உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  யானைகள் முகாம்கள் திறப்பு: பயணியருக்கு கட்டுப்பாடுகள்

 யானைகள் முகாம்கள் திறப்பு: பயணியருக்கு கட்டுப்பாடுகள்

குடகு: ஐந்து மாதங்களுக்கு பின், மத்திகோடு மற்றும் ஹாரங்கி யானைகள் முகாம்களில், சுற்றுலா பயணியருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குடகு மாவட்டத்தின், துபாரே யானைகள் முகாமில், யானைகளின் மோதலுக்கு, சென்னை பெண் பலியான சம்பவத்துக்கு பின், சுற்றுலா பயணியரின் பாதுகாப்பை கருதி, வனத்துறை குடகின், குஷால்நகரில் உள்ள ஹாரங்கி மற்றும் மத்திகோடு யானைகள் முகாம்களை மூடியது. அந்த முகாம்களுக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், குடகு மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணியர் ஏமாற்றம் அடைந்தனர். கடந்த ஐந்து மாதங்களுக்கு பின், மத்திகோடு, ஹாரங்கி யானைகள் முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணியரின் பாதுகாப்புக்காக, வனத்துறை கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: யானைகள் முகாம்கள் திறக்கப்பட்டாலும், வனத்துறையின் உத்தரவை பின்பற்ற வேண்டும். யானைகளிடம் இருந்து, 10 மீட்டர் தொலைவில் பாதுகாப்பான இடத்தில் நின்று பார்க்க வேண்டும். யானைகளை தொடக்கூடாது. அவற்றுக்கு தண்ணீர் புகட்டுவதற்கும், குளிப்பாட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணியர் யானைகளின் அருகில் நின்று, செல்பி அல்லது போட்டோ எடுக்க கூடாது. சுற்றுலா பயணியருக்கு யானைகள் முகாம்களில், இனிமையான அனுபவம் கிடைக்க வேண்டுமானால், வனத்துறையின் விதிகளை பின்பற்ற வேண்டும். யானைகளிடம் இருந்து விலகி நின்று பார்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்