கைப்பக்குவமும், தொழில் பக்தியும், நேர்மையும் பிடித்துப் போக, அவளைத் தேடி கொஞ்சம் கொஞ்சமாக, பெரிய பெரிய, 'ஆர்டர்'கள் வர ஆரம்பித்தன.எப்படி தனியாய் சமாளிப்பது என, யோசித்துக் கொண்டிருக்கையில், 'ஏதாவது சமையல் வேலை கிடைக்குமா...' எனக் கேட்டு, முதலில் அவளைத் தேடி வந்தவர், விசாலம் மாமி.மாமியின் சமையல் பிடித்து விடவே, தன்னுடனேயே வைத்துக் கொண்டாள், அம்புஜம். மாமிக்கும் உறவென்று யாரும் இல்லை. இருந்த ஒரே மகனும் திருமணம் முடித்து, வெளிநாடு சென்று அங்கேயே தங்கி விட்டான்.இப்படியே ஒவ்வொருவராக வந்து அம்புஜத்திடம் சேர்ந்தனர். கணவனை இழந்து, 1 வயது குழந்தையுடன் வந்த கமலா; வீட்டிற்கு ஒரே பெண், விபத்தில் பெற்றோரை இழந்து, தனியாய் நின்ற ரேவதி; கணவன் இறந்த பின், வாரிசு யாரும் இல்லாததால், இங்கு வந்து சேர்ந்த பரிமளாக்கா என, ஒவ்வொருவரும் வாழ்வில் அடிபட்டவர்கள்.தனி மரமாய் நின்ற அம்புஜத்துடன் இப்போது, 20 பேர் இருக்கின்றனர். அனைவரும் தங்க, மாடியில் நான்கு அறைகளுடன் சேர்த்து, வீட்டைப் பெரிதாகக் கட்டினாள். குறைந்த அளவு சமையல் என்றால் வீட்டிலேயே செய்வதற்கான வசதியையும் செய்து கொண்டாள். கல்யாணம் போன்ற பெரிய, 'ஆர்டர்' என்றால், அங்கேயே சென்று, செய்து கொடுப்பர்.ஐந்து ஆண்டுகளில், தன் வாழ்வில் இப்படி ஒரு மாற்றம் வரும் என, எதிர்பார்க்கவில்லை, அம்புஜம். ஆனால், அர்த்தமுள்ள இந்த வாழ்க்கையால், 50 வயதான அம்புஜம், தனக்கு வயது குறைந்தது போலத்தான் உணர்ந்தாள்.அவளிடம் வந்து சேர்ந்த ஒவ்வொருவரும் உறவுக்கும், பாசத்திற்கும் ஏங்குபவர்களாக இருந்ததால், ஒவ்வொருவரையும் தங்கள் உறவுகளாகவே நினைத்து, வாழத் துவங்கினர். பாட்டி, அக்கா, பெரியம்மா, சித்தி என, எல்லா உறவுகளும் அங்கே இருந்தனர்.ஏதோ யோசனையில் இருந்த அம்புஜம், வாசல் கதவு திறக்கும் சப்தம் கேட்க, எட்டிப் பார்த்தாள். அவளது முதல் தங்கை, விஜயா வந்து கொண்டிருந்தாள். இவள் எதற்கு இப்போது திடீரென வருகிறாள் என குழம்பினாள், அம்புஜம்.''அக்கா...''''வா விஜயா, எப்படியிருக்க. என்ன திடீர்னு?''''உன்னைப் பார்க்கத்தான் வந்தேன். எப்படி இருக்க?''''எனக்கென்ன, நான் நல்லா இருக்கேன்; நீ சொல்லு.''''நம் பவித்ராவுக்குக் கல்யாணம் நிச்சயமாயிருக்கு; அடுத்த மாசம் கல்யாணம்.''''ஓ, அப்படியா... பவித்ரா அவ்வளவு பெரிய பெண் ஆயிட்டாளா! நல்ல விஷயம் தான்.''''ஆமாம், நல்ல இடமா வந்தது. அதான் உடனே முடிச்சுடலாம்ன்னு ஏற்பாடு பண்ணிட்டோம்.''''ரொம்ப சந்தோஷம், விஜயா. கல்யாணம் எந்த மண்டபத்துல, பத்திரிகை எங்கே?'' என கேட்டு, பின் நாக்கைக் கடித்துக் கொண்டாள், அம்புஜம். 