உள்ளூர் செய்திகள்

நான் ஏன் பிறந்தேன்? எம்.ஜி.ஆர்., (25)

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917 - 2017.நாரதர் வேடம் போட தயாராக இருந்த கே.ஆர்.ராமசாமி, நான், நாரதர் வேடமிட்டு வந்ததைப் பார்த்ததும், கோபமடைந்து, 'உடைகளை கழட்டி கொடு; மாமா என்னைத்தான் நாரதர் வேடம் போட சொல்லியிருக்கார்...' எனறார்.'பெரிய ஐயா என்னைத்தான் அந்த வேஷத்த போடச் சொல்லியிருக்கிறார்; அதனால், தர முடியாது...' என்றேன்.உடனே, காளி என்.ரத்தினத்திடம் சென்று அழுகையும், ஆத்திரமுமாக, விஷயத்தை சொன்னார், ராமசாமி. ரத்தினத்துக்கு என் மீது கோபம் வந்து விட்டது. என்னை அழைத்து, 'பெரியவரிடம் ஏன் போனாய்... நீ, ஏன் இந்த வேடம் கேட்டாய்...' என்று கோபித்தார்.'அனந்தராமன் தான் பெரியவரிடம் போய், தன்னால், பாட முடியாது என்று சொன்னான். உடனே, அவர் என்னை அழைத்து, 'நீ நாரதர் வேடம் போடுறாயா...' என்று கேட்டார்; சரி என்றேன்...' என்று நடந்ததை சொன்னேன்.என்னை, வேடம் போடாதே என்று சொல்லும் துணிவு, ரத்தினத்திற்கு வரவில்லை; அமைதியாக இருந்து விட்டார். அன்று, நானே நாரதராக நடித்தேன்.இப்படி, நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து, நாடக உலகின் பெரிய பெரிய ஜாம்பவான்களுடன் நடிக்கும் வாய்ப்பும், அவர்களது பாராட்டுதல்களையும் பெற்று, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தேன்.சின்ன சின்ன வேடங்கள் ஏற்று, சினிமாவில் காலூன்ற ஆரம்பித்திருந்த சமயம் அது...ஜெனோவா என்ற கதையை தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே சமயத்தில் படமாக்கினர்.அதில், இரண்டு மொழிகளிலும் கதாநாயகனாக நடித்தேன். எனக்கு மலையாள மொழியை எழுதப் படிக்க தெரியாது; வீட்டில் அவ்வப்போது பேசுவதால், கொஞ்சம் பேசத் தெரியும். அக்கதையை படமாக்கியவர்கள் இரண்டுபேர். சென்னையில் நடந்த படப்பிடிப்பை கவனித்து வந்தவர், மாத்யூஸ் என்பவர். ஈப்பன் என்பவரும், அதில் ஒரு பாகஸ்தர்.அப்படத்தின் இயக்குனரான, எப்.நாகூர், மிகுந்த நம்பிக்கையோடு தான், என்னை ஒப்பந்தம் செய்தார்.முதல் நாள் படப்பிடிப்பில் நான் நடித்தது, பேசியது, வேடப் பொருத்தம் அனைத்தும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மன நிறைவை கொடுத்தது. பாடல்கள் மற்றும் உரையாடல், கவிஞர், சுரதா.அதில் நடித்த நடிக, நடிகையரும் சிறப்பான ஒத்துழைப்பை கொடுக்க, படமும் திருப்தியாக அமைந்திருப்பதாக கூறினர். அப்போதெல்லாம், பட ஒப்பந்தங்களில், கையெழுத்திடும் போது, சில விதிகளை, படத் தயாரிப்பாளர்களிடம் எழுதி வாங்குவது உண்டு. எனக்கு பதில், வேறு யாரையாவது ஏதாவது ஒரு காட்சியில் நடிக்க வைக்க தயாரிப்பாளர் விரும்பினால், என் அனுமதி கடிதத்தை பெற வேண்டும் என்பது அதில் முக்கியமான விதி. ஏனெனில், அதற்கு முன் நான் நடித்த ஒரு படத்தில், எனக்கு தெரியாமலேயே, வேறு ஒருவரை, 'டூப்' எனக் கூறி, ஒரு காட்சியில், சில, 'ஷாட்'டுகளில் நடிக்க வைத்து படமாக்கினர். அதுபோலவே, 'நான் நடித்த படத்தை, எழுத்து மூலமான என் அனுமதியின்றி, வேறு எந்த மொழியிலும், மொழி மாற்றம் செய்து, வெளியிடக் கூடாது...' என்பதும், இன்னொரு விதி.ஜெனோவா படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்த போது, மேலே சொன்ன விதிகளும் எழுதப்பட்டன.