உள்ளூர் செய்திகள்

நானா போனதும்; தானா வந்ததும்! (4)

என் நகைச்சுவை கதைகளை படம் எடுப்பதற்காக, அடிக்கடி எந்தத் தயாரிப்பாளரா வது வந்து, தலை காட்டுவார்.நானும் அவரை தடபுடலாக உபசரித்து, வீட்டம்மாளை ஸ்பெஷலாக சிற்றுண்டி செய்யச் சொல்லி, வந்தவருக்கு மகிழ்ச்சியுடன் வழங்குவது வழக்கம்.தயிர் வடை - அதுவும் காரா பூந்தி, கொத்தமல்லி, முந்திரி, திராட்சை இவை கூடிய அலங்காரத்துடன் பெரிய அளவு தயிர் வடையை, பெரிய தட்டில் வைத்து, வந்தவருக்கு பிரமிப்பும், மகிழ்ச்சியும் ஊட்டுவது என் வழக்கமாக இருந்தது.ஆனால், பெண் பார்த்து விட்டு, 'பஜ்ஜி, சொஜ்ஜி நன்றாயிருந்தது...' என்று புகழ்ந்து விட்டு ஓடி விடுகிறவர்களை போல, வருகிற தயாரிப்பாளரும், தயிர் வடையைச் சாப்பிட்டு, அதை புகழ்ந்து விட்டு, மறைந்து விடுவர்.பிற்காலத்தில் தயிர் வடை தந்தால், ராசியில்லையோ என்னவோ என்ற எண்ணத்தில், அதை நிறுத்தி விட்டேன்; காபி அல்லது டீ மட்டுமே தருவேன்.ஆனாலும், வருகிறவர்கள் அடிக்கடி வந்து கொண்டுதான் இருப்பர்.ஒரு பார்ட்டி, கோயமுத்தூரிலிருந்து வந்திருந்தது. ஒரு கிழவரும், நாலு உதவியாட்களுமாக அனைவரும் ஒரே ஆட்டோவில் வந்து இறங்கினர். அந்தக் கிழவர்தான் படத் தயாரிப்பாளர். என் ஹாஸ்ய நாவல் ஒன்றைப் படமாக்கத் துடித்தார். அவரே கதாநாயகனாக நடிக்க விரும்புவதாக தெரிவித்தார். (வயசான கதாநாயகன்!) அவரே தயாரிப்பாளர், அவரே முதலாளி, அவரே நடிப்பு, அவரே துடிப்பு.அவருடன் வந்திருந்த இளைஞன்தான் டைரக்டர். அவனுடைய முதல் படமாம் அது. ஆகவே, எப்படியும் இந்தப் படத்தை வெற்றிகரமாக வெளிக் கொண்டு வருவதில் தீவிரம் காட்டினான்.முதலாளியிடம் பண விஷயம் பேசப்பட்டது. அட்வான்சாக, 5,000 ரூபாய் தருவதாக, முதலாளி, 'ஆன் தி ஸ்பாட்' செக் எழுதினார்.நான் சற்று பிகு காட்டினேன்... 'முதலில் படமெடுங்கள்; பிறகு பார்த்துக் கொள்ளலாம்...' என்றேன். இதை நான் கூறியவுடன், அந்த இளம் டைரக்டர், முதலாளியான கிழவரை தரதரவென்று கையைப் பிடித்து இழுத்து, வெளியே மறைவிடத்துக்குப் போனான்.அவரை, அவன் கன்னாபின்னாவென்று தெலுங்கில் திட்டுவது எனக்குக் கேட்டது. ஓரிரு நிமிடம் கழித்து அவரைக் கைப்பிடித்துக் குற்றவாளி போல அழைத்து வந்து என் முன் அமர்த்தினான்.என்னை சமாதானம் செய்தான்... 'சார்... நீங்க தப்பா நினைக்காதீங்க. இவருக்கு பைனான்ஸ் பண்ணத் தெரியுமே தவிர, மதிப்புக்குரியவர்களிடம் எப்படி பேசுவது என்பது தெரியாது. உங்களுடைய மதிப்பு இவருக்குத் தெரியாதது இவரது முட்டாள் தனத்தையே காட்டுகிறது. அதற்குத்தான், அவரை அந்தப் பக்கமாக அழைத்து போய் திட்டினேன்.