விசேஷம் இது வித்தியாசம்: சீடனுக்கு கிடைத்த குருதட்சணை!
பிப் - 5 பீஷ்மாஷ்டமிஅந்தக் காலத்தில், குருகுலங்களில் தான் படிப்பர், மாணவர்கள். சீடர்கள் எனப்படும் இவர்கள், குருவுக்கு வேண்டிய சேவை செய்வர்.சீடர்களுக்கு, தனக்கு தெரிந்த எல்லாக் கலைகளையும் கற்றுத் தருவார், குரு. அவருக்கு, தங்களால் முடிந்த காணிக்கையை கொடுப்பர், சீடர்கள். இதையே, 'குருதட்சணை' என்பர். ஆனால், தலைசிறந்த சீடன் ஒருவனுக்கு, தட்சணை கொடுத்து வாழ்த்தினார், ஒரு குரு. அவர் தான், பிரகஸ்பதி. அவரிடமிருந்து விலைமதிப்பற்ற அந்த தட்சணையை பெற்ற சீடர் தான், பீஷ்மர். இவரை மிக உயர்வாகப் போற்றியிருக்கிறது, மகாபாரதம். அந்த இதிகாசத்தின் முக்கிய பாத்திரம் இவர் தான். பகவான் விஷ்ணுவே அந்த காவியத்தில் இடம் பெற்றிருந்தாலும் கூட, அவருக்கு அந்த காவியத்துடன் சம்பந்தப்பட்டு, விழா ஏதும் நடக்கவில்லை. ஆனால், இன்று வரை, பீஷ்மரின் மறைவு நாளை, 'பீஷ்மாஷ்டமி' என்ற பெயரில், கொண்டாடுகிறது, பாரத தேசம். காரணம், பீஷ்மர் மாபெரும் தியாகி. தந்தையின் சுகவாழ்வுக்காக, தன் சுகங்களை எல்லாம் விட்டுக் கொடுத்தவர். பெற்ற தந்தையை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பும் இக்கால இளைஞர்கள், தன் தந்தைக்காக, திருமணம் செய்து கொள்ளாமல், பிரம்மச்சாரியாகவே வாழ்வைக் கழித்த பீஷ்மரின் வரலாற்றைப் படித்தால், அப்படி செய்ய மாட்டார்கள். பீஷ்மரை, பிரகஸ்பதி என்ற குருவிடம் பயிற்சிக்கு சேர்த்தாள், அவரது தாய் கங்காதேவி. பீஷ்மரை, குருவுக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது.பயிற்சி முடிந்து விடைபெறும் போது, மற்ற சீடர்கள் எல்லாம், குருவுக்கு தங்களால் முடிந்த தட்சணையை அளித்தனர். ஆனால், பீஷ்மரை அழைத்த குரு, 'பீஷ்மா! குரு தட்சணையாக உனக்கு என்ன வேண்டும், சொல்?' என்று கேட்டார். அதாவது, சீடனுக்கு குரு, அன்பளிப்பு தருவதாக சொன்னது, உலகில் எங்கும் நடக்காத புதுமை.சீடன் பீஷ்மரும் தயங்காமல், 'குருவே! எந்தச் சூழலிலும் எனக்கு ஆசை வரவே கூடாது. இதற்கான மனோபலம் பெற எனக்கு அருளுங்கள்...' என்றார். 'பீஷ்மா! உன் இதயம் இரும்பு போல் பலமாக இருக்கும். பெண், மண், பொன் ஆகிய எதுவும் உன்னை அசைத்து விடாது...' என்றார், குரு. இந்த தட்சணை தந்த மனஉறுதியால் தான், தந்தை சந்தனுவுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தார், பீஷ்மர். குருவருள் இருந்தால் திருவருளான தெய்வபலம் தானாக கிடைத்து விடும். இதனால் தான் மாதா, பிதாவுக்கு அடுத்தபடியாக குருவுக்கு முக்கியத்துவம் தந்தனர், நம் முன்னோர். பீஷ்மரின் மறைவுநாளில், பிள்ளை இல்லாத அவருக்கு, இந்த உலகிலுள்ள ஒவ்வொருவரும் அவரை நம் தந்தையாகக் கருதி, தர்ப்பணம் செய்யலாம். தீர்த்தக்கரைகளில் இந்த தர்ப்பணத்தை செய்வதன் மூலம், நம் வாழ்வு தலைசிறந்ததாக அமையும். - தி. செல்லப்பா