உள்ளூர் செய்திகள்

விசேஷம் இது வித்தியாசம் - பயந்து போன படகோட்டி!

ஏப்., 6 - ராமநவமிராமபிரானின், வனவாச வரலாற்றில், சில பகுதிகள் மிக சுவையானவை. அதில் ஒன்று, அவர் கங்கையைக் கடக்க, குகனின் உதவி கிடைத்த போது நடந்த ஒரு சம்பவம்.கவுதம முனிவரின் மனைவி, அகல்யா. விதி வசத்தால், கணவனிடமே சாபம் பெற்று, கல்லாகி விட்டாள்.விஷ்ணுவின் அவதாரமான ராமரின் பாதம், எப்போது கல்லில் படுகிறதோ, அப்போது மீண்டும் சுயவடிவம் பெறுவாள் என்பது, சாப விமோசனம். இதன்படி, அகல்யாவும் ராமரின் திருவடி பட்டு, பெண்ணானாள். இந்த சம்பவத்தை நினைவில் வைத்திருந்தான், ஒரு படகோட்டி. சீதா, லட்சுமணனுடன் கங்கையைக் கடக்க, படகு ஏதாவது கிடைக்குமா என, ராமர் காத்திருந்த போது, காட்டுவாசிகளின் தலைவனான குகன், அவர்களைப் பார்த்தான்.ஒரு படகோட்டியை அழைத்து, 'இவர் தசரத புத்திரர், ராமர். அவரது மனைவி சீதா. தம்பி லட்சுமணன். நானும் இவர்களோடு செல்கிறேன், படகை எடுத்து வா...' என்றான்.ராமன் என்ற பெயரைக் கேட்டதுமே, படகோட்டி பயந்து, 'இவர்களைப் படகில் ஏற்ற வேண்டுமானால்...' என இழுத்தான். 'ராஜகுமாரன் என்பதால், அதிகக்கூலி கறக்கப் பார்க்கிறாயா...' என, படகுக்காரனை கடிந்தான், குகன்.'இல்லை தலைவரே! இவரைப் படகில் ஏற்ற ஒரு நிபந்தனை. நான் இவரது பாதங்களைக் கழுவி, தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும்...' என்றான்.'அதெப்படி முடியும். ஒருவரை கரையில் நிற்க வைத்து காலைக் கழுவிக் கொண்டிருக்க முடியுமா? அவரை அவமானப்படுத்தும் செயல் அல்லவா இது...' என்றான், குகன். 'தலைவரே, இவரது பாதம் பட்டு, ஒரு கல், பெண்ணாகி விட்டதாமே. அதே போல், என் படகிலுள்ள ஒவ்வொரு கட்டையும் பெண்களாகி விட்டால், என் பிழைப்புக்கு என்ன செய்வேன்.'ஏற்கனவே, குறைந்த வருமானத்தில், என் சிறிய குடும்பத்தை நடத்தவே சிரமப்படுகிறேன். இந்த நிலையில், இந்த கட்டைகளும், பெண்களாகி விட்டால், அவர்களையும், நான் பராமரிக்க வேண்டி வருமே...' என, வெகுளியாகச் சொன்னான், படகோட்டி.அப்பாவித்தனமான அந்த பக்தியை ரசித்த ராமர், 'அவன் விருப்பப்படியே என் பாதங்களைக் கழுவட்டும்...' என அனுமதித்தார். அந்த படகோட்டியும், அவ்வாறே செய்த பின் தான், படகில் ஏற்றினான். ஆனால், அந்த தெய்வமகனிடம் கூலி பெற மறுத்து விட்டான்.இன்னொரு சம்பவமும் இனிதானது.வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தை அடைந்தார், ராமர். அவரைப் பார்த்ததில், வால்மீகிக்கு ஏக சந்தோஷம். ராமரிடம், 'இப்படி ஒரு வாய்ப்பை எனக்கு வழங்கிய கைகேயிக்கு, என் சந்தோஷத்தின் ஒரு பகுதியை அளிக்கிறேன்...' என்றார்.ராமன் காட்டுக்குப் போக காரணமான கைகேயியை, அனைவரும் வில்லியாகப் பார்க்க, வால்மீகி மட்டும், அந்த வில்லத்தனத்தால் தான், தனக்கு ராம தரிசனம் கிடைத்தது என மகிழ்ந்திருக்கிறார்.ராமரின் பிறந்தநாளில், இந்த வித்தியாசமான சம்பவங்களை அறிந்ததில், நமக்கும் மகிழ்ச்சி தானே!- தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !