உள்ளூர் செய்திகள்

விசேஷம் இது வித்தியாசம்: பீஷ்மர் கோவில்!

ஜன., 26 - பீஷ்மாஷ்டமி'இ ச்சா மிருத்யு' என்பது, தான் நினைக்கும் நாளில் மரணமடைய வேண்டும் என்ற வரம் பெற்றவர், பீஷ்மர். மகாபாரதத்தில் இவர் மிக முக்கியமானவர். சாந்தனு என்ற குருகுல மன்னனுக்கும், கங்காதேவிக்கும் பிறந்தவர், பீஷ்மர். சந்தர்ப்பவசத்தால் தாயை இழக்க, தந்தையின் பாதுகாப்பில் வளர்ந்தார். சத்தியவதி என்ற மீனவப் பெண்ணை, இரண்டாம் திருமணம் செய்ய விரும்பினார் மன்னர், சாந்தனு. ஆனால், மீனவப் பெண்ணின் தந்தை, தன் மகளுக்கு பிறக்கும் மகனுக்கே பட்டம் சூட்ட வேண்டும், மூத்த மகனுக்கு பட்டம் சூட்டக்கூடாது என, நிபந்தனை விதித்தார். தந்தையின் விருப்பத்திற்காக, இந்த நிபந்தனையை ஏற்றார், பீஷ்மர். காலம் முழுக்க பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க சம்மதித்தார். பீஷ்மருக்கு அதுவரை, தேவவிரதன் என்ற பெயரே இருந்தது. கடுமையான இந்த நிபந்தனையை ஏற்றதால், பீஷ்மர் என, பெயர் பெற்றார். பீஷ்மர் என்றால், அதிபயங்கர சபதம் எடுத்தவர் என, பொருள். இந்த மகாசபதம் எடுத்த மகான் பீஷ்மர், குருஷேத்திர யுத்தத்தில், கிருஷ்ணரின் விருப்பப்படி சாய்க்கப்பட்டார். அவர், தன் மரணத்தை எதிர்கொள்ள சூரியனின் வடக்கு நோக்கிய பயண காலம் துவங்கும் தை மாதத்துக்காக காத்திருந்தார். அவர் மரணமடைந்த நாளையே, பீஷ்மாஷ்டமி என்பர். தந்தைக்காக திருமணம் செய்யாத இவருக்கு பிள்ளை இல்லை என்பதால், இந்த உலகத்திலுள்ள அனைவரும் அவருக்கு தர்ப்பணம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது. இந்த தியாகச் செம்மலுக்கு உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடமான திரிவேணி சங்கமத்தின் அருகிலுள்ள, பிரயாக்ராஜ் தாராகஞ்ச் பகுதியில், 200 ஆண்டுகளுக்கு முன் கோவில் எழுப்பப்பட்டது. இந்தக் கோவிலின் மூலவர், பீஷ்மர். அம்பு படுக்கையில் அவர் படுத்தபடி இருக்கும் அற்புதமான சிலை கோவிலில் உள்ளது. இந்த சிலையின் நீளம் 12 அடி. அவரைச் சுற்றிலும், கிருஷ்ணர், பாண்டவர்கள் உள்ளிட்டோரின் சிலைகள் உள்ளன. கோவில், காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும். பீஷ்மர் கோவில் அருகில், நாக் வாசுகி கோவில் உள்ளது. பாம்பு இனத்தின் தலைவனாக விளங்கியது, வாசுகி. பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் மந்தார மலையை மத்தாகக் கொண்டு கடைந்த போது, இந்த பாம்பைத் தான் கயிறாகப் பயன்படுத்தினர். இந்த பாம்பை, நாகம் என்ற பொருளில், 'நாக் வாசுகி' என்கின்றனர், பக்தர்கள். அமிர்தம் கிடைத்து உலகத்தை வாழ வைத்த இந்த பாம்புக்கு மரியாதை செய்யும் விதத்தில் இந்தக் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. பீஷ்மாஷ்டமியன்று, பீஷ்மரை பக்தர்கள் தங்கள் தந்தையாக கருதி தர்ப்பணம் செய்வர். நாமும் அந்த தர்ப்பணத்தில் இணைந்தால், கிருஷ்ணராலேயே போற்றப்பட்ட அந்த பிதாமகரின் ஆசி நமக்கு கிடைக்கும். - தி.செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !