நான் ஏன் பிறந்தேன்? - எம்.ஜி.ஆர்., (17)
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரை தொடர் - ஜன 17, 1917 - 2017வாத்தியாரிடம், நம்மாழ்வார், 'எனக்கு படத்தில் வேடம் வேண்டும்; இல்லையென்றால், இனி, இந்தப் பக்கமே வரமாட்டேன்...' என்று, உரிமைக் குரல் எழுப்பினார்.அவரை பொறுத்தவரை, அது நியாயந்தான்; தன் வாழ்நாள் முழுவதும் வாத்தியார் மற்றும் அவர் மகனோடு நடித்து வாழ்க்கையை கழித்தவர். சினிமாவில் வேடம் இல்லை என்றால் எப்படி... அவர் உள்ளம் வேதனைப்படுவதில் நியாயம் இருக்கிறது தானே!எனக்கு தரவிருந்த நண்பன் வேடத்தை, அவருக்கு கொடுத்து விடலாம் என்று முடிவு செய்து, அவ்வேடத்தை அவருக்கே தந்து விட்டனர்.அவருடைய உரிமைக் குரல், நியாயத்தின் அடிப்படையில் வெற்றி பெற்றது; ஆனால், என் வேதனைக்குரல் எவ்வளவு ஒலித்தும், தருமம், எனக்கு எந்த உதவியும் செய்யவில்லையே!எனக்கு என்ன வேடம் என்பதே சொல்ல முடியாதிருந்து, பின், இன்ஸ்பெக்டர் வேடம் கொடுக்கப்பட்டது. ஏற்றுக் கொள்வதா, வேண்டாமா என்று முடிவு செய்யும் முன், தாயாரிடம் கேட்போம் என்ற முடிவுக்கு வந்தோம், நானும், என் அண்ணனும்!மறுநாள் வீட்டுக்கு வந்து, என் அன்னையிடம் சொன்ன போது, அவர் அதிர்ச்சி அடையாமல், 'இதப்பத்திக் கேட்கவா வந்தீங்க... இதைக் கூடவா உங்களால முடிவு செய்ய முடியலே... சே சே... தானே சிந்தித்து முடிவு செய்யக்கூடிய முறையில உங்கள வளர்க்காதது என் குற்றம் தான்...' என்றார்.எனக்கு அவர் என்ன சொல்கிறார் என்றே புரியவில்லை.'பாய்ஸ் கம்பெனியில இருந்திருந்தா, ரவுடி வேஷத்தோட சரி, நாலு பேரைத் தெரிஞ்சுருக்கவோ, தொழில்ல முன்னேறவோ முடியாது; வெளி உலகமும் எப்படின்னு தெரியப் போறதில்லை!'அதைவிட, மரியாதையும், மதிப்பும் தருகிற இவங்க தான் சரி. கிடைச்ச வேஷத்தை அக்கறையோட செய்; இதெல்லாம் நாம திட்டம் போட்டு, நம்ம ஆற்றலினாலே நடத்தறோம்ன்னு எண்ணாதீங்க... ஏதோ ஒண்ணு, எப்படியோ நடந்தது; அவ்வளவு தான்...' என்றார்.இன்ஸ்பெக்டர் வேடத்தை ஏற்று நடித்தேன்.என்.எஸ்.கே., - எம்.வி.மணியைப் பற்றி ஏதாவது சொல்வதென்றால், அவரைப் போலவே நடித்துக் காட்டுவார்.'பதிபக்தி' நாடகங்களில், எம்.வி.மணி வில்லனாக நடித்த காட்சிகளைப் பற்றி குறிப்பிட்டு, 'தண்டனை பெற்ற வில்லன், தன் தவறுகளை எண்ணி, கண்ணீர் சிந்தி கதறும் காட்சியில், எல்லார் உள்ளத்தையும் உலுக்கி விடுவார், மணி...' என்றெல்லாம் கூறி, அவரை புகழ்ந்தபடி இருப்பார், என்.எஸ்.கே.,யாராவது நாடகப் பாணியில், சாமர்த்தியமாகப் பேசினால் போதும்... 'இவரு பெரிய எம்.வி.மணின்னு நெனப்பு; வசனம் பேசறாரு...' என்று கேலி செய்வார்.