விசேஷம் இது வித்தியாசம்: இன்னொரு அட்சய திரிதியை!
ஆக., 21 - குரு புஷ்யம்குரு புஷ்ய யோகம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அட்சய திரிதியையை விட, அபூர்வமான நிகழ்வு இது. குருவுக்குரிய வியாழக்கிழமையும், பூச நட்சத்திரமும் எப்போது இணைகிறதோ, அந்த நாளே, குரு புஷ்ய யோக நாள். புஷ்யம் என்பது, பூசம் நட்சத்திரத்தின் வடமொழி பெயர். அட்சய திரிதியை ஆண்டுக்கு ஒரு முறையே வரும். குரு புஷ்ய யோகம், ஆண்டின் இரண்டு, மூன்று நாட்களில் வரும். கடந்த ஜூலை 24ல், மாலை 6:12 மணி முதல், ஜூலை 25 மாலை 5:57 மணி வரை, இந்த யோகம் இருந்தது. ஆகஸ்ட் மாதம், 21ம் தேதி, காலை 6:11 மணி முதல் மறுநாள் மதியம் 12:08 மணி வரை, 30 மணி நேரம் இந்த யோகம் வருகிறது. இதையடுத்து, செப்டம்பர் 18ல் மட்டும், காலை, 6:09 முதல் 9:28 மணி வரை, மூன்று மணி நேரம் மட்டும், இந்த யோகம் இருக்கிறது. அட்சய திரிதியை அன்று, தங்கம் வாங்கினால், பல்கிப் பெருகும் என்ற நம்பிக்கை எவ்வாறு உள்ளதோ, அதை விட சிறந்த நாளாக, குரு புஷ்ய யோக நாள் அமைகிறது. குருவுக்குரிய நிறம் மஞ்சள். இதனால், மஞ்சள் நிற தங்கம் வாங்குவது, மிக மிக யோகம். லட்சுமி தாயார், பூசம் நட்சத்திரத்தை தேர்ந்தெடுத்து, அந்த நட்சத்திரத்தில் பிறந்தாள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், குரு புஷ்ய யோக நாளில், தங்கம் வாங்குவது மிக மிக சிறப்பு என, பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு வாங்கும் தங்கம், எதிர்காலத்தில் அவர்களை உச்சத்துக்கு உயர்த்த அடிப்படையாக அமையும் என்கின்றனர். இந்த நாளில் குரு ஸ்தலங்களான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், தென்குடித்திட்டை குரு கோவில், சிவகங்கை மாவட்டம், பட்டமங்கலம் குரு கோவில் உள்ளிட்டவற்றுக்கு சென்று வரலாம். இது தவிர, ஏராளமான குரு தலங்கள் தமிழகத்தில் உள்ளன. முக்கியமாக, இந்நாளில் திருச்செந்துாரில் முருகப் பெருமானையும், சுற்றுப்பிரகாரத்திலுள்ள குருவையும் வணங்குவது மிக மிக நலம் தருவதாக இருக்கும். செந்துார் முருகனை, தேவர்களின் குருவான பிரகஸ்பதியே வழிபட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது. தந்தைக்கே பாடம் சொன்ன குருநாதனான முருகனை, குருவே வழிபட்டதால், இது இரட்டை குரு தலமாக விளங்குகிறது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளை விட, செந்துார் முருகனை வணங்க ஏற்ற நாள், வியாழன் என்பது குறிப்பிடத்தக்கது. குரு புஷ்யம் நாள், செல்வச் செழிப்பை இந்த தேசத்துக்கு தரும் நாள். இந்த நாளில் ஒரு காலத்தில் செய்த வழிபாடுகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விட்டன. பஞ்சாங்கத்தில் மட்டுமே, இப்போது இந்த நாள் இருக்கிறது. இனி வரும் காலங்களில், குரு தலங்களில் குரு புஷ்ய நிகழ்வையும், சிறப்பு பூஜைகளுடன் நடத்த வேண்டும். தி. செல்லப்பா