உள்ளூர் செய்திகள்

விசேஷம் இது வித்தியாசம்: யார் இந்த ஸ்வாகா?

டிச.,3 - திருக்கார்த்திகைகார்த்திகை என்றாலே நெருப்புத் திருவிழா தான். இந்த நாளில் நெருப்பை சிவனாகவும், முருகனாகவும் கருதி வழிபடுவர், பக்தர்கள். முருகனை வளர்த்த பெண்களை கார்த்திகை பெண்கள் என்பர். அவர்கள் ஆறு பேரும், சப்த ரிஷிகள் எனப்படும், ஏழு பேரில் ஆறு பேரின் மனைவியர் ஆவர். அத்திரி முனிவரின் மனைவி, அனுசுயா, காசியபரின் மனைவி, அதிதி, ஜமதக்னியின் மனைவி, ரேணுகா, கவுதமரின் மனைவி, அகல்யா, பரத்வாஜரின் மனைவி, சுசீலா, ஆங்கிரஸ் முனிவரின் மனைவி, ஸ்ரூபா, வசிஷ்டரின் மனைவி, அருந்ததி ஆகியோரில், முதல் ஆறு பேர், கார்த்திகை பெண்கள் என, அழைக்கப்பட்டனர். இவர்கள், தங்கள் கணவன்மார்களின் சாபம் காரணமாக நிதர்த்தினி, அபரஹேந்தி, மேகேந்தி, வர்தகேந்தி, அம்பா மற்றும் துலா என்ற பெயர்களில் கார்த்திகை பெண்களாக அவதரித்தனர். இவர்களுக்கு தன் மைந்தன் முருகனை வளர்க்கும் பொறுப்பை ஒப்படைத்தார், சிவன். கார்த்திகை பெண்கள் வளர்த்ததால், முருகப்பெருமானுக்கு, கார்த்திகேயன் என்ற பெயர் ஏற்பட்டது. சப்தரிஷிகளின் மனைவியரில், வசிஷ்டரின் மனைவி, அருந்ததி மட்டும் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை. இதற்கான காரணம் சுவாரஸ்யமானது. யாகம் நடத்தும்போது புரோகிதர்கள், ஸ்வாகா என, சொல்லி முடிப்பதை கேட்கலாம். இந்த ஸ்வாகா, அக்னி தேவனின் மனைவி. ஸ்வாகாவுக்கு, பெருமாளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இதற்காக அவள் தவம் இருந்தாள். பெருமாள் அவள் முன் தோன்றி, 'இன்னொரு பிறப்பில், நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன். இப்போது நீ, அக்னி தேவனின் மனைவியாக வேண்டும். அதற்கான முயற்சியை செய்...' என, சொல்லி விட்டார். திருமணம் செய்து கொள்ள அக்னி தேவனை தேடி வந்தாள், ஸ்வாகா. அப்போது, சப்த ரிஷிகளின் மனைவியர் மீது காதல் கொண்டிருந்தான், அக்னி தேவன். இந்த தகாத காதலை தடுத்து நிறுத்த முடிவெடுத்தாள், ஸ்வாகா. மிகவும் தந்திரமாக சப்த ரிஷிகளின் மனைவியரின் வடிவத்தை எடுத்து, அக்னி தேவனுடன் கூடினாள். ஆனால், வசிஷ்டரின் மனைவி, அருந்ததியின் வடிவத்தை மட்டும் அவளால் எடுக்க முடியவில்லை. காரணம் அவளது கற்புத்திறன். எனவே தான் கார்த்திகை பெண்கள் ஆறு பேராக உள்ளனர். இதை அறிந்த, ஆறு ரிஷிகளும் தங்கள் மனைவியரை ஒதுக்கி வைத்து விட்டனர். இதனால், வருத்தப்பட்ட பெண்கள், தாங்கள் செய்யாத தவறுக்காக தண்டிக்கப்பட்டதை, சிவபெருமானிடம் முறையிட்டனர். 'எல்லாம் காரண காரியத்துடன் நடந்துள்ளது. என் மகனை வளர்க்கும் பொறுப்பை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். இனி, நீங்கள் கார்த்திகை பெண்கள் என, அழைக்கப்படுவீர்கள். வான மண்டலத்தில் கார்த்திகை என்னும் நட்சத்திரமாக மின்னுவீர்கள்...' என வரமளித்தார், சிவன். தான் உறவு கொண்டது, ஸ்வாகாவிடம் மட்டுமே என்பதை அறிந்த, அக்னி தேவன், சிவனிடம் மன்னிப்பு கேட்டு, அவளையே திருமணம் செய்து கொண்டான். யாகம் செய்யும் போது, யாக குண்டத்தில் போடப்படும், ஆகுதி என்னும் உணவை, தேவர்களிடம் சேர்க்கும் பணி, ஸ்வாகாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் தான் பொருட்களை யாக குண்டத்தில் போடும்போது, 'ஸ்வாகா' என, சொல்கின்றனர். நெருப்புத் திருவிழாவாகிய திருக்கார்த்திகை காலத்தில், ஸ்வாகாவின் வரலாற்றை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி தானே! தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !