உள்ளூர் செய்திகள்

அஸ்தியின் நிறம் என்ன?

ரயில், ஒரு பெருமூச்சுடன், அந்த கிராமத்தில் நின்றது. நான் கைப்பெட்டி மற்றும் ஒரு அட்டைபெட்டியுடன் கீழே இறங்கினேன். என்னைத் தவிர, வேறு யாரும் இறங்கியதாக தெரியவில்லை. வெளியே வந்தேன். அங்கே, ஒரு ஆட்டோ மட்டுமே நின்றிருந்தது. ஆட்டோக் காரரிடம் முகவரியை தெரிவித்து, ஏறி அமர்ந்தேன். ஆட்டோ ஓடத் துவங்கியது.ரோட்டின், இருபுறமும் பச்சை பசேல் என, வயல்வெளிகள். அறுவடைக்கு தயாராக, தலை குனிந்து நிற்கும் நெற்கதிர்கள். அவசர வேலை இருப்பது போல, 'சில்' காற்று, என்னைத் தழுவி, வேகமாக கடந்து சென்றது; பறவைகள் கூட்டம், 'படபட' வென சிறகடித்து, தொடர்ந்து சென்றது; அதை ரசிக்கும் மன நிலையில், நான் இல்லை. என் எண்ணம், பின் நோக்கிச் சென்றது.காசியில், தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் நான், காலையில், கங்கை நதிக்கரை ஓரம் யாத்ரிகர்கள், தங்களது மத சடங்குகளை செய்வதையும், கங்கையில் மூழ்கி பாவங்களை களைவதையும், பார்த்துக் கொண்டே, தினமும் நடப்பேன். சல சல சத்தத்துடன், கங்கையும் என்னுடன் தொடர்ந்து வருவதாக உணர்வேன்.நம்பிக்கையின் முக்கியத்துவத்தையும், வாழ்வின் அனித்தியத்தையும், அது உணர்த்துவதாக தோன்றும். மெழுகுவர்த்தி, வெளிச்சத்தை கொடுத்து, தன்னையே அழித்துக் கொள்வது போல, மற்றவர்களின் பாவச் சுமைகளை, தன்னுள் சுமந்து செல்லும் கங்கை மீது, எப்போதும் பாசம் உண்டு.ஒரு நாள் மாலை, நதிக்கரை ஓரம் நடந்து செல்லும் போது, ஒரு மண்டப வாசலில், அவரை சந்தித்தேன். கையில் சிறு பையுடன், அந்த பெரியவர் நின்று கொண்டு இருந்தார். வசதி படைத்தவர் போல தோன்றிய அவரை, பரிவுடன் விசாரித்து, என் இல்லத்திற்கு அழைத்து வந்தேன். இரவு உணவுக்கு பின், அவரைப் பற்றி, விசாரிக்க துவங்கினேன். அருகில், என், அப்பா, அம்மா இருந்தனர்.'அய்யா, உங்கள் பெயர் பெரியசாமி என்று கூறினீர்கள். தங்கள் குடும்பத்தை பற்றி கூற முடியுமா?' என்று கேட்டேன்.'தனியாக நின்ற எனக்கு ஆதரவு கொடுத்த உங்களிடம் கூற, என்ன தயக்கம். தமிழகத்தில், ஒரு கிராமத்தை சேர்ந்தவன் நான். எனக்கு, திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கிறான்...' என்று கூறினார் பெரியவர்.'இந்த வயதான காலத்தில், தனியாக வரலாமா, மகனையும் அழைத்து வந்திருக்கலாமே...' என்றேன்.பெரியவர் சிறிது நேரம், தலை குனிந்து இருந்தார். நிமிர்ந்த போது, கண்கள் கலங்கி இருந்தன. நான் பதறிப் போய், 'அய்யா...உங்கள் மனம் வருந்தும்படி பேசியிருந்தால் மன்னித்து விடுங்கள்...' என்றேன்.அவர் சிறிது நேரம் ஒன்றும் பேசவில்லை. பின், 'நீ கேட்டதில், தவறு ஒன்றும் இல்லை. என் மனைவி இறந்து, ஒரு மாதம் தான் ஆகிறது. மகன் வர மறுத்ததால், நான் மட்டும், அவளுடைய அஸ்தியை கரைக்க, இங்கு வந்தேன். அவன் வரவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு. அம்மாவின் அஸ்தியை அவன் அல்லவா கரைக்க வேண்டும்...' என்றார்.'