தார்வாட்: அரசு கட்டடங்கள், பொது இடங்களில் ஊர்வலம், கூட்டங்கள் நடத்த அனுமதி பெற வேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி, மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்ற கர்நாடக உயர் நீதிமன்ற தார்வாட் கிளை, எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் அரசு கட்டடங்கள், சாலைகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களில் பதிவு செய்யப்பட்ட, செய்யப்படாத தனியார் அமைப்புகள், தங்கள் நிகழ்ச்சிகளை போலீஸ் அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும். இல்லையெனில், சட்ட விரோதமாக கூடியதாக வழக்குப் பதிவு செய்யப்படும் என்று மாநில அரசு, அக்., 18ல் அறிவித்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தார்வாட் கிளை அமர்வில், ஹூப்பள்ளி மறுவாழ்வு சேவை அறக்கட்டளை, 'வி-கேர்' அறக்கட்டளை உட்பட நான்கு பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இம்மனுக்களை விசாரித்த தனி நீதிபதி நாகபிரசன்னா, அரசின் உத்தரவுக்கு, அக்., 28ல் இடைக்கால தடை விதித்தார். இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தின் தார்வாட் கிளையில், மாநில அரசு மேல்முறையீடு செய்தது. இம்மனுவை நீதிபதிகள் பண்டிட், கீதா ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து, தனி நீதிபதியிடமே மேல்முறையீடு செய்யலாம் என, நவ., 6ல் உத்தரவிட்டது. இதையடுத்து, தடையை நீக்கக் கோரி, அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனு, நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, 'நீங்கள் உச்ச நீதிமன்றத்துக்கு செல்லவில்லையா?' என்று கேட்டார். அதற்கு அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி, 'இந்த பிரச்னை குறித்து அரசு விவாதித்து வருகிறது. ஆட்சேபனை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும். இந்த இடைக்கால தடை, மனுதாரர்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும்,'' என்றார். அதற்கு நீதிபதி நாகபிரசன்னா கூறியதாவது: இடைக்கால உத்தரவில் கூறப்பட்டு காரணங்களை, டிவிஷன் அமர்வு உறுதி செய்துள்ளது. அரசின் உத்தரவு, இந்திய அரசியலமைப்பின் அத்தியாயம் 3ஐ, அதாவது அடிப்படை உரிமைகளான பிரிவு 19 (1), (ஏ) (பி)ஐ மீறுவதாகும். எந்தவொரு அடிப்படை உரிமையையும் அரசின் உத்தரவால் குறைக்க முடியாது. அதேவேளையில், ஒரு சட்டத்தால் குறைக்க முடியும். அடிப்படை உரிமைகள் அல்லது பிரிவு 13 (2)ஐ மீறுவதாக இருப்பதால், அரசு உத்தரவு மனுதாரர்களை மட்டும் கட்டுப்படுத்த முடியாது. எனவே, அட்வகேட் ஜெனரல் கேட்டுக் கொண்டபடி, ஆட்சேபனை தாக்கல் செய்ய நான்கு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டு, டிச.,15ம் தேதி விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரை அரசின் உத்தரவுக்கு பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.