| ADDED : டிச 30, 2025 06:47 AM
ஹூப்பள்ளி: பெண்களுக்கு, 'கிரஹலட்சுமி' திட்டத்தின் உதவித்தொகை பாக்கி வைத்துள்ளது குறித்து, பா.ஜ., - எம்.எல்.ஏ., மகேஷ் டெங்கினகாயி, மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி: பெலகாவியில் சட்டசபை கூட்டத்தொடரிலேயே, கிரஹலட்சுமி திட்டத்தின் உதவித்தொகை பாக்கி வைத்திருப்பது குறித்து, நான் பேசினேன். முதல்வர் சித்தராமையாவின் கவனத்துக்கும் கொண்டு சென்றேன். முதல்வரும், விரைவில் பணம் பரிமாற்றம் செய்வதாக, உறுதி அளித்தார். முதல்வர் கூறி, 20 நாட்களாகியும் இன்னும் பணம் வரவில்லை. துணை பட்ஜெட்டிலும், இத்திட்டத்துக்கு தேவையான 5,000 கோடி ரூபாய் குறித்து, எதுவும் கூறப்படவில்லை. அந்த பணம் எங்கு போனது என்பதை, அரசு தெளிவுபடுத்த வேண்டும். கிரஹலட்சுமி திட்டம் விஷயத்தில், பல குழப்பம் உள்ளது. இதற்கு மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும். திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 5,000 கோடி ரூபாய் என்ன ஆனது என்ற கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.