நீர் நிலையும் பொதுஜன புத்தியும்!
காலை நேரம் -வேலைக்கு புறப்பட்டான், சேது.முதல் இரண்டு நாள், அந்த பகுதியில் இருந்த நீர் நிலை ஒன்றை துார் வாருவோருடன் இணைந்து, பிளாஸ்டிக்குகளை பொறுக்கினான்; முள் செடிகளை வெட்டி ஓரம் போட்டான், சேது.இரண்டு ஜே.சி.பி., வாகனங்கள் மண்ணை வாரி தள்ளிக்கொண்டிருந்தது.கரையோர குப்பைகளை அகற்றிய போது, செருப்பை மீறி, கண்ணாடி சில்லு ஒன்று, பாதத்தை பதம் பார்த்தது. உடனே, முதல் உதவி செய்து, 'ஓய்வெடுங்கள் தம்பி...' என்றனர்.சின்னஞ்சிறுவர்கள் கூட அந்த வேலையில் ஈடுபட்டு செய்வதை பார்த்து, இவர்கள் ஆர்வத்துக்கு முன், நம் காயம் பெரிதில்லை என்று, வேலையை தொடர்ந்தான். நாலு பேரோடு சேர்ந்து பொது சேவை செய்வதில் இருக்கும் இன்பம், வேறு எதில் இருக்க முடியும்.கால் காயத்துக்கு சிகிச்சை எடுத்தும், காயம் ஆறவில்லை, வலி இருந்தது. என்றாலும், ஆபீசில் அவனை வரச்சொல்லி வற்புறுத்தினர்.பைக்கை செலுத்தினான்.சுத்தப்படுத்தப் பட்டு சுற்றிலும் வேலி அமைத்த பின், அடுத்த மழைக்கு நீரை தேக்கிக்கொள்ள தயாராக இருந்தது, அந்த நீர் நிலை.அதை பார்த்தவாறே பயணித்தபோது, அவனை கடந்து ஒரு பைக் விரைந்தது. அதில் சென்றவன், ஒரு மூட்டையையும் வைத்திருந்தான். என்னவாக இருக்கும் என்று யோசிக்கும்போதே, இமைக்கும் நேரத்தில், அந்த மூட்டையை சுத்தம் செய்திருந்த நீர் நிலையினுள் வீசிப் போனான்.பதறினான், சேது.அவன் வீசிய வேகத்தில், மூட்டை வாய் திறந்தது. அதிலிருந்த குப்பைகள் வெளியில் அசிங்கமாக காட்சி தந்தது.பொறுப்பில்லாமல் செய்தவன் மீது, கோபம் கோபமாக வந்தது.'ஏய்...' என்று கத்தியபடியே, அவன் வண்டியை பின் தொடர்ந்தான்.மூட்டையை வீசியதை பார்த்து, விரட்டி வருவதை உணர்ந்த அவன், வண்டியின் வேகத்தை அதிகரித்தான். விடாமல் விரட்டி சென்று, மெயின் ரோடு சிக்னலில் மடக்கினான்.''வண்டியை விட்டு இறங்கு,'' என்றான், சேது.''யார் நீ, என்னை ஏன் இறங்க சொல்றே?''''சொன்னதை செய் முட்டாள். படிச்சவனா, வேலைக்கு போறவனா இருக்கே. ஆனால், குப்பையை எங்க போடணும்ன்னு தெரியாதா... உன் வீட்டில் குப்பை கூடை இல்லையா, வெளியில் குப்பை தொட்டி இல்லையா... எதுவும் இல்லைனா, உன் வீட்டு குப்பையை, வீட்டு லாக்கரில் வச்சு பத்திரப்படுத்திக்கணும்... உங்க வீட்டு குப்பை தொட்டி மாதிரி, துார் வாரிய குளத்துல போட்டுட்டு போற...'' என்றான், சேது.''அதைக் கேட்க நீ யாரு, உன் வேலையை பார்த்துகிட்டு போ.''''அப்படி சும்மா போயிட முடியாது. அந்த குளத்துக்காக ரத்தம் சிந்தியவங்களில் நானும் ஒருத்தன். அதே ஏரியாதானே உனக்கும், கொஞ்சமாவது பொறுப்பு வேணாம்.''''என்ன செய்யணுங்கற?''''வீசிய மூட்டையை நீயே எடுத்துகிட்டு போ.''''முடியாது; நான் ஆபீசுக்கு போகணும்.''''மூட்டையை எடுத்துகிட்டு ஆபீசுக்கு போ.''''நான் யார் தெரியுமா?''''சமூக அக்கறை இல்லாத உன்னை யெல்லாம் நான் மனுஷனா கூட மதிக்க மாட்டேன்... நீ எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் சரி, விட மாட்டேன்,'' என்றான், சேது.''நாட்டை சீர்திருத்த வந்த மகானோ?''''சராசரி, ஆனால், குறைந்தபட்ச மனசாட்சியாவது உள்ளவன். வா என்னோடு!''''என்ன பிரச்னை?'' என்றார், டிராபிக் கான்ஸ்டபிள். ''சுத்தம் செய்த குளத்தில், பொறுப்பில்லாமல் குப்பையை கொட்டிட்டு போறான் சார்!''''ஓரமா வாங்க, பைக்கை ஓரமா விடுங்க. சிக்னல் விழுந்தாச்சு, மற்ற வாகனங்கள் போக வழிவிடுங்க... இப்ப சொல்லுங்க, குப்பை விவகாரம்னா அதை இப்படிதான் சிக்னலில் வச்சு பஞ்சாயத்து பேசுவீங்களா?'' என்றார்.''நல்லா கேளுங்க!'' என்றான், சேது.''