இந்தளவு நெருங்கிய நண்பர்களான இவ்விருவருக்குள், கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது தான், எத்தனை நெருக்கமான நண்பர்களாக இருந்தாலும், கொள்கை வேறுபாடு ஏற்பட்டு விடுமாயின், அது, எந்த எல்லைக்கும் சென்று விடும் என்பதை, அன்று தான் நேரில் கண்டேன்.எங்கள் சாப்பாட்டுக்காக, ஒவ்வொருவருடைய சம்பளத்தில் இருந்தும், மாதந்தோறும் ஒரு தொகையைப் பிடித்து, அதை சமையற்காரரிடம் கொடுத்து விடுவர்.அவர், எங்கள் அனைவருக்கும் காலை, பகல், மாலை மற்றும் இரவு உணவை தயார் செய்து கொடுப்பர்.சமையற்காரர்கள், பிராமணர்களாக இருந்த தோடு, சில பிராமணர்கள், அக்கம்பெனியில், நடிகர்களாகவும், கலைத்துறையில் மற்ற பணிகளை செய்து வந்ததாலும் எல்லாருக்கும் சைவ உணவையே தயார் செய்து கொடுத்தனர்.பிராமண நண்பர்கள் மட்டும் சமையல்கட்டிற்கு அருகில் இருந்த அறைக்குள்ளும், மற்றவர்கள் வெளியே தாழ்வாரத்திலும் சாப்பிடுவது வழக்கம்.எங்களுக்கு இப்பாகுபாடு சிறிதும் பிடிக்க வில்லை. இந்நிலைமையை, யார் முன்னின்று தடுப்பது என்றும் தெரியவில்லை.இதைப் பற்றி, எம்.வி.மணி அய்யரிடமே, 'நீங்களும், நாங்களும் சமமாகத் தான், சாப்பாட்டிற்குப் பணம் கொடுக்கிறோம்; அப்படியிருந்தும் ஏன் இந்த பாகுபாடு...' என்று கேலியாக கேட்டார், என்.எஸ்.கே.,'அப்படி ஒரு பழக்கத்தை ஏற்படுத்தி விட்டோம்; என்ன செய்வது...' என்றார் மணி.'அந்தப் பழக்கத்தை நாம தானே கொண்டாந்தோம்; நாமே மாத்திடலாமே...' என்றார், என்.எஸ்.கே.,'அதெப்படி முடியும்... இதெல்லாம் நாமா கொண்டாந்தோம்... இதற்கு முன் இருந்தவங்கள்ல இதுக்கு பதில் சொல்லணும்...''அவங்க செய்த காரியத்துக்கு அவங்க பதில் சொல்லணும்; நியாயம். ஆனா, அனுபவிக்கிறது நாமாச்சே! அதனால, இதுக்கு வழி செய்ய வேண்டியதும், நம்ம பொறுப்பு தானே...' என்று என்.எஸ்.கே., சொன்னதும், 'இதெல்லாம் விதி; அதுக்கென்ன செய்யறது...''இதையும் விதின்னு சொன்னோம்ன்னா, இனிமே நடக்கப் போறதையும் விதின்னு எடுத்துக்க வேண்டியது தான்...' என்றார், என்.எஸ்.கே.,'ஓஹோ... இங்கேயும் சுய மரியாதை பிரசாரம் செய்யப் போறியா...' என்றார், மணி.'பிரசாரம் செய்றதுக்கு இந்த குறுகிய இடத்தைத் தானா தேர்ந்தெடுக்கணும்...''அனாவசியமா ஏன் பேச்சை வளர்த்தணும்... விதியையே மாத்தப் போற நீங்கள்லாம், அதிகமாப் பேசறத நிறுத்திட்டு, நம் நாட்டுக்கு வேண்டியதை செய்து காட்டுங்க...''முதல்ல வீட்டை சரி செய்துட்டு, நாட்டுக்குப் போவோம்...'இவ்வாறு சொல்லி போய்விட்டார், என்.எஸ்.கே., வழக்கம் போல், புத்தகத்தை துாக்கி படிக்கத் துவங்கினார், எம்.வி.மணி.தினமும் ஒரே மாதிரியான உணவை சாப்பிட்டு அலுத்துப் போயிருந்த எங்களுக்கு, என்.