மழைநீர் கால்வாய் அருகில் சாலை மாநகராட்சி கமிஷனர் தகவல்
பெங்களூரு : ஆர்.ஆர்.நகர் மண்டலம், ஹொசகெரேஹள்ளியின், கோடி சாலை அருகில் உள்ள மழைநீர்கால்வாய் பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் மகேஸ்வர் ராவ் உத்தரவிட்டார். ஆர்.ஆர்.மண்டலத்தில், கால்வாய் பகுதிகளை மகேஸ்வர் ராவ், நேற்று சென்றுஆய்வு செய்தார். பின் அவர் அளித்த பேட்டி: மழைநீர்க் கால்வாய் பகுதியில், சாலை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த வேண்டியிருந்தால், அதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹொசகெரே ஹள்ளி, கோடி சாலை மற்றும் அதன் சுற்றுப்பகுதி சாலைகளை தரம் உயர்த்த வேண்டும். பொது மக்களின் நடமாட்டத்துக்கு, வழி வகுக்க வேண்டும். மழைநீர்க் கால்வாய் பகுதியில் சாலை அமைப்பதால், பல பகுதிகளுக்கு இணைப்பு ஏற்படுத்தலாம். வெளி வட்ட சாலையின், பி.இ.எஸ்., கல்லுாரி அருகில், ஹொசகெரே ஜங்ஷனில், மேம்பால பணிகள் வேகமாக நடக்கின்றன. நடப்பாண்டு அக்டோபரில், பொது மக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்படும். இப்பகுதியில் 500 மீட்டர் நீளமான மேம்பாலம் பணிகள் 85 சதவீதம் முடிந்துள்ளன. சீனிவாச சாலையில், குடிநீர் வாரியம் சாலையை தோண்டி, பணிகள் நடத்தியது. பணிகள் முடிந்தும் சாலையை இன்னும் பழுது பார்க்கவில்லை. சாலையை உடனடியாக சீரமைக்கும்படி, குடிநீர் வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.