உள்ளூர் செய்திகள்

யாதுமாகி நின்றாய்!

''ஹேப்பி பர்த்டே மம்மி... ஸ்வீட் 40... மம்மி,'' நெற்றியில் முத்தமிட்டு, மகள்கள் இருவரும் சொன்ன போது, எரிச்சலாய் நிமிர்ந்து பார்த்தாள், சம்யுக்தா.''ஹேப்பி பர்த்டே சரி... அதென்ன ஸ்வீட் 40... நான் கேட்டேனா... அந்த ஸ்வீட் 40... நீ அந்த வயசுக்கு வந்து பாரு, அப்ப தான் அதோட கணம் புரியும்,'' என்று சொல்லி, கோபமாய் சம்யுக்தா எழுந்து போக, புரியாமல் பார்த்தனர், இரு மகள்களும்.அடுக்களையில் நுழைந்த சம்யுக்தாவின் மனம், மூடியிட்ட உலை பானையாய் உள்ளுக்குள் தத்தளித்தது. கவிழ்த்து வைத்திருந்த எவர்சில்வர் சம்படத்தில் முகம் பார்த்தாள். லேசாய் தளரத் துவங்கி இருந்த கன்ன சதை, வயதை இனம்காட்டி பயமுறுத்தியது.உள்ளுக்குள் உடைந்து போயிருந்தாள். இனி, யாருடைய கவனத்திற்கும் அவள் பிரதானமாய் இருக்கப் போவதில்லை.'செதுக்கி வைச்ச சிலை மாதிரி இருக்கே, சம்யுக்தா...''நீ மட்டும் எப்படி இவ்வளவு, 'ஷார்ப்'பா முடிவெடுக்கிற... அதுக்கு காரணம் உன்னோட வயசு...''உனக்குள்ள ஓடுற இளம் ரத்தம் தான், உன்னுடைய உற்சாகத்துக்கும் காரணம். எங்களையும் பாரேன், 40 வயதில், பீ.பி., சுகர்ன்னு எல்லா வியாதிகளும் வரிசை கட்டிட்டு நிக்குது... நாங்களே செய்ய நினைச்சாலும் உடம்பு ஒத்துழைக்க மாட்டேங்குது...'உடன் வேலை பார்த்த ஆசிரியைகள், நேற்று வரைக்கும் சொல்லி மாய்ந்தனர். இன்று, அவளும் அவர்களுடன் இணைந்து கொண்டாள். நான்கைந்து மாதமாய் ஒழுங்கின்றி தள்ளி வரும், மாதவிடாய் வேறு, 'மொனோபாஸ்' வந்துவிட்டது என்று சொல்லாமல் சொன்னது.அடிமனசில் எரிச்சல் மண்டியது. ஆயிற்று, அதுவும் பாதி வாழ்க்கைக்கு மேல் கடந்து, எந்த மண்ணாங்கட்டியும் அனுபவிக்கவில்லை. இதோ பக்கத்தில் இருக்கிறது ஆக்ரா... எங்கிருந்தெல்லாமோ தாஜ்மகாலை காண, வந்து போகின்றனர். இன்னும் இவளால் போக முடியவில்லை.வயதும், இளமையும் கையோடு இருக்கையில், நான்கு இடத்துக்கு போய் வந்தால் தானே... புகைப்படம் எடுத்து, 'பேஸ் புக், இன்ஸ்டாகிராம்' போன்றவற்றில், 'அப்லோட்' செய்தால் தான், பார்க்க அழகாக இருக்கும்.சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு போய் வரவேண்டும் என்பது, நாள்பட்ட வேண்டுதல். எங்கே முடிகிறது... நாலுநாள் சேர்ந்தாற் போல் லீவு கிடைத்தாலும், மூக்கால் அழுவான், ப்ரித்விராஜ்.'சம்யு... நீ அரசு பள்ளி ஆசிரியை... எனக்கு இந்த விடுமுறை எல்லாம் சேர்த்தி இல்ல... ஒருநாள் விடுமுறை கிடைச்சாலே பெரிய விஷயம்... 'ஆயில் பாத்' எடுத்துட்டு, அரைநாள் நல்லா துாங்கி எழணும்...' என்பான்.''ஹேப்பி பர்த்டே சம்யு,'' கொட்டாவியை மென்று விழுங்கியபடி, பக்கத்தில் வந்து சொன்ன கணவனை முறைத்தாள். அசடு வழிந்தான், அவன்.''நைட், 12:00 மணிக்கே உன்னை எழுப்பி, வாழ்த்து சொல்லலாம்ன்னு தான் இருந்தேன்... ஆபிஸ்ல வேலை அதிகம். அதான் கண் அசந்துட்டேன்,'' என்றான், பாவமாக.''அது சரி... நடுராத்திரியில எழுப்பி, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், பிறந்தநாள் வாழ்த்து சொல்லி, 'சர்ப்ரைஸ் கிப்ட்' கொடுக்க, எனக்கென்ன, 20 வயசா... உங்களுக்கு நினைப்பு இருக்கா, நம் கல்யாணம் முடிஞ்சு, எனக்கு வந்த, முதல் பிறந்தநாளின் போது, எனக்கு, 20 வயசு... எத்தனை ஆர்ப்பாட்டம்... எத்தனை சந்தோஷம்...''இப்போ நினைச்சாலே உடம்பு சிலிர்க்கும்... அதெல்லாம், இப்போ நான் எதிர்பார்க்க முடியுமா,'' எனக் கூறியவள், ''எனக்கு ஸ்கூல் கிளம்பணும்... இட்லி ஊத்தி வச்சிருக்கேன்... நீங்களும், உங்க பொண்ணுகளும் சாப்பிட்டுட்டு கிளம்புங்க... நான் போய் குளிக்கிறேன்,'' என்றாள்.விட்டேத்தியாய் சொல்லி போனவளை, கவலையாய் பார்த்தபடி நின்றான், ப்ரித்விராஜ்.மாலை- சம்யுக்தா, வீட்டிற்கு வந்த போது, வீடு களைகட்டி இருந்தது. உள்ளே நுழைந்தவளின் கண்கள், ஆச்சரியத்தில் விரிந்தன. மெல்லிய அலங்காரத்தில் வீடு மிளிர, இவளுடைய அண்ணன் குடும்பமும், அம்மாவும் வந்திருந்தனர்.'பர்மிஷன்' போட்டு வந்து, எல்லாவற்றையும் தயார் செய்திருந்தான், ப்ரித்விராஜ்.இவள் உள்ளே நுழைய, எல்லாரும், 'ஹேப்பி பர்த்டே டூ யூ...' பாடினர். நன்றாகத்தான் இருந்தது. அதற்காக, 40ல் இருந்து, நான்கைந்து வயது குறையவா போகிறது.'சம்யுக்தா 40' என்று எழுதப்பட்ட, 'கேக்'கைப் பார்த்ததும், 'பொசுக்'கென்று கோபம் வந்தது.''நிஜத்துல எனக்கு, 40 வயசே கிடையாது; 39 தான். அக்., 20, 1979. அதுக்குள்ள யார் முந்திரிகொட்டை மாதிரி, 40ன்னு போட்டது,'' சுள்ளென்று எரிந்து விழுந்தாள், சம்யுக்தா.'அய்யோ அத்தை... அப்படின்னா இன்னையில இருந்து தான் உங்களுக்கு, 40 வயது ஆரம்பமாகிறது... அத்தை, கணக்குல, 'வீக்' போல,'' அண்ணன் மகன் கேலியாய் சொல்லி சிரிக்க, கோபத்தில், நிறமேறியது, சம்யுக்தாவின் முகம்.''எல்லாரும், 'கேக்' வெட்டி, ஆர்ப்பாட்டம் பண்ணச் சொல்லி நான் சொன்னேனா... எல்லாம் நீங்களா பண்ற வீண் வேலை... நான் ஒண்ணும் குழந்தையில்ல, பிறந்தநாள் கொண்டாட... போற காலத்துக்கு, இந்த ஆர்ப்பாட்டம் எல்லாம் எதுக்கு,'' என்றபடி, உள்ளே சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள், சம்யுக்தா.எத்தனை வற்புறுத்தி அழைத்தும், 'கேக்' வெட்ட வரவேயில்லை. வந்தவர்களை சமாதானம் செய்து அனுப்புவதற்குள், பெரும் தர்மசங்கடமாய் போய்விட்டது, ப்ரித்விராஜுக்கு. அவளுடைய இந்த போக்கு, கொஞ்சம் வித்தியாசமானதாய் தான் இருந்தது.