எனக்கு, ஆபீசுக்கு டயமாச்சு. வாதம் செய்ய நேரம் இல்லை. அந்த குப்பையை எடுக்கணும். இல்லைன்னா அபராதம், சிறை தண்டனைன்னு ஏதும் இருக்கா. அதை நீங்களே அமல் படுத்துவீங்களா... சாயங்காலம் வரும்போது எடுத்துக்கறேன்,'' என்று, அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, பைக் சாவியை பறித்தான், சேது.''எப்படி வேலைக்கு போறேன்னு பார்க்கறேன்!''''இது, அடாவடி... இந்த ஆளை அடிங்க, சார்... என்ன பார்த்துகிட்டு நிக்கறீங்க, நான், 'கம்ப்ளெய்ன்ட்' பண்றேன்!''''நீ என்ன, 'கம்ப்ளெய்ன்ட்' செய்யறது, நான் செய்வேன். ஆளை அடிச்சுட்டு ஓடினான்னு சொல்வேன். வந்து, ஒழுங்கா நீ வீசிய குப்பையை எடுத்து போனால் நல்லது!''சேதுவின் மிரட்டல் எதிரிக்கு கலக்கம் கொடுக்க, ''ஓ.கே., வர்றேன். ஆனால், இதோட விளைவை அனுபவிப்பே,'' என்றான்.குளக்கரை வேலிக்குள் வீசப்பட்ட குப்பை மூட்டையை காட்டி, ''போய், எடுத்து வா,'' என்றான், சேது. அவன் முறைக்க, ''ம்... எடு!'' என்றான். பலர் வேடிக்கை பார்க்க, குப்பை மூட்டையை எடுத்து வந்து, தன் பைக்கில் வைத்தான்.''வழியில எங்கும் வீசிட்டு போகலாம்ன்னு நினைக்காத... பின்னாடியே வருவேன், பொறுப்பா குப்பை வண்டிலதான் போடுட்டு போகணும்,'' என்று, எச்சரித்து அனுப்பினான்.அதற்குள் என்ன என்ன என்று, ஜனங்கள் கூடினர்.அவன் போனதும், 'உங்களை மாதிரி தைரியமான ஆள் தான் சார் தேவை. ஒரு தப்பை பார்த்துகிட்டு சும்மா இருக்காமல், ஆளை துரத்தி பிடிச்சு, போட்ட குப்பையை திரும்ப எடுக்க வச்சிங்க பாருங்க, ஹாட்ஸ் ஆப்...' என்று பாராட்டினர்; மொபைலில் படம் பிடித்தனர்.சேது செய்த காரியம், 'வாட்ஸ் - ஆப்' மற்றும் 'சோஷியல் மீடியா'விலும் வைரலாகியது.மாலை அலுவலகம் விட்டு, வீடு திரும்பியபோது, விசாரிக்க நிறைய பேர் வந்தனர்.''என்னை பாராட்டுவது இருக்கட்டும். இதை முன் மாதிரியா வச்சு, நீங்க ஒவ்வொருவரும் விழிப்புணர்வோடு இருந்தால், நம் பொது வெளியில் சுத்தத்தை காப்பாத்தலாம். உங்களில் ஒவ்வொருவரும் இந்த காரியத்தை செய்தாலும் போதும், அதுதான் மகிழ்ச்சி,'' என்றான்.வீட்டில் அன்றைக்கு ஆதரவும், எதிர்ப்புமாக குரல்கள் எழுந்தன. அதை கண்டுகொள்ளாமல், தான் செய்த காரியத்துக்கு, தனக்கு தானே ஒரு சபாஷ் போட்டுக் கொண்டான்.மறுநாள் அலுவலகம் செல்லும் முன், குளத்தின் ஞாபகம். கொட்டிய குப்பையை திரும்ப வந்து எடுத்துச் சென்றவனை பற்றிய சிந்தனை.அவமானப்பட்டும், அசிங்கப்பட்டும் விட்டான். கோபமாக, பழி வாங்க தேடி வருவானா, வழி மறிப்பானா என்றெல்லாம் சிந்தனை ஓடியது.குளத்தை கடக்கும்போது திகைத்தான். குளத்தில் நேற்று, ஒரு குப்பை மூட்டை தான் வீசப்பட்டிருந்தது. அந்த இடத்தில். இப்போது, சிறிதும் பெரிதுமாக நான்கு குப்பை மூட்டைகள். அங்கும், இங்கும் குப்பை பறந்து கொண்டிருந்தது.அவன் அருகில் ஒரு பைக் வந்து நின்றது. நேற்று குப்பை மூட்டை போட்டவன்.''நல்ல முன்னேற்றம் தான். நான்கு மூட்டை கிடக்குது... சத்தியமா நான் போடலை... உங்க பின்னாடிதான் வர்றேன்... எவனோ என்னை போல அக்கறை இல்லாத, நாலு பேர், விடியும் முன் வந்து கொட்டிட்டு போனாங்களோ என்னமோ... ஆனா, நீங்க சும்மாவா இருப்பீங்க... யாருன்னு கண்டுபிடிச்சு தேடிப்போய் தொலைச்சு கட்டிட மாட்டிங்க,'' என்று, நக்கலாக சொல்லிப் போனான்.பைக்கை ஓரமாக நிறுத்தி, குளத்துக்கு சென்று அங்கிருந்த குப்பை மூட்டைகளை திரட்டி, பெரிய கோணியில் மூட்டையாக கட்டினான். சொந்தக்காசு போட்டாவது காவல்காரர்களை நியமிக்க வேண்டும் என்று நினைத்தபடி, ஊராட்சி குப்பை வாகனம் ஏதாவது தென்படுகிறதா என்று தேடிப் போனான், சேது. படுதலம் சுகுமாரன்