'நாமாகப் போய் எதற்கு பத்திரிகையைக் கேட்கணும். ச்சே, சுத்த மண்டு...' என, மனதுக்குள் தன்னையே திட்டிக் கொண்டாள்.''பத்திரிகை... நமக்குள்ள என்னக்கா, 'பார்மாலிட்டீஸ்!' நம் வீட்டுக் கல்யாணத்துக்கு, நீ வரப் போற. இதுக்கு எதுக்கு பத்திரிகை எல்லாம். என் பொண்ணு, உன் பொண்ணு மாதிரி தானே.'''ஆஹா... இவ எதுக்கோ அடி போடறா?' என, மனதுக்குள் எண்ணியபடி உஷாரானாள், அம்புஜம்.''அக்கா, நீ இல்லாம நம் வீட்டு விசேஷம் எது நடந்திருக்கு சொல்லு... உனக்கு என்ன கோபமோ தெரியல, இப்போ நாலஞ்சு வருஷமா, எதுலயும் கலந்துக்கிறதில்ல. யார், யாரையோ வீட்டுக்குள்ள சேர்த்துகிட்டு, ஏன் இப்படியெல்லாம் பண்ற அக்கா... உனக்குன்னு நாங்க இருக்கும் போது, நீ ஏன் இப்படி அனாதை மாதிரி இருக்கணும்?''''நான் அனாதையா இருக்கேன்னு, யார் சொன்னா? என் கூட, எல்லா உறவுகளும் இருக்காங்க. என்னைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம்,'' என்று சொன்ன அம்புஜம், சற்று உஷாரானாள். விஜயாவின் இந்த மாதிரி பேச்சுகளால் ஏற்கனவே நிறைய அடிபட்டு விட்டாள்.''அக்கா, நீ என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது. கல்யாணத்துக்கு, 15 நாள் முன்பே வீட்டுக்கு வந்துடு. நீ இருந்தாத்தான் எனக்கு தெம்பா இருக்கும். என்ன சரியா?''''இல்ல விஜயா, அவ்வளவு நாள் என்னால இங்க வேலையெல்லாம் விட்டுட்டு வர முடியாது. ஏகப்பட்ட, 'ஆர்டர்' இருக்கு. சரி, நீ சாப்பாடுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணிட்டியா?''''ம், எல்லாம் முடிஞ்சுது. மாப்பிள்ளை வீடு பெரிய இடம். அதனால, நல்ல இடமா பார்த்து எல்லாம் சொல்லியாச்சு. சரி, அதெல்லாம் விடு. நீ, எப்ப வர்றேன்னு சொல்லு?''''சாரி விஜயா, என்னால அவ்வளவு நாள், உன் வீட்டுல வந்து இருக்க முடியாது. எந்த மண்டபம்ன்னு சொல், கல்யாணத்துக்கு வேணா வரேன்.''''நீ கல்யாணத்துக்கு வந்தா என்ன, வரலேன்னா என்ன... நான் கிளம்பறேன்,'' என சொல்லி, கோபத்துடன் விடுவிடுவென வெளியேறினாள், விஜயா. பெருமூச்சுடன் நாற்காலியில் சாய்ந்தாள், அம்புஜம். யாரும் மாறவில்லை; இன்னமும் அப்படியேதான் இருக்கின்றனர். தன் வாழ்க்கையில் கடந்து வந்தவைகள், அவளின் நினைவுச் சுழலில், ஒருமுறை வலம் வந்தன.அம்புஜம், வீட்டிற்கு மூத்த பெண். அவளுக்கு அடுத்து விஜயா, பூரணி என, மூன்று பெண்கள். பெரியவள் என்பதால், எப்போதும் அம்புஜத்திடம் தான் எல்லா வேலையும் வாங்குவாள், அம்மா. அம்புஜமும், சலிக்காமல் வீட்டில் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வாள். அதுவும் சமையலில் அவளுக்கு ஆர்வம் அதிகம். ஆனால், விஜயாவும், பூரணியும் அம்புஜம் அளவிற்கு சுறுசுறுப்பு கிடையாது.