அதாவது, தமிழ் மற்றும் மலையாளத்தில் நான் நடிப்பதால், அந்த இரண்டு மொழிகளையும் குறிப்பிட்டு, 'இவ்விரு மொழிகளை தவிர, வேறு எந்த மொழிகளில், மொழி மாற்றம் (டப்பிங்) செய்து வெளியிடுவதானாலும், என் அனுமதி பெறாது செய்யக் கூடாது...' என்று, ஒப்பந்தம் எழுதி, கையெழுத்து போட்ட பின் தான் நடித்தேன்.ஒருநாள், நியூடோன் ஸ்டுடியோவுக்கு போன போது, அங்கே நடந்த நிகழ்ச்சியை கண்டு, என் ரத்தம் கொதித்தது.ஜெனோவா படத்தில் என்னால் பேசப்பட்டிருந்த மலையாள மொழி உரையாடல்கள், வேறு ஒரு மலையாள நடிகரால், 'டப்பிங்' செய்யப்படுவதை கண்டேன்.ஆத்திரத்துடன், 'எங்கே மாத்யூஸ்...' என்று கூவினேன்.'நல்ல நேரத்தில வந்தே... இந்த நண்பர உனக்கு அறிமுகப்படுத்துறேன்...' என்று சொல்லி, எனக்காக மலையாள உரையாடல்களை பேசிக் கொண்டிருந்த நபரை அழைத்து வந்து, எனக்கு அறிமுகப்படுத்தினார், மாத்யூஸ். அவர் பெயர், குஞ்ஞூ பாகவதர்!கேரள நாடக மேடைகளிலும், சினிமாவிலும் பேரும், புகழும் பெற்ற பண்புமிக்க நடிகர். அவரை பார்த்ததில்லை என்றாலும், அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு. அதனால், அவர் பெயரை சொன்னதும், அவரை வணங்கினேன். அவர், என்னை விட வயதிலும், கலை அறிவிலும், எவ்வளவோ பெரியவராயிருந்தும், என் இரு கைகளையும் பிடித்து வணங்கியது, பேசியது, அவரிடம், மேலும் அன்பும், மரியாதையையும் ஏற்படுத்தின.'படத்தை பாத்தேன்... சிறப்பா நடிச்சிருக்கீங்க. உங்க அளவுக்கு என்னால உணர்ச்சியோட பேச முடியல. படத்தை பாத்ததும், 'ராமச்சந்திரனையே மறுபடியும் பேசச் சொல்லி எடுத்திடுங்க'ன்னு இவங்க கிட்ட சொன்னேன். முடியாதுன்னு பிடிவாதம் செய்றாங்க; என்ன செய்றது...' என்றார்.அதுவரை அடக்கி வைத்திருந்த என் ஆத்திரம் வெளிப்பட, 'மாத்யூஸ்... எனக்கிருக்கும் உரிமையை, சட்டப்பூர்வமாக நிறைவேற்றும் நிலைக்கு என்னை ஆளாக்கிடாதீங்க...' என்றேன். அவர், மிகவும் அமைதியாக சிரித்தவாறு, 'வீணா ஆத்திரப்படாதீங்க. சட்டப்படி தான் செய்கிறேனே தவிர, சட்டத்திற்கு புறம்பா எதுவும் செய்யலை. நீங்க பேசின மலையாளம், தமிழ் மொழியில் பேசற மாதிரி தான் இருக்கிறதே தவிர, அதில், மலையாள ஓசை இல்ல. உங்களுக்கும் நன்மையை தான் செய்றேன்...' என்றார், மாத்யூஸ். 'என்னை அவமானப் படுத்தியதோடு, எனக்கு நன்மை செய்றதாக சொல்றீங்களே... இப்பவே, வக்கீலிடம் பேசி, உங்களுடைய இந்த அநியாயமான செயலை தடுக்கிறேன்...' என்று கூறி, வேகமாக வெளியேறினேன். அவர் அழுத்தமான குரலில், 'நான் நினைத்தால், உங்கள் ஒப்பந்த விதிப்படியே, தமிழிலும், உங்கள் குரலுக்கு பதிலாக, வேறு ஒரு குரலை பதிவு செய்வேன்...' என்றார்.நான், திகைப்போடு திரும்பி பார்த்தேன்.அவர் மீண்டும் சொன்னார்...'கொஞ்சம் அவசரப்படாமல் நான் சொல்றதக் கேளுங்க... நம்ம ஒப்பந்தத்துல என்ன இருக்கு... தமிழ், மலையாள மொழியை தவிர, வேறு மொழிகளில், 'டப்' செய்ய வேண்டுமாயின், உங்களுடைய கையெழுத்துள்ள கடிதத்தின் வாயிலாக அனுமதி பெற்று தான் செய்ய வேண்டும் என்று தானே இருக்கிறது. 'அப்படியென்றால், இந்த இரண்டு மொழிகளிலும், 'டப்' செய்ய, உங்க அனுமதி தேவையில்லை என்பது தானே அர்த்தம்...' என்றார்.அப்போது தான், என் பலவீனமான நிலை, எனக்கு புரிந்ததோடு, மிகப் பெரிய அச்சமும், என்னுள் தோன்றியது.இந்த மனிதர், தமிழிலும், 'டப்' செய்து விட்டால், அய்யோ... என் தமிழ் கலை வாழ்வு என்னாவது! அதன் பின் மறுப்பேதும் கூறாமல், வெளியேறினேன்.— தொடரும்.நன்றி: கண்ணதாசன் பதிப்பகம், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !