| ADDED : நவ 28, 2025 05:46 AM
சாம்ராஜ்நகர்: சாம்ராஜ்நகரின், எத்திகட்டி அருகில் 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நுழைந்துள்ளதால், கிராமத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர். யானைகளை பிடிக்கும்படி வனத்துறையிடம் மன்றாடுகின்றனர். சாம்ராஜ்நகர் மாவட்டம், எலந்துார் தாலுகாவில் எத்திகட்டி கிராமம், கர்நாடகா --- தமிழக எல்லையில் உள்ளது. நேற்று காலையில் கிராமத்தின் அருகில், 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், கூட்டமாக விவசாயிகள் நிலத்தில் புகுந்தன. இத்தனை யானைகள் சாலையை கடந்து, வயலுக்குள் புகுந்ததை, அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள், தங்களின் மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். தங்கள் கிராமத்தின் அருகிலேயே, 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நடமாடுவதால், எத்திகட்டி கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது வயலில் புகுந்த யானைகள் கூட்டத்தால், மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகம், கர்நாடக வனத்துறையினர் இணைந்து, யானைகளை பிடிக்க வேண்டும் என, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். யானைகள் புகுந்துள்ளதால், விவசாயிகள் வயலுக்கு செல்ல தயங்குகின்றனர்.