| ADDED : நவ 28, 2025 05:35 AM
பாகலுார்: பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டியதால் கைது செய்ய சென்ற, போலீஸ் ஏட்டை தாக்கிய ரவுடி கைது செய்யப்பட்டார். பெங்களூரு, பாகலுார் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றுபவர் நாகராஜ், 38. இவர், நேற்று முன்தினம் இரவு இன்னொரு ஏட்டு மகாந்தேஷுடன் ரோந்து பணியில் ஈடுபட்டார். இந்நிலையில், பண்டே கொடிகேஹள்ளி பகுதியில் பொதுமக்களிடம், ஒருவர் கத்தியை காட்டி மிரட்டுவதாக, நாகராஜ், மகாந்தேஷுக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற இருவரும், கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய ரவுடி ஹரிஷ், 40 என்பவரை பிடித்தனர். போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்ல முயன்றபோது, நாகராஜை, ஹரிஷ் தாக்கினார். அவரது கன்னத்தில் பல முறை அறைந்ததுடன், சாலையில் பிடித்து தள்ளி விட்டு தப்ப முயன்றார். ஏட்டு மகாந்தேஷ், ஹரிஷை மடக்கி பிடித்தார். தகவல் அறிந்து அங்கு வந்த பாகலுார் போலீசார், ஹரிஷை கைது செய்தனர்.