உள்ளூர் செய்திகள்

எது நம்பிக்கை!

நம்பிக்கை! இதன் வலிமையை, வர்ணிக்க முடியாது. அதேசமயம், நம்பக் கூடாதவர்களை நம்புவதும், நம்ப வேண்டியவர்களை நம்பாமல் இருப்பதும், தீராத இன்னல்களை தரும். துாய்மையான நம்பிக்கையை வெளிப்படுத்தும் கதை இது:மாளவ தேசம், சந்திர வம்சத்தில் தோன்றியவர், சத்திய கீர்த்தி எனும் மன்னர். வீரம், படை பலம், நிர்வாகம் எனும் பலவற்றிலும் திறமைசாலியாக இருந்தார்; அன்பு-, அடக்கம் மற்றும் -சிவ பக்தியிலும் தலைசிறந்து விளங்கினார். தினமும் அதிகாலையில் நீராடி, அனுஷ்டானங்களை முடித்து, சிவ பூஜை முடித்த பின், அன்றாட அரசாங்க வேலைகளை கவனிப்பார்.ஒருநாள்... வழக்கப்படி, வழிபாட்டை முடித்து, வெளியே வந்தார், மன்னர்.'புகழ்பெற்ற மன்னா... அறியாமையால், தீவினைகளை செய்த பெண்ணான நான், பிரம்ம ராட்ஷசத்தால் பீடிக்கப்பட்டு, கழுத்தில் சுருக்கு இடப்பட்டு அலைக்கழிக்கப்படுகிறேன்... நல்லவனான நீ, இத்துயரில் இருந்து என்னை காப்பாற்று...' என, அசரீரி குரல் ஒன்று, வேண்டி அழுதது.மன்னர் நடுங்கினார்; தன் அருகில் இருந்த குருவான, வேதசர்மாவிடம், 'குருநாதா... இவளுக்கு உண்டான துயரம் யாது... சிவபெருமான் திருவருளால், இவள் துயரம் முழுதும் யான் போக்குவேன்...' எனக் கூறினார்.'மன்னா... இவளைப் பற்றிய விபரங்களை அறியாமல் பேசி விட்டாயே... 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்'- என்பதற்கு, இவளே உதாரணம்.'போன பிறவியில், கணவனோடு நன்றாக வாழ்ந்து கொண்டிருந்தவள், அவனை மேலும் வசப்படுத்தும் எண்ணத்தில், வசிய மருந்து வைத்தாள். அது அதிகமாக போய், இறந்து போனான், கணவன். தீய குணங்களின் வசப்பட்டவள், மனம் போனபடி போனாள். விளைவு... பிரம்ம ராட்ஷசத்தால் பீடிக்கப்பட்டாள்.'இவள் அனுபவிக்க வேண்டிய துயரம், மூன்றில் ஒரு பங்கு தான் முடிந்திருக்கிறது. இந்த விபரங்கள் எதையுமே அறியாமல், இவளை காப்பாற்றுகிறேன் என்று சொல்லி விட்டாயே...' என்று வருந்தினார், குருநாதர்.மன்னர் திகைத்தாலும், 'குருநாதா... அவள் அனுபவிக்க வேண்டிய துயரங்கள், இன்னும் நிறைய இருக்கலாம்; இருந்தாலும், ஒரு சிறுதுளி நெருப்பு, ஏராளமான விறகு குவியல்களை எரிப்பதை போல, இவளுடைய பாவ குவியல்களை நீக்கும் வழியை, நீங்கள் தான் கூறி, அருள வேண்டும்...' என, வேண்டினார்.'மன்னா... உன் வார்த்தைகள், என்னை மகிழ்வுறச் செய்கின்றன. விதி என்று இருந்தால், விதிவிலக்கு என்பதும் உண்டல்லவா... அதுபோல, அவள் அனுபவிக்க வேண்டிய துயரங்கள் மீதியிருந்தாலும், அவற்றை நீக்கும் வழியைச் சொல்கிறேன், கவலையை விடு...'கும்பகோணம் எனும் திருத்தலத்திற்கு செல். அங்கே, காவிரியில் மூன்று நாட்கள் நீராடி, கும்பேசுவரரை பக்தியுடன் வழிபடு... அதன் பலனை, இவளுக்கு அளி... இவள் துயரம் விலகும்...' என்றார்.குருநாதர் சொன்னபடியே, கும்பகோணம் சென்று, அனைத்தையும் செய்து முடித்தார், மன்னர். தான் செய்த நற்கர்மங்களின் பலனை, பிரம்ம ராட்ஷசம் பிடித்த பெண்ணுக்கு அளித்தார். அதன் பலனாக, அப்பெண்ணும் நற்கதி அடைந்தாள்.நற்குருவின் செயல்கள், அவற்றை செய்ய வேண்டிய சீடனின் கடமை, செய்யும் நற்செயல்களின் பலனை அடுத்தவருக்கு அளித்து, அவர்கள் தீவினையை தீர்ப்பது- என, பலவற்றையும் விவரிக்கும் கதை இது.பி. என். பரசுராமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !