பெங்களூரு: 'பணிகளின் தரத்தில் எந்த சமரசமும் இருக்கக் கூடாது. மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், அனைத்து பணிகளின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்ய வேண்டும்,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். பெங்களூரில், முதல்வரின் அலுவலக இல்லமான கிருஷ்ணாவில் நேற்று, முதல்வர் சித்தராமையா தலைமையில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் மற்றும் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல் குறித்த முன்னேற்ற மறு ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், முதல்வர் சித்தராமையா பேசியதாவது: முதல்வரின் சிறப்பு மானிய திட்டத்தின் கீழ், 2023 - 24ல் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா 25 கோடி ரூபாய் வீதம், 3,510 கோடி ரூபாய் விடுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், 2,040 கோடி ரூபாய் மதிப்புள்ள, 58 சதவீத பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டு உள்ளன. மேலும், 920 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு உள்ளது. பெலகாவி குளிர்கால கூட்டத்தொடரில், மேல்சபையில், 1,205 கோடி ரூபாய் விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. முடிக்கப்பட்ட பணிகளுக்கான பில் தொகையை செலுத்த வேண்டும். 2024 - 25ம் ஆண்டில், மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க, 1,890 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது; 250 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு உள்ளது. முதல்வரின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2025 - 26ம் ஆண்டுக்கு, 8,666.50 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது; ஏற்கனவே, 1,000 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட காலத்தில் முடிக்க வேண்டும். அதற்கான மானிய தொகையை வழங்க வேண்டியது மாவட்ட கலெக்டர்களின் பொறுப்பு. பணிகளின் தரத்தில் எந்த சமரசமும் கூடாது. மாவட்ட பொறுப்பு வகிக்கும் அமைச்சர்கள், அனைத்து பணிகளின் முன்னேற்றத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். ரயில்வே பணிகளுக்கு மீதமுள்ள நிலங்களை, முன்னுரிமை அடிப்படையில் கையகப்படுத்த வேண்டும். குடச்சி - பாகல்கோட்; துமகூரு - தாவணகெரே; பேலுார் - ஹாசன்; ஷிவமொக்கா - ராணிபென்னுார்; தார்வாட் - பெலகாவி ரயில் பாதை பணிகளை, குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க, தேவையான ஏற்பாடுகளை மேறகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.