கிரிப்டோ கரன்சி நிறுவனத்தில் ரூ.378 கோடி லபக்கிய ஊழியர்
பெங்களூரு: 'கிரிப்டோ கரன்சி' நிறுவன இணையதளத்தை, 'ஹேக்' செய்து, 378 கோடி ரூபாய் திருடிய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு பெல்லந்துாரில், 'நிபிலோ டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனம் இயங்கி வருகிறது. இது, கிரிப்டோ கரன்சி பரிமாற்றம் செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் கணக்கில் இருந்து, 44 மில்லியன் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில், 378 கோடி ரூபாய் திருடப்பட்டு இருந்தது. இதையறிந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் ஹர்தீப் சிங், ஒயிட்பீல்டு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதில், 'கடந்த 19ம் தேதி அதிகாலை, 2:37 மணி அளவில், எங்கள் நிறுவனத்தின் இணையதளத்தை ஹேக் செய்த மர்ம நபர்கள், ஒரு அமெரிக்க டாலரை திருடி உள்ளனர். மீண்டும் காலை, 9:40 மணிக்கு 44 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் 378 கோடி ரூபாயை திருடி உள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். போலீசார் விசாரணையில், அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெங்களூரு கா ர்மேலரத்தை சேர்ந்த ராகுல் அகர்வால் என்பவரின் மடிக்கணினியில் இருந்து ஹேக் செய்து பணத்தை எடுத்தது தெரிந்தது. ராகுலை கடந்த 26ல் கைது செய்த போலீசார், அவரிடம் விசாரித்தனர். 5 முதல் 6 ஆண்டுகள் இந்நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் பணிக்காக, நிபிலோ நிறுவனம் சார்பில் மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இந்த மடிக்கணினி மூலம், பகுதி நேரமாக மற்றொரு நிறுவனத்திலும் ராகுல் ஓராண்டாக பணியாற்றியுள்ளார். இதற்காக, ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் ஊதியம் பெற்றுள்ளார். இவரது மடிக்கணினி மூலம் தான், நிபிலோ நிறுவனத்தின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டதை போலீசார் உறுதிப்படுத்தினர். இந்த பணத்தை, வேறு யார் யாருக்கு அனுப்பினார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கர்நாடக வரலாற்றில், 378 கோடி ரூபாய்க்கு சைபர் குற்றம் நடந்திருப்பது இதுவே முதல் முறை.