எப்படியும் படம் எடுக்கலாம்! இப்படியும் படம் எடுக்கலாம்.
சமீபத்தில், 'பேஸ்புக்'கில் வைரலாக பரவியது, ஒரு புகைப்படம். அப்புகைப்படத்தில், தாய் ஒருத்தி, தன் முதுகுப் பையில், ஒரு குழந்தையை சுமந்தபடி, மார்பு பகுதி பையில் இருந்த மற்றொரு சிறு குழந்தைக்கு இடது கையால் பால் புகட்டியவாறு, வலது கையால், விளையாட்டுப் போட்டியை, படம் எடுக்கிறார்.பணிபுரியும் பெண்களின் பெருமையை பேசும் இப்படத்தில் இருப்பவர் பெயர், மெலிசா வார்லோ. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் வசிக்கும் இவர், கடந்த, 12 ஆண்டுகளாக, புகைப்படக் கலைஞராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ஜோஷ், இங்குள்ள புகழ்பெற்ற, மேன்ஸ் பீல்டு லேக் ரைட் என்ற கால் பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். இதே அணிக்கான புகைப்படக் கலைஞராக பணியாற்றி வருகிறார், மெலிசா.கடந்த, செப்., 9ல், மேன்ஸ் பீல்டு லேக் ரைட் அணிக்கும், மற்றொரு அணிக்கும் நடந்த பரபரப்பான கால் பந்தாட்ட போட்டியை படம் எடுக்க வந்தார், 'மார்னிங் டல்லாஸ்' என்ற பத்திரிகையின் புகைப்படக் கலைஞர் ஜான் எப்.ரூட். அப்போது, விளையாட்டுப் போட்டியை விட, இரண்டு குழந்தைகளோடு ஓடி ஓடி படம் எடுத்த மெலிசா, அவரது கவனத்தை ஈர்க்க, உடனே, அக்காட்சியை படம் எடுத்து, பத்திரிகையில் வெளியிட்டார்.படத்தை பார்த்தவர்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்தாலும், மெலிசாவோ, 'நான் அப்படி என்ன செய்து விட்டேன் என்று ஆளாளுக்கு பாராட்டுகின்றனர். நான், என் கடமையை தான் செய்தேன்; எட்டு மாதத்திற்கு முன், என்னை பார்த்து இருந்தால், இதைவிட பெரிதாக என்னை படம் எடுத்துப் போட்டு இருப்பர். காரணம், அப்போது, இதே மைதானத்தில், நிறை மாத கர்ப்பிணியாக இருந்தேன்.'படம் எடுத்த பின், வீட்டிற்கு திரும்பும் போது பிரசவ வலி ஏற்பட்டு, அப்படியே மருத்துவமனை சென்று குழந்தையை பெற்றெடுத்தேன். என் பெரிய மகன் ஜோர்டனுக்கு இப்போது, மூன்று வயது; சின்னவன் அடிஷனுக்கு, எட்டு மாதம். இரண்டு குழந்தைகளையும், எங்கேயாவது விட்டு விட்டு, நான் என் வேலையில் கவனம் செலுத்துவதை விட, அவர்கள் இருவரையும் சுமந்தபடி வேலை பார்ப்பது, எளிதாகவே இருக்கிறது.'பெரியவனை, நான் முதுகில் தூக்கி வைத்ததுமே, அவனுக்கு ஜாலியாகி விடும். படம் எடுப்பதற்காக ஓடுவதும், உட்காருவதும், திரும்புவதும் அவனுக்கு, 'த்ரில்'லாக இருக்கும். சின்னவன், இப்போது தான், இந்த விஷயங்களை பழகுகிறான். பெரியவன் போல இல்லாமல், அவ்வப்போது இவனுக்கு பால் கொடுக்க வேண்டும் என்பதற்காக, ஒரு பால் புட்டியும், என் கேமரா பேகில் தவறாமல் இடம் பெறுகிறது...' என்கிறார், இந்த அதிசய பெண் புகைப்பட கலைஞர்!எல். முருகராஜ்