உள்ளூர் செய்திகள்

அண்டார்டிகா சென்று வந்தேன்! (1)

பக்கத்து ஊருக்கு போய் வந்ததை கூட சிலர் விலாவாரியாக விவரிக்கும்போது, 'போதும் நிறுத்து, ஏதோ அண்டார்டிகா போய்ட்டு வந்த மாதிரி அளக்காதே...' என்பர்.காரணம், அண்டார்டிகா பயணம் அவ்வளவு எளிதானது அல்ல.ஆர்வம் மட்டும் இருந்தால் போதும், அண்டார்டிகா கண்டத்திற்கே போய் வரலாம் என்பதற்கு சான்றாக விளங்குகிறார், திருவண்ணாமலை மாவட்டம், வேட்டைவலத்தை சொந்த ஊராகக் கொண்டவரும், தற்போது, சென்னை - செங்கல்பட்டு, மகேந்திரா சிட்டியை சேர்ந்த, ரமணன் செல்வம்.அண்டார்டிகா பயண அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புவதாக, அந்துமணியிடம், 'இ - மெயில்' அனுப்பியிருந்தார், வாரமலர் வாசகரான ரமணன். அந்துமணி தான், வாசகர்களின் பிரியராயிற்றே. உடனே, என்னை அனுப்பி, அவர் அனுபவத்தை கேட்டு, எழுதச் சொன்னார்.பனி மண்டலத்திற்கு போய் வந்த அவரது அனுபவம், உண்மையிலேயே ஜில்லிட வைத்தது. ரமணன் யார், எப்படி அவர் அண்டார்டிகா சென்று வந்தார் என்பதை விபரிக்கும் முன், அண்டார்டிகா பற்றிய சில தகவல்களை சொல்லி விட்டால், நீங்களும் அந்த,'த்ரில்' அனுபவத்திற்குள் நுழைய தயாராகி விடுவீர்.அண்டார்ட்டிகா பூமியின் தென்முனையை சூழ்ந்திருக்கும் ஒரு கண்டம்; மிகவும் குளிர்ந்த பகுதி இது. மைனஸ், 70 டிகிரி செல்சியஸ் வரை செல்லும். ஊட்டியில், டிசம்பர் மாதத்தில், மைனஸ், 4 டிகிரி வரை குளிர்ந்தது தான், 'ரிக்கார்ட்!' ஆண்டில் ஆறு மாதங்கள், சூரிய வெளிச்சமே இருக்காது. ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவை விட நிலப்பரப்பில் மிகப்பெரியது. ஆனால், இந்த இடம், உலகில் யாருக்கும் சொந்தம் இல்லை; சொந்தம் கொண்டாடவும் முடியாது. இங்கே, மக்களால் வசிக்கவும் முடியாது.சீல், திமிங்கலம் போன்ற கடல் வாழ் உயிரினங்களும், பனிப்பிரதேசத்திற்கே உரிய பென்குயின்களும் தான் இங்கு வசிக்கின்றன. இவைகளும், தாங்க முடியாத குளிர் காரணமாக, சில காலம் இடம் பெயர்கின்றன.இங்கு, ஆராய்ச்சியாளர்களும், சுற்றுலா பயணிகளும் கப்பலில் சென்று வருகின்றனர். அப்படி சென்று வந்த, ரமணனின் அனுபவத்தை அடுத்த வாரங்களில் பார்க்கலாம்.அழகிய பென்குவின்கள்!சிறுவர் முதல், பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்த ஒரு பறவை, பென்குயின்கள் தான். வெள்ளை நிற வயிற்றை துாக்கியபடி, துடுப்பு போன்ற கைகளை அசைத்து அசைத்து, அவை பனிப்பிரதேசத்தில் நடந்து செல்லும் அழகிற்கு ஈடே கிடையாது.இவற்றை காட்சி ஊடகங்களில் தான் பார்த்திருப்போம். நேரில் பார்க்க வேண்டும் என்றால், அண்டார்டிகா தான் செல்ல வேண்டும். கூட்டம் கூட்டமாக அவைகள் அணிவகுத்து, பனியில் நகர்ந்து அல்லது நடந்து செல்லும் அழகே தனி.பென்குயின்கள் பெரும்பாலும் நீரிலும், அவ்வப்போது நிலத்திலும் வாழும் பறக்காத இயலாத பறவை. எம்பரர் பென்குயின் என்பதில் துவங்கி, தேவதை பென்குயின் வரை, நிறைய வகை உண்டு. 1 அடி முதல், ஒரு ஆள் வரை, உயரம் கொண்டவை. நீரில் லாவகமாக நீந்தும்; கூட்டம் கூட்டமாக வாழும்.இவைகளுக்கு பிடித்த உணவு, இதே கடலில் அபரிமிதமாக கிடைக்கும், 'கிரில்' வகை மீன்கள். இதே கடலில் இருக்கும் திமிங்கலங்களின் உணவாக, பென்குவின்கள் உள்ளன.மனிதர்களிடம் மிக சிநேகம் பாராட்டும் குணம் கொண்டவை. யாரும் நெருங்கி தொந்தரவு தராத வரை, தான் உண்டு, தன் ராஜ நடை உண்டு; மனிதர்களுக்கு நடுவிலும் வந்து போய் கொண்டே இருக்கும்.- தொடரும்எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !