உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  3,616 பி.பி.எல்., ரேஷன் கார்டுகள் கோலார் மாவட்டத்தில் ரத்து

 3,616 பி.பி.எல்., ரேஷன் கார்டுகள் கோலார் மாவட்டத்தில் ரத்து

கோலார்: கோலார் மாவட்டத்தில் 3,616 பி.பி.எல்., ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு ஏ.பி.எல்., கார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. 25 லட்சம் ரூபாய்க்கு மேல் ஜி.எஸ்.டி., பரிவர்த்தனை செய்வோர், தொழிலதிபர்கள், 6 முதல் 12 மாதங்களுக்கு ரேஷன் பெறாதவர்கள், 18 வயதுக்கு உட்பட்ட ஒரே ஒரு நபருக்காக மட்டுமே உள்ள கார்டு, இலகு ரக மோட்டார் வாகனங்கள் வைத்திருப்போர் ஆகியோர் பி.பி.எல்., எனும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள கார்டு வைத்திருப்பதற்கு தகுதியற்றவர்கள். ஆனாலும் பலர், இத்தகைய கார்டுகளை வைத்து உள்ளனர். இது மட்டுமின்றி, இறந்தவர்களின் பெயரிலும் சிலர் தொடர்ந்து ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். இதை தடுக்க உணவுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர். தங்கவயல் தொகுதியில் அண்மையில் நடந்த மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியில், தங்களுக்கு தெரியாமல் பி.பி.எல்., ரேஷன் கார்டுகள் ஏ.பி.எல்., கார்டுகளாக மாற்றப் பட்டுள்ளதாக தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலாவிடம் பலர் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரிக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். கோலார் மாவட்டத்தில் 3 லட்சத்து 83 ஆயிரத்து 56 ரேஷன் கார்டுகள் இருந்தன. இதில் 29,403 அந்தியோதயா கார்டுகள்; 46,527 ஏ.பி.எல்., கார்டுகள்; 3,07,126 பி.பி.எல்., கார்டுகள் என கணக்கிடப்பட்டிருந்தன. இதில், நடப்பாண்டின் அக்டோபர் இறுதி வரை 21,854 தகுதியற்ற பி.பி.எல்., ரேஷன் கார்டுகள் உள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டன. தொடர்ந்து சரி பார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. இவற்றில் 3,611 கார்டுகள், ஏ.பி.எல்., எனும் வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கான கார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. பல்வேறு காரணங்களால் 3,611 ரேஷன் கார்டுகள் ஏ.பி.எல்., கார்டுகளாக மாற்றப் பட்டுள்ளன. உணவுத்துறை துணை இயக்குநர் லதா கூறுகையில், ''கோலார் மாவட்டத்தில் பி.பி.எல்., ரேஷன் கார்டுகள் கோரி 18,105 விண்ணப்பங்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. இவற்றில் தகுதி இல்லாத 14,773 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 3,332 விண்ணப்பங்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை