பெலகாவி: குளிரில் இருந்து தப்பிக்க அறையில் கரிக்கு தீ வைத்து, அதில் கொசுவர்த்தி சுருளையும் வைத்து, உறங்கிய மூன்று பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெலகாவியின் அமான் நகரை சேர்ந்தவர்கள் ரிஹான் மதே, 22, மொஹின் ந ல்பண்ட், 23, சர்பரஸ், 22, ஷானவாஸ், 19. இவர்கள் அனைவரும் உறவினர்கள். ரிஹான் மதே வீட்டில் நேற்று முன்தினம் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடந்தது. இதில், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் பங்கேற்றனர். விழா முடிந்ததும், இளைஞர்கள் நான்கு பேரும், இதே வீட்டில் உள்ள அறையில் உறங்க சென்றனர். குளிர் அதிகமாக இருந்ததாக, நிலக்கரியை பற்ற வைத்து, கொசுவுக்காக நான்கு கொசுவர்த்தி சுருளை அதன் மீது வைத்தனர். ஜன்னல் இல்லாத அறையின் கதவையும் மூடிக்கொண்டு உறங்கி உள்ளனர். நேற்று மதியம் ஆன பின்னரும், அறையில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், கதவை தட்டியும் எந்த பதிலும் வரவில்லை. கதவை திறந்து பார்த்தபோது, ரிஹான் மதே, மொஹின் நல்பண்ட், சர்பரஸ் ஆகியோர் மூச்சு திணறி உயிரிழந்திருந்தனர். மயக்கத்தில் இருந்த ஷானவாசை, உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர், ஆபத்தான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் கூறி உள்ளனர். தகவல் அறிந்த மாலமாருதி போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 'ஜன்னல் இல்லாத அறையில் கதவை மூடி, குளிருக்காக புகை மூட்டியதால், மூச்சு திணறி இறந்திருக்கலாம். ஆனாலும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே தெரியவரும்' என போலீசார் சந்தேகிக்கின்றனர்.