வெளிக்காற்றின் ஜிலுஜிலுப்பு, அறைக்குள் சன்னமாய் பரவிக் கிடந்தது. ஜன்னலில் தலைசாய்த்து வெளிப்புறத்தை வேடிக்கை பார்த்தபடி இருந்தாள், சம்யுக்தா. அவள் கண்களில் இனம் புரியாத விரக்தி... நெற்றியில் தென்பட்ட சுருக்கக் கோடுகள், அவளுடைய அடிமனதின் குழப்பத்தை பேசியது.வீட்டில் உள்ளவர்களிடம், அவள் நல்லபடியாய் பேசி, பல நாட்கள் ஆகின்றன. அப்படியே பேசினாலும் சின்ன சின்ன வார்த்தைகளுக்கும், கேலி பேச்சிற்கும் கூட எரிந்து எரிந்து விழுகிறாள். பெரும்பாலும் தனிமையே விரும்புகிறாள். இப்படியே விட்டால் அவள் நிலைமை என்னாகும் என்ற கவலை, அவனை பீடித்துக் கொண்டது.''சம்யு,'' என்று, அவள் கரங்களை பற்றினான், ப்ரித்விராஜ்.நிமிர்ந்து பார்த்தவள், சலனமில்லாமல் ஒருநொடி பார்த்து, மறுபடியும் பார்வையை வேறுபுறம் திருப்பினாள்.''என்னாச்சுடா உனக்கு... எதுக்கு இப்போ இப்படி விரக்தியா இருக்கே... வளர்ந்த ரெண்டு குழந்தைகளுக்கு அம்மா நீ... இப்போ நீ கவனம் பிசகினா, அதுங்க வழி மாறிப் போக வாய்ப்பிருக்கு... என்ன தான் பிரச்னை உனக்கு... என்கிட்டத்தான் சொல்லேன்,'' என்றான்.''பிறந்தது முதல் பெத்தவங்களுக்காக வாழ்ந்தேன்... கல்யாணத்திற்கு பின் உங்களுக்காக வாழ்ந்தேன்... இப்போ பிள்ளைகளுக்காக... அப்போ, என்னோட வாழ்க்கையை எப்ப தான் வாழ்றது,'' என்றாள்.''சம்யு,'' என்றான்.''உள்ளே கனலா கனன்றுட்டு இருக்கு... 40 வயசு. கிட்டத்தட்ட, முக்கால் வாழ்க்கை துாரம். இத்தனையும், கடந்து முடிச்ச பிறகு தான், அனுபவிச்சதை விட, அனுபவிக்க தவறின விஷயங்கள் கண் முன்ன வந்து நிக்குது... குடும்பம், குழந்தைன்னு மட்டுமே வாழ்ந்துட்டேன்... ''அற்புதமான இளமைக்காலம், என்னை விட்டுப் போயாச்சு... என் ஆற்றாமையை எப்படி வெளிப்படுத்தறதுன்னு தெரியல... அதான் எரிஞ்சு விழறேன்... எனக்கான நியாயம், என்னை தவிர யாருக்கும் புரியாது,'' என்றவள், உள்ளங்கையால் முகத்தைமூடி விசும்பினாள். மலைத்து போயிருந்தான், ப்ரித்விராஜ்.'மெனோபாஸ்' சமயத்தில் ஏற்படும் விவரிக்க இயலாத மன உளைச்சல்... அதை கடந்து வர இயலாமல் தவிக்கிறாள். 40 என்ற எண், அவளை உறங்க விடாமல் இம்சிக்கிறது.''சம்யு... வயசுங்கிறது எல்லாம் வெறும் பருவம் தானே... இலை பழுக்கிறதும், புதுசா துளிர்க்கிறதும் கால சுழற்சி,'' என்றான், ப்ரித்விராஜ்.''பச்... நான் ஒரு டீச்சர்... எனக்கே பாடம் நடத்தாதீங்க,'' என்றாள், எரிச்சலாக.''