உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அமலாக்க துறை அதிகாரிகளாக நடித்து ரூ.3.2 கோடி தங்க நகை கொள்ளை

 அமலாக்க துறை அதிகாரிகளாக நடித்து ரூ.3.2 கோடி தங்க நகை கொள்ளை

ஹூப்பள்ளி: அமலாக்கத்துறை அதிகாரிகளை போன்று நடித்து, தங்க நகை வியாபாரியிடம், 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம கும்பலை, போலீசார் தேடுகின்றனர். கேரளாவை சேர்ந்தவர் சுதீன். இவர் நகைக் கடைகளுக்கு, நகைகளை சப்ளை செய்யும் தொழில் செய்கிறார். கடந்த 15ம் தேதி தன் பணியாளர் விவேக்குடன் மங்களூரு வந்தார். அங்கிருந்து இருவரும் பெலகாவிக்கு வந்தனர். சுதீன் செயின், பிரேஸ்லெட், மோதிரம், கம்மல், நெக்லஸ் என, 3.2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொண்டு வந்திருந்தார். பெலகாவி, தார்வாட், ஹூப்பள்ளியில் உள்ள பல்வேறு நகை கடைகளுக்கு சென்று ஆர்டர் பெற்றார். ஹூப்பள்ளியின், பழைய பஸ் நிலையம் எதிரில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தனர். 19ம் தேதி தார்வாடுக்கு சென்றுவிட்டு, காரில் ஹோட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். ஹூப்பள்ளியின், நீலிஜின் சாலையில், இவர்களின் காரை மறித்த ஐந்து நபர்கள், தங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் என, அறிமுகம் செய்து, அடையாள அட்டையை காட்டினர்; ஹிந்தியில் பேசினர். 'நீங்கள் சட்டவிரோதமாக தங்கம் கடத்துவதாக, தகவல் வந்துள்ளது. விசாரிக்க வேண்டும். வாருங்கள்' என, கூறி அழைத்துச் சென்றனர். பெலகாவியின், கித்துார் அருகில், விவேக்கை காரில் இருந்து இறக்கிவிட்டனர். சுதீனை எம்.கே.ஹூப்பள்ளி சாலைக்கு அழைத்துச் சென்று, மிரட்டி அவரது மொபைல் போனை பறித்து, சிம் கார்டை எடுத்துக் கொண்டனர். அவரை தாக்கி நகைகள் இருந்த பையை பறித்துத் தப்பினர். இதுகுறித்து, ஹூப்பள்ளி நகர் போலீஸ் நிலையத்தில், சுதீன் புகார் அளித்துள்ளார். போலீசாரும் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சுதீனுக்கு அறிமுகம் உள்ளவர்களே, கொள்ளையில் தொடர்பு கொண்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை