மேலும் செய்திகள்
சாமுண்டி மலைக்கு இன்று இரவு செல்ல தடை
3 minutes ago
பெங்களூரு: 'சித்ரதுர்கா ரேணுகாசாமியின் தாய், நீதிமன்ற விசாரணையின் போது, போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்திற்கு நேர்மாறாக கூறியதால், அவரை பிறழ்சாட்சியாக அறிவிக்க வேண்டும்' என, நீதிபதியிடம் அரசு தரப்பு வக்கீல் முறையிட்டார். சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை, பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. ரேணுகாசாமியின் பெற்றோர் காசிநாத், ரத்னபிரபா ஆகியோர் ஆஜராகினர். இவர்களிடம் தர்ஷன் தரப்பு வக்கீல், சி.வி.நாகேஷ் குறுக்கு விசாரணை நடத்தினார். ரத்னபிரபா கூறியதாவது: என் மகன் கொலை செய்யப்பட்ட அன்று, அவனே எனது மொபைல் போனுக்கு அழைப்பு விடுத்தான். நான் அவனது மொபைல் போனுக்கு அ ழைப்பு விடுக்கவில்லை. அவனது நம்பர் எனக்கு தெரியாது. அவன் இரண்டு சிம் கார்டுகள் உபயோகித்தான். சம்பவம் நடந்த அன்று நண்பர்களுடன் வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்றான். இவ்வாறு அவர் கூறினார். அரசு தரப்பு வக்கீல் பிரசன்ன குமார் வாதிட்டதாவது: ரத்னபிரபா போலீஸ் விசாரணையின் போது, சம்பவம் நடந்த அன்று பிற்பகல் 2:43; 2:45 மணிக்கு ரேணுகாசாமியின் மொபைல் போனுக்கு அவரே தொடர்பு கொண்டதாக கூறியிருந்தார். மேலும், ரேணுகாசாமியின் நம்பரை தனது மொபைல் போனில் பதிவு செய்து வைத்துள்ளதாகவும், சிம் கார்டு விபரம் குறித்து தெரியாது என்றும் தெரிவித்திருந்தார். தற்போது இவை அனைத்திற்கும் நேர்மாறாக சாட்சி கூறுகிறார். எனவே, அவரை பிறழ்சாட்சியாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ரத்னபிரபாவை பிறழ்சாட்சியாக அறிவிப்பது குறித்து, ஜனவரி, 5ம் தேதியன்று அறிவிக்கப்படும். பவித்ர கவுடா உட்பட மூவருக்கு மட்டும் வீட்டு சாப்பாடு சாப்பிட அனுமதி வழங்கப்படுகிறது. இவர்கள் மூவருக்கும் ஒரு நாளைக்கு , ஒரு வேளைக்கு மட்டும் வீட்டு சாப்பாடு சாப்பிட அனுமதி அளிக்கப்படுகிறது என, நீதிபதி தெரிவித்தார்.
3 minutes ago