வருத்தத்தை தராத பிரிவு, இந்த உலகத்துல இல்ல, சம்யு... பள்ளிக்கூடம் போக அழற குழந்தைகள் தான், படிப்பு முடிஞ்சு, பள்ளிய விட்டு வெளியேறும் போது, துயரப்படறான்... வேலைக்கு போகவே வேதனைப் பட்டவங்க தான், ஓய்வுபெறும் நாளில், தான் உட்கார்ந்து இருந்த நாற்காலியை கண்ணில் நீர் திரையிட, தடவி பார்ப்பாங்க...''அவ்வளவு ஏன்... ஒவ்வொரு மாசமும் வீட்டுக்கு விலக்காகும் போது, வயிற்று வலியாலும், தன்னுடைய தினசரி வேலைகளை செய்ய முடியாமலும் அசவுகரியப்படற பெண்கள் தான், அந்த சுழற்சி முடிவுக்கு வரும்போது, தீராத மன உளைச்சலுக்கு ஆட்படறாங்க,'' என்று சொல்லி, மனைவியை அடிக்கண்ணில் பார்த்தான், ப்ரித்விராஜ். தன் குழப்பத்தை மிகச் சரியாய் அவன் இனம் கண்ட நெகிழ்வு, அவளுள்.'வாழ்க்கையில் ஒவ்வொரு அடுத்த நொடியும், ஏதாவது அற்புதத்தை ஒளித்து வைத்திருக்கும்...' என, எங்கேயோ படிச்ச ஞாபகம் வந்தது. ''இளமையா இருக்கிறது வரம் தான். ஆனா, கடைசி நிமிஷம் வரை, இளமையா மட்டும் இருந்தா, அதுக்கு பேர் வளர்ச்சியின்மை. உடலில் இளமையும், மனசில முதிர்ச்சியும் இருக்கிறது தான், அழகான பருவம். இப்போ நீ அதை மாத்தி வச்சு, உன்னை குழப்பிக்கிற...''மனசளவுல இளமையா வச்சுக்க முயற்சி செய்துட்டு, அது முடியாம போயிடுமோன்னு குழப்பிக்கிற... இளமையான சிந்தனையும், முதிர்ச்சியான செயல்களும், ஆரோக்கியமும் இப்போ வரும். அதை அடைய முயற்சி செய்... உன் மேல உனக்கு நம்பிக்கை வந்தால், இந்த, 40 - 50ங்கிற எண்ணிக்கை எல்லாம் எதுவும் பண்ணாது,'' மெதுவாய் அவள் தலை கோதினான். கண்ணில், 'மளூக்'கென கண்ணீர் எட்டிப் பார்த்தது.''சம்யு... நான் ஒண்ணு சொல்லட்டுமா... மிஞ்சிப் போனா, நம்மகிட்ட ஒரு, 20 - 25 வருஷ வாழ்க்கை மிச்சமிருக்குமா... இதுல என்னல்லாம் செய்யலாம், என்னல்லாம் செய்யக் கூடாதுன்னு திட்டம் போட்டு வச்சிருக்கேன்...''ஒவ்வாத சாப்பாட்டை குறைச்சுட்டேன்... அர்த்தமில்லாத கோபத்தை எனக்குள்ள அடக்கி உட்கார வைக்க பழகிட்டு இருக்கேன்... பஸ் மற்றும் 'லிப்டில்' முண்டியடுச்சு ஏறாம, பின்னாடி வர்றவங்களுக்கு வழிவிட்டு, நிதானிக்கிற பக்குவத்தை கத்துகிட்டேன்...''செல்வத்தை சேர்த்து வைக்கிற குறிக்கோளை தளர்த்தி, நிறைய புண்ணியத்தை சேர்க்கிற நோக்கத்தோடு, வருமானத்துல ஒரு பகுதியை தானம் செய்ய துவங்கி இருக்கேன்...''மாசம் ஒரு சொந்தக்காரங்க வீடு... வருஷம் ஒரு டூர்... இப்படி அழகான திட்டமிடலில் இருக்கேன். இளமையை உடையில காட்டாம, உணர்வுல காட்டணும்கிற பக்குவத்துல இருக்கேன்,'' அவன் பேசப் பேச, வியப்பின் உச்சத்தில் நின்றாள், சம்யுக்தா.''அடேங்கப்பா... எங்க கத்துகிட்டீங்க இதெல்லாம்,'' என்றாள்.''