அம்புஜம், பி.எஸ்சி., முடித்ததும், வீட்டில் வரன் தேட ஆரம்பித்தனர். உடனேயே நல்ல வரன் கிடைக்க, 22 வயதில், ரமணியுடன், அம்புஜத்தின் திருமணம் நடந்தது. ரமணியின் வீட்டிலும், அவனுக்கு இரண்டு தங்கைகள், ஒரு தம்பி, மாமனார், மாமியார் என, பெரிய குடும்பம். அம்புஜம் வருவதற்கு முன்பே, பெரிய தங்கைக்கு திருமணம் முடிந்திருந்தது.அடுத்தடுத்து நான்கு ஆண்டுகளில், அம்புஜத்தின் இரு தங்கைகள் திருமணம். இங்கு, ரமணியின் அடுத்த தங்கை மற்றும் தம்பி என, அனைவர் திருமணமும் முடிந்தது. எல்லாவற்றிற்கும் சிரமம் பாராமல் பாடுபட்டாள், அம்புஜம்.பொறுப்புகள் முடிந்து, சிறிது மூச்சுவிட்டு, தன் வாழ்க்கையைப் பற்றி நினைக்கலாம் என, எண்ணிக் கொண்டிருக்கும்போது, தலையில் இடி விழுந்தது.வேலைக்குப் போகும் போது, 'டூ வீலரில்' சென்று கொண்டிருந்த, ரமணி மீது, லாரி மோதி, பொட்டலமாய் வீடு வந்து சேர்ந்தான். நொறுங்கி விட்டாள், அம்புஜம். ஐந்து ஆண்டு தாம்பத்தியம், நினைவுச் சின்னம் எதுவும் இல்லாமல் அழிந்தது. மெல்ல மெல்ல தன்னைத் தேற்றிக் கொண்டாள், அம்புஜம். ரமணியின் தம்பியும் தனியாக வீடு கட்டி சென்று விட, மகன்களின் பிரிவால் அம்புஜத்தின் மாமனார், மாமியார் ஒருவர் பின் ஒருவராக, உயிர் விட்டனர்.ரமணியின் சுய சம்பாத்தியத்தில் கட்டிய, 'ரமணீயம்' வீடும், வங்கியில் சேர்த்து வைத்திருந்த கொஞ்சம் பணமும் தான், அம்புஜத்திற்கு மிஞ்சியது.பிறந்த வீட்டிலும், அப்பா, அம்மா இருக்கும் வரை, ஏதோ கொஞ்சம் அக்கறை இருந்தது. அப்புறம் அவரவர் வாழ்க்கை என, நாட்கள் ஓடின. வீட்டிலேயே, 'டியூஷன்' எடுத்தாள், அம்புஜம். அதில் வந்த வருமானமும், வங்கியிலிருந்த சேமிப்பின் வட்டியும், அவள் வாழ்க்கையை ஓட்ட உதவின. அம்புஜத்தின் உடன் பிறந்தவர்களும், ரமணியின் உடன்பிறந்தவர்களும், அவரவர் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால், இவளை வந்து அழைத்துச் செல்வர். ஒரு வாரம், 10 நாட்கள் அவர்கள் வீட்டில் தங்கி, சமையல் வேலையிலிருந்து அனைத்தும் கவனித்துக் கொள்வாள், அம்புஜம்.அவர்கள் வந்து கூப்பிடும் போது, 'அக்கா, நீதான் வந்து நடத்திக் கொடுக்கணும்...' என்றும், 'அண்ணி, அண்ணன் இல்லாத குறையை நீங்க தான் தீர்த்து வைக்கணும்...' என்றும், தேனாகப் பேசிக் கூப்பிடுவர். அப்படியே நெகிழ்ந்து போவாள், அம்புஜம்.'என் மேல் இவ்வளவு பாசமா...' என உருகி, மாடாய் உழைப்பாள். ஆனால், ஒருவர் கூட அவளைத் தங்கள் வீட்டில், சாதாரண நாட்களில் இருக்கச் சொல்ல மாட்டார்கள்.