விசேஷம் இது வித்தியாசம்: குழந்தை விநாயகர்கள்!
செப்., 7 - விநாயகர் சதுர்த்திஆவணி மாதம், வளர்பிறை சதுர்த்தி திதியில் பிறந்தார், விநாயகர். அவரது பிறந்த நாளையே நாம், விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடுகிறோம். தமிழக கோவில்களில் ஒரு விநாயகர் அல்லது இரட்டை விநாயகர் சன்னிதிகளே இருக்கும்.மத்தியபிரதேச மாநிலம், உஜ்ஜயினியில் இருந்து, 7 கி.மீ., துாரத்திலுள்ள பதேஹாபாத் கிராமத்தில், ஒரே சன்னிதிக்குள் மூன்று வடிவங்களில் விநாயகரைத் தரிசிக்கலாம். இவர்கள் மூவருமே குழந்தை போல் இருப்பதால், சதுர்த்தியன்று தரிசிப்பது விசேஷம்.இவர்களுக்கு சித்தமன் கணேஷ் -- சிந்தாமணி விநாயகர், ஈச்சமன் கணேஷ் மற்றும் சித்தி விநாயக் எனப் பெயர். இத்தகைய அரிய வடிவங்கள், பாரதத்தில் இங்கு மட்டுமே இருக்கிறது.ராமன், சீதை, லட்சுமணன் ஆகியோர் வனவாசம் சென்ற போது, அவர்கள் உஜ்ஜயினி பகுதிக்கும் வந்தனர். அப்போது, சீதைக்கு தாகம் ஏற்பட்டது. லட்சுமணன்ஒரு அம்பை பூமியில் எய்தான். அப்போது, தண்ணீர் பீறிட்டு வந்தது. சீதையின் தாகம் தீர்ந்தது.அன்றைய தினம், மறைந்த தன் தந்தை தசரதரின் திதி நாளாகவும் அமையவே, ராமபிரான் இங்கு திதியும் கொடுத்தார். அப்போது, அவர்கள் கண்களில், இந்த மூன்று விநாயகர்களும் பட்டனர். விநாயகரை தரிசித்த சீதை, இத்தகைய அபூர்வ அமைப்பில் லயித்து, ஒரு கோவில் எழுப்ப ஆசை கொண்டாள். அதன்படி, சிறு கோவிலையும் எழுப்பினாள்.ராமாயண காலத்திலேயே தோன்றி விட்ட இந்தக் கோவில், யுகங்களைக் கடந்தும் நிலைத்து நின்றது. 11 மற்றும் 12ம் நுாற்றாண்டுகளில் இப்பகுதியை ஆண்ட மன்னர்கள், முப்பெரும் விநாயகர்களுக்கும் அழகிய பெரிய கோவில் எழுப்பினர்.அவையும் அழிந்து போக, 250 ஆண்டுகளுக்கு முன், தற்போதிருக்கும் கோவிலைக் கட்டினார், ராணி அகல்யாபாய். இவர்களில் சித்தமன் கணேஷ், கவலைகளை போக்கி, மகிழ்ச்சியை தருகிறார்; ஈச்சமன் கணேஷ், நம் வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்; சித்தி விநாயக், அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும், ஆன்மிக அறிவையும் தருகிறார். இங்கு வரும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேற, ஸ்வஸ்திக் வடிவத்தை தலைகீழாக வரைகின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும், நேராக வரைந்து நன்றி தெரிவிக்கின்றனர். தலைகீழாக வரைவது தங்களுக்குரிய திருஷ்டி, எதிரிகளின் தொல்லை, நோய்கள் ஆகியவற்றை குறிக்கிறது. நேராக வரைவது என்பது, சூரிய ஒளி போன்ற பிரகாசமான வாழ்வை அடைந்ததன் குறியீடு.மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில் இருந்து, ஏப்ரல் 17க்குள் வரும், புதன்கிழமைகளில் சைத்ர மாத திருவிழா இங்கு விசேஷம். இந்நாட்களில் கிச்சடி, அல்வா, ஜிலேபி மற்றும் பால் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படும். விவசாய கண்காட்சியும் நடத்தப்படுகிறது.திருமண நாள் குறித்ததும், முகூர்த்த பட்டோலையை சுவாமி முன் வைத்து, அவரது ஆசி பெறுவது இப்பகுதி மக்களின் வழக்கம்.விமானத்தில் செல்பவர்கள், இந்துார் சென்று, அங்கிருந்து 60 கி.மீ., சென்றால், கோவிலை அடையலாம். ஜோதிர்லிங்க தல யாத்திரை செல்பவர்கள், உஜ்ஜயினி மகாகாளேஸ்வரரை தரிசித்து, 7 கி.மீ., கடந்தால், சித்தமன் கணேஷை தரிசித்து வரலாம்.காலை 5:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை கோவில் திறந்திருக்கும். தி. செல்லப்பா!