இந்தப் பாவப்பட்ட ஆம்பிள்ளைகளுக்கு, யார் சொல்லித்தரப் போறா... அவங்களுக்கெல்லாம் மன அழுத்தம் தரும், 'மெனோபாஸ்'ல வர்றதில்ல, திருமணத்திலேயே வந்துடுது,'' முகத்தை பாவமாய் வைத்தபடி சொன்னவனை, முறைத்தாள், சம்யுக்தா. ''ரொம்பத்தான் கொழுப்பாயிடுச்சு உங்களுக்கு,'' என்றவள், கன்னத்தை செல்லமாய் தட்டினான்.''இப்படித்தான் நீ, உடை உடுத்தணும், இப்படித்தான் இருக்கணும்ன்னு, நான் எப்போதும் சொன்னதில்ல... இனியும் சொல்ல மாட்டேன்... ஆனா, மத்தவங்க பார்வையில உன் கண்ணியத்தை குறைக்கிற விஷயத்தை விட்ருன்னு, 'அட்வைஸ்' பண்ணுவேன்,'' என்றான், ப்ரத்விராஜ்.அவள் அடிக்கடி, தன் உடல் வாகிற்கு கொஞ்சம் கூட ஒத்துவராத, 'லெக்கின்சை' அணிவதை, அவன் சுட்டிக் காட்டுவது புரிந்தது. கோபமாய் பதில் சொல்ல முற்பட்டவளை, கை உயர்த்தி, தடுத்தான்.''சம்யு... ப்ளீஸ்... நீ பாட்டுக்கு பெண் உரிமை, ஆண் உரிமை அப்படின்னு பேச ஆரம்பிச்சுடாத... ஆணுக்கு பெண் சமம்ன்னு தான், உன்னை மாதிரி பெண்கள் பேசுறீங்க... ஆனா, என்னைப் பொறுத்த வரை, ஆணை விட பல மடங்கு உயர்ந்தவள், பெண், மதிக்கப்பட வேண்டியவள்; பாதுகாக்கப்பட வேண்டியவள். உயர்வான எல்லாமுமே பாதுகாக்கப்பட வேண்டியவை தானே,'' என்றான்.அவனுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும், அவளுடைய நெஞ்சை குழைய வைத்தது. தன்னை மறந்து, அவன் கைகளைப் பற்றி, கண்களில் ஒற்றிக் கொண்டாள்.''தன்னைத் தானே கட்டுப்பாடா வச்சுக்கிறது தான், உண்மையான சுதந்திரம். அது, உனக்கு நிறையவே இருக்கு... நாம எல்லாரும் நீண்ட நாள் வாழ ஆசைப்படறோம்... அதே நேரம், முதுமை அடைய விரும்ப மாட்டேங்கிறோம்... வேடிக்கையா இல்ல... ''மாத்த முடியாததை அப்படியே ஏத்துகிட்டு, அதற்கேற்ப வாழ பழகுறது தான் புத்திசாலித்தனம்... உனக்குள் ஏற்படுகிற மாற்றங்கள், உலகத்துல உள்ள எல்லா பெண்களுக்கும் நடந்திருக்கு, இனியும் நடக்கப் போகிறது... சந்தோஷமா இரு... எப்பவும் நானும், நம் குடும்பமும் உன் கூட இருப்போம்,'' என்றவன், மென்மையாய் கன்னம் தட்டி, புன்னகைத்தான்.வெடித்து வந்த அழுகையை கட்டுப்படுத்த இயலாமல், கேவி அழுதாள்.'குறையொன்றும் இல்லையே இறைவா... இருளுக்கு ஒளியையும், பிணிக்கு மருந்தையும் மாற்றாய் வைத்தாய்... இருளில் கிடக்கும்போது தான், ஒளியின் பெருமை புரியும் என்பதற்காக, இந்த அன்புதானே, உலகத்தில் ஜீவித சங்கல்பம்.'தாயே பலருக்கு சரியாக வாய்க்காத போது, தாயுமாகி, தந்தையுமாகி, யாதுமாகி அன்பு செய்யும் துணை இருக்கும்போது, 40 என்ன, 80ல் கூட, இளமையாக உணரலாம்...' என்ற உவகை பிறந்தது அவளுள். எஸ்.பர்வீன் பானு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !