| ADDED : நவ 23, 2025 04:09 AM
பெங்களூரு: முதல்வர் பதவி விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை, சித்தராமையா நேற்றிரவு சந்தித்தார். ''தேவைப்பட்டால் கார்கேயை நடந்தே சென்று பார்ப்பேன்,'' என, துணை முதல்வர் சிவகுமார் பதிலடி கொடுத்துள்ளார். 'நானே 5 ஆண்டுகளும் முதல்வர்' என்று சித்தராமையா கூறியதை அடுத்து, கர்நாடக அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. சிவகுமாருக்கு முதல்வர் பதவி வழங்கக் கோரி அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 20ம் தேதி இரவு டில்லி சென்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை சந்தித்துப் பேசினர். அவர்கள் நேற்று பெங்களூருக்கு திரும்பினர். அமைச்சர் பதவி கேட்க டில்லி சென்றதாக, ஒரே கோரஸ் பாடினர். நேற்று முன்தினம் இரவு பெங்களூரு வந்த மல்லிகார்ஜுன கார்கே, சதாசிவநகரில் உள்ள தன் வீட்டில் தங்கி உள்ளார். நேற்றிரவு அவரை சித்தராமையா சென்று, சந்தித்தார். மாநிலத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலை குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல் வெளியானது. இந்த சந்திப்பு குறித்து, துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், ''தேவைப்பட்டால் கார்கேயை, நான் நடந்தே சென்று பார்ப்பேன். என் வீடும், அவரது வீடும் 100 மீட்டர் துாரத்தில் தான் உள்ளன,'' என்றார். இதற்கிடையில் நேற்று காலையில் மீன்வளத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில், சித்தராமையாவும், சிவகுமாரும் கலந்து கொண்டனர். முதலில் இருவரும் ஒருவரையொருவர் முகத்தை பார்த்துக் கொள்ளவில்லை. சித்தராமையா இயல்பாக இருந்தார். சிவகுமார் முகத்தை இறுக்கமாக வைத்திருந்தார். மேடையில் அமர்ந்திருந்தபோது சிவகுமார், சித்தராமையாவிடம் ஏதோ பேச, அதை சித்தராமையா கூர்ந்து கவனித்தார்.