செருப்பில் இருந்த பாம்பு கடித்து மென்பொறியாளர் உயிரிழப்பு
பெங்களூரு:செருப்பில் புகுந்திருந்த குட்டி பாம்பு கடித்ததில், மென்பொறியாளர் உயிரிழந்தார். பெங்களூரு புறநகர், பன்னரகட்டாவின் ரங்கநாத லே - அவுட்டில் வசித்தவர் மஞ்சு பிரகாஷ், 41. இவர் டி.சி.எஸ்., நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றினார். இவர், 'க்ராக்ஸ்' என்ற ஷூ வகையிலான செருப்பை வீட்டு வளாகத்தில் வைத்திருந்தார். நேற்று முன்தினம் மதியம், மஞ்சு பிரகாஷ், தன் செருப்பை அணிந்து காரில் வெளியே சென்றார். தாய்க்கு கரும்பு ஜூஸ் வாங்கி கொண்டு, வீட்டுக்கு வந்தார். ஜூசை தம்பியிடம் கொடுத்து, தாயிடம் தரும்படி கூறிவிட்டு தன் அறைக்கு சென்று படுத்தார். சிறிது நேரத்துக்கு பின், கூலி தொழிலாளி ஒருவர் ஏதோ கேட்பதற்காக, மஞ்சு பிரகாஷின் வீட்டு வாசலுக்கு வந்தார். அப்போது, அங்கிருந்த செருப்பில் குட்டி பாம்பு இறந்து கிடப்பதை கவனித்து, வீட்டினரிடம் கூறினார். அதிர்ச்சி அடைந்த மஞ்சு பிரகாஷின் தாய், மகன் அறைக்கு சென்று பார்த்தார். அவர் வாயில் நுரையுடன் மயங்கி கிடந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், மஞ்சு பிரகாஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மஞ்சு பிரகாஷின் தம்பி ஹரிஷ் கூறியதாவது: எங்கள் வீட்டிற்குள் ஒரு முறை பாம்பு வந்தது. அன்றிலிருந்து நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம். என் அண்ணன் மஞ்சு பிரகாஷ், தினமும் வீடு முழுதும் நன்றாக சோதித்து பார்த்த பின்னரே, உறங்க செல்வார். இவ்வளவு விழிப்புடன் இருந்தும், செருப்பில் பாம்பு இருப்பதை கவனிக்கவில்லை. முன்பு ஒரு விபத்தில், அவரது காலில் ஆப்பரேஷன் செய்யப்பட்டிருந்தது. அப்போது முதல் இடது கால் உணர்வில்லாமல் இருந்தது. எனவே, அவரால் பாம்பு கடித்ததை உணர்ந்திருக்க முடியவில்லை. உணர்வு இருந்திருந்தால் உடனடியாக சிகிச்சை பெற்றிருப்பார். அவர் காரில் இருந்து இறங்கும் போதே, சோர்வாக தான் இருந்தார். யாரும் இதுபோன்ற செருப்புகளை அணியாதீர்கள். இது விஷ ஜந்துக்களுக்கு வீடு போன்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மஞ்சு பிரகாஷ் காலின் அழுத்தத்தால், குட்டி பாம்பு இறந்தது தெரியவந்தது.