கலாமை சந்தித்தோமே!
ஜனாதிபதியாக, அப்துல்கலாம் இருந்த சமயம், அவரை ஒரு முறையேனும் சந்திக்க வேண்டும் என, நீண்ட நாட்களாக விருப்பம் கொண்டிருந்தாள், 6ம் வகுப்பு படிக்கும், என் மகள். டில்லியில் இருக்கும் அவரது உதவியாளரிடம், அவள் விருப்பத்தை தொலைபேசியில் பேசினேன். அவரும், 'தமிழகத்திற்கு வருகை தரும் சந்தர்ப்பம் வரும்போது, வந்து சந்தியுங்கள்...' என்றார். ஒருநாள், என் மகள், செய்தித்தாளை எடுத்து வந்து, 'திருச்சிக்கு, கலாம் வருகிறார்...' என்று காண்பித்தாள். விழுப்புரத்தில் இருக்கும் நாங்கள், பேருந்தில் செல்லலாம் என்றால் நேரமாகி விடும். அப்போது தான் வாங்கியிருந்த புதிய ஸ்கூட்டியில் செல்ல தீர்மானித்தேன். தடுத்த வீட்டினரை சமாதானப்படுத்தி, தைரியம் கூறி, மகளுடன் திருச்சிக்கு பறந்தேன்.நான்கு மணி நேர இடைவிடாத பயணம். இடையே மழைத் துாறல், முதல் பயண அனுபவம். ஒருவழியாய் குறிப்பிட்ட பள்ளியின் ஆடிட்டோரியத்தை அடைந்தேன். விழா முடிந்து, காரை நோக்கி நடந்து கொண்டிருந்தார், கலாம். கிடைத்த சில நொடி அவகாசத்தில், மூச்சிரைப்புடன் அவரிடம், என் மகளை அறிமுகப்படுத்தி, எங்களை பற்றி கூறினேன்.ஒரு புத்தகத்தில் கையெழுத்திட்டு, அதை பரிசாக தந்தார். 'என்னை, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். அடுத்த முறை கூட வருவேன். நீங்கள் இப்படியெல்லாம், 'ரிஸ்க்' எடுக்க கூடாது...' என்றார்.ஆனால், அவரை அதன்பிறகு சந்திக்கவே முடியவில்லை. இப்போதும், அந்த புத்தகமும், கையெழுத்தும், அவரது இருப்பை உணர்த்திக் கொண்டே இருக்கின்றன.— ப.ஜெயலட்சுமி