விசேஷ நாட்களில் கூட்டிச் சென்று, நன்றாகப் பிழிந்து எடுத்து, வேலை முடிந்ததும், 'எப்ப அக்கா கிளம்பணும்?' என்றும், 'அண்ணி, பாவம் நீங்க இல்லாம, 'டியூஷன்' பசங்க சிரமப்படுவாங்க...' என்றும் சொல்லி, மறைமுகமாக அம்புஜத்தை விரட்டி விடுவர். ஆரம்பத்தில் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, அம்புஜம். ஆனால், நாட்கள் ஆக ஆக, அம்புஜத்திற்கு மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்தது. சம்பளமில்லா வேலைக்காரியாய், அவர்கள் தன்னை உபயோகப்படுத்திக் கொள்கின்றனர் என்று உணர்ந்தபோது, உடலும், மனமும் சோர்ந்து போனது.அம்புஜத்திற்கு உடல்நிலை சரியில்லை என்றால் கூட, யாரும் அவள் வீட்டிற்கு வந்து அவளுடன் தங்கியதில்லை. சாதாரண நாட்களில், என்ன ஏது என்று, விசாரிப்பு கூட இருக்காது. அவர்களுக்கு வேலைக்கு ஆள் தேவை எனும்போது மட்டும், அம்புஜம் தேவைப்பட்டாள்.கணவனின் உடன்பிறந்தவர்கள் தன்னை ஒதுக்கியது கூட, அவளுக்குப் பெரிதாக வலிக்கவில்லை. ஆனால், தன்னுடன் பிறந்தவர்கள் கூட, ரத்த பாசமில்லாமல் இருப்பது, அவளை மிகவும் பாதித்தது. தன்னை, தன் உழைப்பை உபயோகப்படுத்திக் கொண்டவர்களுக்காக வாழ்க்கையில், 10 - 15 ஆண்டுகளைத் தொலைத்திருந்தாள், அம்புஜம்.இனி எதற்காக வாழ வேண்டும் என, யோசிக்க ஆரம்பித்தாள். மனம் வெறுத்து, அடிக்கடி அருகில் இருக்கும் முருகன் கோவிலில் சென்று மணிக்கணக்காய் உட்கார்ந்து விடுவாள். தனக்கென்று யாரும் இல்லாமல் என்ன வாழ்க்கை என்று அம்புஜம் அழாத நாளில்லை.அப்போது தான் எதேச்சையாக இரு பெண்களின் உரையாடலைக் கேட்க நேர்ந்தது. இரு பெண்களும் வேலைக்குச் செல்பவர்கள்.'இரவு வேலை முடித்து, வீட்டிற்கு வந்து எல்லா வேலைகளையும் செய்ய முடியவில்லை. யாராவது வீட்டு சாப்பாடு போல் செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்...' என, பேசிக் கொண்டனர். மனம் தளர்ந்த, அம்புஜத்திற்கு, வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொள்ள வழி இருப்பதாகத் தோன்றியது.மனதில் புதுத் தெம்புடன் நிமிர்ந்தவள், இன்று, 'ரமணீயம் அம்புஜம்' என்றால் தெரியாதவர்களே இல்லை எனும் அளவுக்கு வளர்ந்திருக்கிறாள். உறவென்றும், பாசமென்றும் ஏமாந்தவள், இன்று நம்பிக்கையுடன் வாழ்வை நடத்திக் கொண்டிருக்கிறாள்.அன்னபூரணியாய், அவளின் கைப்பக்குவத்தில் வயிராற சாப்பிட்டவர்களின் மனம் நிறைந்த வாழ்த்துக்களைப் பெற்று, மகிழ்ந்து கொண்டிருக்கிறாள்.''அம்பு, பல்லாவரம் கல்யாணத்துக்கு, நாளைக்குக் காலைலேயே மண்டபத்துக்குப் போகணுமா?'' என்று கேட்டபடியே வந்தாள், விசாலம் மாமி. அந்த குரலால், சட்டென பழைய நினைவுகளில் இருந்து மீண்ட, அம்புஜம், 'ரமணீயம் அம்புஜ'மாக சுறுசுறுப்பானாள். ஸ்ரீவித்யா பசுபதி