தம்பி... காசிக்கு வந்த பின், என் மனைவி இல்லாத, என் வீட்டிற்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை. எவ்வளவோ சொத்து இருந்த போதும், மன நிம்மதி இல்லாமல், எத்தனை நாட்கள் வாழ முடியும்...'இந்தக் காசியிலேயே, என் வாழ்வு முடிந்து விட வேண்டும், என்பது தான் என் ஆசை. இந்த வீட்டில், சில நாட்கள் தங்கிச் செல்ல, அனுமதி கொடுத்தால், நன்றி உடையவனாவேன்...' என்றார்.நான், என் தந்தையை பார்த்தேன். அவர் கண்களில் சம்மதம் தெரிந்தது. மற்றவர்களுக்கு உதவி செய்வது என்றால், அவருக்கு மகிழ்ச்சி. வாழ்வில் மனிதம் மட்டுமே முக்கியம் என்பார் என் தந்தை.அவர், எங்களுடன் தங்க ஆரம்பித்து, சில நாட்கள் ஆகி விட்டது. அவருடன் இருப்பதில், காரணம் தெரியாத மனநிறைவு எனக்கும் கிடைத்தது. குறுகிய நாட்களில், எங்கள் குடும்பத்தில் ஒருவராக, மாறி விட்டார். நான் தினமும், கங்கை நதி ஓரம், உலவ செல்லும் போது, அவரும் என்னுடன் சேர்ந்து கொள்வார். அப்போது, அவரது ஊர்க்கதைகளை கூறுவார். அவ்வப்போது, மகனிடம் தொலை பேசியில் மூலம் பேசு வார்.மனைவியுடன் வாழ்ந்த நாட்களை, அவர் நினைவு கூரும் போது, கண்களில் மகிழ்ச்சி தெரியும். தன் மகனைப் பற்றி பேசும் போது மட்டும், குரலில் விரக்தி தொனிக்கும். இத்தனை நாட்களாகியும், மகன் தன்னை வந்து பார்க்கவில்லையே என்ற ஏக்கம், அவருக்கு இருந்தது தெரியவந்தது. பேச்சுவாக்கில், கிராமத்தில் உள்ள வீட்டு விலாசம் மற்றும் தொைலபேசி எண்ணை தெரிவித்து, 'தனக்கு ஏதாவது நேர்ந்தால், மகனுக்கு விவரம் தெரிவிக்க வேண்டும்...' என்றார். பெரியசாமி, ஒருநாள் இறந்து போனார். இயற்கை சாவு. எந்த விதமான வியாதியும் இன்றி, அவர் விருப்பப்படி காசியிலேயே இறந்து போனார். மகனுக்கு தகவல் தெரிவித்தும் வரவில்லை. உடலை ஐஸ் பெட்டியில் வைத்து பாதுகாத்து வைத்தோம்.இரண்டாம் நாள், போனில் மகனுடைய மனைவி பேசினாள்... தன் கணவனுக்கு, மேஜர் ஆபரேஷன் முடிந்துள்ளதால், பத்து நாட்களுக்கு காசிக்கு வர இயலாது. அதனால், ஈமக்கடன்களை நீங்களே செய்து விடுங்கள் என்று கூறினாள்.இப்போது பிரச்னை என்னவெனில், இறந்தவருக்கு யார் கொள்ளி போடுவது என்பதுதான். அவரை அநாதையாக விட, எனக்கு மனம் வரவில்லை. எனவே, என் தந்தையின் சம்மதம் பெற்று, நானே தகனம் செய்தேன்.சில நாட்களே பழகி இருந்தாலும், ஒரு நெருங்கிய உறவினரை இழந்த துக்கம், எனக்குள் இருந்தது. தற்போது, அவரின் அஸ்தியை எடுத்துக் கொண்டு, அவரது மகனின் வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறேன். இது குறித்து, அவர் மகனிடம் ஏற்கனவே தகவல் தெரிவித்து விட்டேன். பெற்றவருக்கு, ஈமக்கடன் செய்யாவிட்டாலும், அஸ்தியை, மகனிடம் சேர்ப்பது என் கடமை.ஆட்டோ ஒரு பெரிய வீட்டின் முன் நின்றது. வாசலில், பெரியசாமியின் மகனும், உறவினர்களும் நின்று இருந்தனர். மகனின் முகத்தில், தகப்பனை இழந்த துக்கம் தெரிந்தது. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் அல்லவா! பெரியசாமி, தன் கிராம வீட்டைப்பற்றிக் கூறியது உண்மைதான். அவரது வீடு, மாளிகை போல் இருந்தது. வீட்டைச் சுற்றிலும், கிராம மக்கள் கூட்டம்; எல்லார் கண்களிலும் கண்ணீர்.நான் பெரியசாமி மகன் அருகில் சென்று, என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்; என்னை பார்த்து, எல்லாரும் திகைத்தனர். பெரியசாமி மகன், என்னை உட்காரக் கூடச் சொல்லவில்லை. நான், இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.தந்தை எப்படி இறந்தார் என்ற விவரத்தை மட்டும், கேட்டு அறிந்தார். பின், அவர் என்னிடம் ஏதும் பேசவில்லை. மவுனமாக கண்கலங்கி நின்றார். நான் அஸ்தி கலசத்தை, அங்கிருந்த மேஜை மீது வைத்தேன். அங்கு பெரியசாமியின் படம் வைக்கப்பட்டு, மாலை போடப்பட்டு இருந்தது.அஸ்தியை படத்தின் முன் வைக்கும் போது, அவருடன் இருந்த நாட்கள், நினைவுக்கு வந்து, என்னை அறியாமல், தேம்பினேன். படத்தில், இருந்த பெரியவரின் கண்களில் இருந்த கனிவு, என்னைத் தேற்றுவது போல் இருந்தது. யார் என்னை மதித்தால் என்ன, மதிக்காவிட்டால் என்ன... நான் செய்ய வேண்டிய கடமை முடிந்தது என்ற மனத்திருப்தி ஏற்பட்டது. வீட்டிற்கு வந்திருந்த அனைவரும், அஸ்தியை தொட்டு வணங்கி, கண்ணீர் விட்டனர். சிறிய அழுகைச் சத்தம் கேட்கத் துவங்கியது.துக்க வீட்டில், 'போய் வருகிறேன்' எனக்கூறுவது முறையல்ல என்பதால், சொல்லாமல் கிளம்பி, வெளியே வந்தேன். எல்லாரும் என்னையே பார்த்துக் கொண்டு இருப்பதை உணர்ந்தாலும், எனக்குள் ஒரு வருத்தம் இருந்தது. என்ன மனிதர்கள் இவர்கள்... இவ்வளவு தூரம் வந்தவனை, 'வா' என்று வீட்டிற்குள் அழைக்கவில்லையே... இப்படியுமா மனிதர்கள் இருப்பார்கள்... உள் மனம், 'தக தக' வென எரிந்தது.வெளியே ஆட்டோக்காரர் நின்று கொண்டிருந்தார். ஆட்டோவில் ஏறிக் கொண்டேன்.எனக்குப் பசித்தது. ஆட்டோக்காரரிடம், அருகில் உள்ள ஏதாவது ஒரு ஓட்டலுக்குப் போகச் சொன்னேன்.சாப்பிட்டு முடித்து மீண்டும், ஆட்டோவில் ஏறி, ரயில் நிலையம் வந்ததும் இறங்கி, பணம் கொடுக்க பர்சை எடுத்தேன். அவர் பணம் வாங்க மறுத்து, “அய்யா, நீங்கள் யார், எவர் என்று எனக்குத் தெரியாது. ஆனால், எங்கள் ஊர் பெரியவரின், ஈமக்கடன்களை முடித்து, அஸ்தியைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். நீங்கள், அவர் மகன் போல் ஆகிவிட்டீர்கள். உங்களிடம், நான் பணம் வாங்க மாட்டேன்,” எனக் கூறி, ஆட்டோவை திருப்பிக் கொண்டு போய்விட்டார். நான், திகைத்து நின்றேன்.