உங்களைப் போன்றவர்கள், எங்களை பேச உள்ளே விட்டதே நாங்கள் செய்த அதிர்ஷ்டம். அப்படியிருக்க, வெறும், 5,000 ரூபாயை உங்களுக்குத் தர இவருக்கு எப்படி துணிச்சல் வந்தது? உங்களோடு ஒரு வார்த்தை பேச, 5,000 ரூபாய் தர வேண்டும். அப்படிப்பட்ட உயர்ந்த எழுத்தாளர் நீங்கள்...' என்றான்.நான் ஐஸ் கட்டியாய் உறைந்து போனேன்; ஆனால், அந்த இளைஞன் விடவில்லை. 'பத்தாயிரம் ரூபாயாவது கொடுங்கள் என்று அவருக்கு எடுத்துச் சொன்னேன்...' என்று கூறியவாறு, பத்தாயிரம் ரூபாய்க்கான செக்கை கிழவரிடமிருந்து வாங்கி, மரியாதையாக நீட்டினான்.இந்த நிகழ்ச்சி நடந்து எத்தனையோ வருடங்கள் ஆன பிறகும், அவர், படம் எடுக்கவில்லை. விசாரித்ததில், அந்த டைரக்டர், அவருக்கு பெண்கள் ஆசை காட்டி, ஒரு ஓட்டலில் தங்க வைத்து, விபசார கேசில் போலீசில் பிடித்துக் கொடுத்து விட்டான் எனும் தகவல் தெரிந்தது.உண்மையோ, பொய்யோ, அந்தத் தயாரிப்பாளர் என்னிடம் அப்புறம் வரவேயில்லை.எனக்கு அவர்கள் தந்த, பத்தாயிரம் ரூபாய் ஓர் அனாமத்து வரவு. பல வருஷங்களாகியும் மனதை உறுத்திக் கொண்டேயிருந்தது.இந்த மாதிரி அனாமத்துப் பணங்களை உண்டியில் சில பேர் போட்டு விடுவர் அல்லது ஏதாவது டிரஸ்டுக்கு (அப்புசாமி - சீதாப்பாட்டி நகைச்சுவை டிரஸ்ட் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன். ஹி... ஹி...) தந்து விடுவர்.என் விஷயத்தில் அந்த பத்தாயிரம் ரூபாய் வேறு வகையில் போய் விட்டது. வேறொரு வேண்டப்பட்ட ஆசாமி, வீடு கட்டுவதற்காக, 50 ஆயிரம் ரூபாய் கேட்டார்; நான் உதவினேன். பல வருஷங்களாகியும் இன்னும் வசூலாகவில்லை; ஆகவும் ஆகாது என்று தோன்றுகிறது. நான் தெரிந்து கொண்டது இதுதான்...நமக்கு நியாயமாக கிடைக்கக் கூடிய பணத்தைத் தவிர, வேறு பணம் வந்து ஆசை காட்டினாலும், அதற்கு நாம் மயங்கக் கூடாது. அப்படியே கிடைத்து விட்டாலும், அதை, தர்மத்துக்கு கொடுத்து விட வேண்டும்.***என் நண்பரின் மகள் திருமணத்துக்காக, திருத்துறைப்பூண்டி சென்றிருந்தேன். அவர், பாதி பகுத்தறிவுவாதி; மீதி ஆஸ்திகர். விபூதி இட்டுக் கொள்ள மாட்டார்; ஆனால், பழனி கோவிலுக்கு போய் வருவார்.ஆகவே, திருமணத்தன்று சடங்குகள், இரண்டு விதமாகவும் நடந்தன. தாலி கட்டுதல், அட்சதை தூவுதல், குத்து விளக்கு, ஆரத்தி, மொய் எழுதுதல், பாத பூஜை, சட்டிகளுக்கு அலங்காரம், கோலம் இவைகளெல்லாம் குறைவில்லாமல் இடம்பெற்றிருந்தன.திருமண விழாவின் ஒரு பகுதியாக பிரமுகர்கள் மணமக்களை வாழ்த்தி பேசுவதும் நடைபெற்றது. நண்பருக்கு வேண்டிய பகுத்தறிவு கழகத்தை சேர்ந்த ஒரு பிரமுகர், மணமக்களை வாழ்த்த வந்தார்.அக்கறையாக மணமகளின் பெயரை கேட்டுக் கொண்டார்; சாவித்திரி என்பது மணமகளின் பெயர்.பிரமுகர் உற்சாகமாக தன் வாழ்த்தைத் தெரிவிக்கத் துவங்கினார்...'பேரன்புமிக்க பெரியோர்களே...' என்று ஆரம்பித்தார். 'உங்களுக்கெல்லாம் ஒரு புராணக் கதை தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். சாவித்திரி என்றொரு ராஜகுமாரி இருந்தாள். அவள் கணவனின் பெயர் சத்தியவான். அவன் திடீரென்று இறந்து போய் விட்டான். அவன் உயிரை எடுத்து போக எமதர்மன் வந்தான். எமனிடம் தன் கணவனின் உயிருக்காக மன்றாடினாள் சாவித்திரி. அவன் கூடவே சென்று, அழுது புலம்பி, கணவனின் உயிரைத் தரும்படி மன்றாடினாள். எமலோகத்துக்கே தொடர்ந்தாள். கடைசியில், எமனும் அவள் தொந்தரவு பொறுக்க முடியாமல், 'உயிரையெல்லாம் தர முடியாது; ஏதாவது வரம் வேண்டுமானால் கேள்...' என்றான்.'என் பேரப் பிள்ளைகளுடன், என் மாமனார் சந்தோஷமாக இருக்க வேண்டும்...' என்று, சாமர்த்தியமாக வரம் கேட்டாள் சாவித்திரி; வரத்தை கொடுத்து விட்டான் எமன். பிறகு தான், எமனுக்கு, சாவித்திரி கெட்டிக்காரத்தனமாக, தனக்கு வேண்டியதை பெற்று விட்டாள் என்று தெரிந்தது. அவள் கணவன் உயிரோடு இருந்தால்தானே பேரன் ஏற்படுவான். ஆகவே, வேறு வழி இல்லாமல் சாவித்திரிக்கு அவளது கணவனின் உயிரை கொடுத்து விட்டான்!இந்தக் கதையைச் சொன்னதோடு, பிரமுகர், தன் பேச்சை நிறுத்திக் கொண்டிருக்கலாம். அவர் தொடர்ந்தார்...'கதையைக் கேட்டீங்களா... புராண சாவித்திரி மாதிரியெல்லாம் நம்ம சாவித்திரி செய்ய மாட்டாள். நாம், பகுத்தறிவு பாசறையைச் சேர்ந்தவர்கள். நம்ம சாவித்திரியின் கணவன் செத்தால், எமனிடமெல்லாம் போய் கெஞ்ச மாட்டாள். ஏனென்றால், நம்ம சாவித்திரி பகுத்தறிவுவாதி...' என்று சொல்லி முடித்து, கைத் தட்டலும் பெற்று, போய் விட்டார்.அதிர்ச்சியடைந்தவன் நான் ஒருத்தன் தான் போலிருக்கிறது. பகுத்தறிவு பிரமுகர் எந்த மேடையில், எப்படி பேசுவது என்பதையே மறந்து, 'நம்ம சாவித்திரியின் கணவன் செத்தால், அவள் அப்படியெல்லாம் எமனிடம் கெஞ்ச மாட்டாள்...' என்று சொன்னது, எவ்வளவு அமங்கலமான வார்த்தைகள்.ஆனால், கல்யாண வீட்டில் அதை யாருமே கண்டு கொள்ளவில்லை. மைக்கில் யாராவது பேசி முடித்தால், கை தட்ட வேண்டும் என்பது ஒரு சடங்கு போல, கையைத் தட்டினர்.இதில் என்ன கொடுமை என்றால், மணமகள் சாவித்திரியின் முகத்திலும் பரம சந்தோஷம்!— தொடரும்.பாக்கியம் ராமசாமி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !