| ADDED : நவ 28, 2025 05:36 AM
ராம்நகர்: இயற்கை உபாதை கழிக்க சென்ற 15 வயது சிறுமி, மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர். பெங்களூரு தெற்கு மாவட்டம் ராம்நகரின் போலரே கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் குமார். அதே கிராமத்தில் அஸ்வத் நாராயண் என்பவருக்கு சொந்தமான பண்ணையில், கூலி வேலை செய்து வருகிறார். இவரின் மகள் கவிதா, 15. நேற்று முன்தினம் மாலையில் இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் மகள் வராததால் அச்சமடைந்த குடும்பத்தினர், பல இடங்களில் தேடினர். வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில், சிறுமி இறந்து கிடந்ததை பார்த்தனர். சிறுமியின் நிலையை பார்த்த அவர்கள், அவரை யாரோ பலாத்காரம் செய்து, கொலை செய்திருக்கலாம் என்று கருதினர். இத்தகவல் கிடைத்ததும், கிராம மக்கள் அங்கு குவிந்தனர். கக்கலிபுரா போலீசாரும் அங்கு சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். சிறுமியின் உடலை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 'பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே, சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டாரா என்பது தெரியவரும்' என போலீசார் தெரிவித்தனர். சம்பவத்தின் தீவி ரத்தை உணர்ந்த போலீசார், குற்றவாளியை பிடிக்க சிறப்பு குழுக்களை அமைத்து உள்ளனர். கிராமத்தின் சுற்றுப்புற பகுதிகளில், கூலி வேலைக்கு வந்தவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.