எஸ்.கே.,யின் யோசனை நியாயமாகப்பட்டது. வாரத்தில், இரு முறை அசைவ உணவுக்கு ஏற்பாடு செய்வதென்று, உறுதிப்படுத்தப்பட்டது.முதலில், அசைவ உணவை கடையிலிருந்து வாங்கி வந்து, வெளியே உட்கார்ந்து தான் சாப்பிட்டோம். ஆனால், உணவின் வாசனை உள்ளே இருந்து சாப்பிட்ட, 'சைவ உணவு' நண்பர்களுக்கு கஷ்டமாயிருந்தது; ஒருநாள், சாப்பிடாமல் எழுந்து போய் விட்டனர்.முதலாளியிடம் குற்றச்சாட்டுகள் சொல்லப் பட்டன; அவர், என்.எஸ்.கே.,யை அழைத்து விசாரித்தார். கலைவாணர் சொன்ன பதில், நியாயமானதென்று எண்ணிய உரிமையாளர், 'சைவ உணவு' நண்பர்களுக்கு சாதகமாக ஒன்றும் சொல்ல முடியவில்லை.இதற்கு பின், உணவுக்காக நாங்கள் மாதந்தோறும் கொடுத்த பணத்தை இனி, சமையல்காரரிடம் கொடுக்க முடியாதென்றும், எங்களுக்கு தேவையான அசைவ உணவை சமைக்க, நாங்களே ஒருவரை ஏற்பாடு செய்து கொள்வதாகவும், முதலாளியிடம் சொல்லிவிட்டனர்.நாங்கள் ஒழுங்காக வேலை செய்ய வேண்டுமென்பதால், சரியென்று சொல்லி விட்டார், முதலாளி.புதிய சமையல்காரரையும் ஏற்பாடு செய்தாகி விட்டது; ஆனால், சமைக்க, அறை வேண்டுமே!அருகில், ஒதுக்குப்புறமாயிருந்த ஒரு அறையை கொடுத்தனர்; சமையலும் துவங்கிற்று. அசைவ சமையலின் வாசனை, அவர்களுக்கு மிகப்பெரிய தொல்லையாயிற்று.அதை, அந்நண்பர்கள் சகித்துக் கெண்டாலும், 'சைவ உணவு' சமையல்காரர், 'தன்னால் இந்த நாற்றத்தை சகித்துக் கொண்டு சமையல் செய்ய முடியாது...' என்று கூறிவிட்டார். ஆனால், இதற்கு உண்மையான காரணம் எதுவென்றால், குறைந்த எண்ணிக்கையுள்ள நாலைந்து பேருக்காக, கையிலிருந்து செலவு செய்து, நஷ்டப்பட முடியாதென்பது தான் காரணம்.முடிவில், சைவ நண்பர்கள் ஓட்டலிலிருந்து சாப்பாடு வாங்கி வந்து சாப்பிட முடிவு செய்து, அதன்படியே செய்தனர். ஆனால், சைவ சமையல்காரரை அனுப்பி விடாமல், அவரையும், அவருடைய உதவியாளர்களையும் அங்கேயே இருக்கச் செய்து, சைவ உணவு செய்யும் பொறுப்பை, அவர் ஏற்றுக் கொள்ளவும், அசைவ உணவை, வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும் செய்வதற்கு, வேறு ஆளை ஏற்பாடு செய்து கொடுத்தார், என்.எஸ்.கே.,'ஏன்ணே... இப்படி செய்தீங்க...' என்று கேட்டேன்.'அவங்களா திருந்தி இருந்தா, இந்த அளவுக்கு போயிருக்க மாட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக முயன்று பாத்தேன்; முடியவில்லை. சரி... இனிமே, ராம பாணத்தை உபயோகிக்க வேண்டியதுதான்னு, அம்பை எய்து, காரியத்தை சுமூகமாக முடிச்சுட்டேன்...' என்றார்.இதை, என்.எஸ்.கே., செய்து முடித்ததில், அவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டதாக தெரியவில்லை.— தொடரும்.நன்றி: கண்ணதாசன் பதிப்பகம், சென்னை.