ரயில் நிலையத்தில், டிக்கெட் வாங்கி, உள்ளே நுழைந்த போது, அங்கு, எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பெரியசாமி மகன் உட்பட, ஊர் மக்கள் அனைவரும் கூடியிருந்தனர். பெரியசாமி மகனின் கையில், இரண்டு பெட்டிகள். அதில் ஒன்று, நான் கொண்டு வந்த, அதே அஸ்தி பெட்டி. நான் திகைத்தேன். ஒரு வேளை, என்னிடமே திருப்பிக் கொடுக்கக் கொண்டு வந்திருக்கிறாரோ!பெரியசாமியின் மகன், என் கைகளைப் பிடித்துக் கொண்டார். “என் உடன்பிறந்த அண்ணனைப் போன்றவர் நீங்கள். உங்களைப் பற்றி அறிந்ததும், முதலில், என் மனம் அதிர்ந்தது. அந்த நிலையில் இருந்து மீளாததால் தான், உங்களுக்கு நன்றி சொல்லவோ, வீட்டிற்குள் அழைக்கவோ தவறிவிட்டேன். “மொழி தெரியாத ஊரில், அவருக்கு அடைக்கலம் கொடுத்து, அவர் இறந்த பின், செய்ய வேண்டிய சடங்குகளை செய்து, அஸ்தியை, வீடு வரை கொண்டு வருவதற்கு, எப்படிப்பட்ட தியாக உணர்வு வேண்டும்.“நான் செய்ய வேண்டிய கடமைகளை, நீங்கள் செய்து, நான் இல்லாத குறையைத் தீர்த்து விட்டீர்கள். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது, எனத் தெரியவில்லை. என் அப்பாவுக்கு ஈமக்கடன் செய்து, என் சகோதரன் ஆகிவிட்டதால், நாம் இருவரும் சேர்ந்து, கங்கையில் அப்பாவின் அஸ்தியைக் கரைக்கலாம் என்று நினைக்கிறேன். அப்பா தங்கியிருந்த உங்கள் வீட்டில், அவர் நடமாடிய இடத்தில், நானும் சில நாட்கள் தங்கியிருக்க வேண்டும் போல் உள்ளது. உங்கள் அனுமதி கிடைக்குமா...” என்று கேட்டார் பெரியசாமி மகன்.நான், அவரை ஆறுதலுடன் அனணத்துக் கொண்டேன். கிராமத்தின் உயிர் நாடியான மனித நேயம் செத்துவிடவில்லை என்பது, மன நிம்மதியை தந்தது.நல்லவேளை... நான் மனதில் நினைத்ததை வெளிப்படையாகச் சொல்லி இருந்தால், என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பர்... மணி, 12:00 அடித்தது. தூரத்தில், மசூதியின் பாங்கு ஒலி கேட்டது. அப்துல் என்கிற நான், உடனே தரையில் மண்டியிட்டேன். எல்லாரும், எனக்குப் பின்னால் அமைதியாக நின்றனர்.நான் பிரார்த்தித்தேன். எனக்காக மட்டும் அல்ல, எல்லாருக்குமாக, இந்த கிராம மக்களுக்காக, நல்ல உள்ளம் படைத்த யாவருக்குமாக! பி.வி.ராஜாமணிவயது: 75.சொந்த ஊர்: மதுரை.கல்வித்தகுதி: எம்.ஏ., (தொலை துார கல்வி - முடிக்கவில்லை.) பணி: தமிழ்நாடு அரசு, நகர் ஊரமைப்புத் துறையில் கண் காணிப்பாளராக பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர். குழந்தைகளுக்கான கவிதை எழுதுவது இவரது பொழுதுபோக்கு. இவரது கவிதைகள், பல்வேறு குழந்தைகளுக்கான இதழ்களில் வெளி வந்துள்ளன.இது, இவரது முதல் சிறுகதை. முதல் சிறுகதையே ஆறுதல் பரிசு பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !