உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தேசிய ஜனநாயக கூட்டணியை உடைக்க மாட்டோம் ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா திட்டவட்டம்

 தேசிய ஜனநாயக கூட்டணியை உடைக்க மாட்டோம் ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா திட்டவட்டம்

சேஷாத்திரிபுரம்: ''எந்த காரணத்தை கொண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியை உடைக்க மாட்டோம். பிரதமர் மோடியின் தலைமையில், எங்களுக்கு நம்பிக்கை உள்ளது,'' என, ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா தெரிவித்தார். பெங்களூரு சேஷாத்திரிபுரம் ஜே.பி., பவனில் நடந்த ம.ஜ.த., வெள்ளி விழாவில், தேவகவுடா பேசியதாவது: எந்த காரணத்தை கொண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியை நாங்கள் உடைக்க மாட்டோம். மோடியின் தலைமையில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இதை கட்சி தொண்டர்களும், தலைவர்களும் மறந்துவிடக் கூடாது. காங்.,கிற்கு பாடம் அவசர நிலை பிறப்பித்தபோது, இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை நடத்தி ய ஜெயபிரகாஷ் நாராயணுடன் நாங்களும், அப்போதைய பா.ஜ.,வும் இணைந்து பணியாற்றினோம். நாட்டின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மாநில காங்கிரஸ் கட்சியின் மோசமான நிர்வாகத்துக்கு பாடம் கற்பிக்க வேண்டும். ம.ஜ.த.,வில் இருந்திருந்தால் தான் முதல்வராகியிருக்க மாட்டேன் என்று சித்தராமையா கூறி உள்ளார். அவரை முதல்வராக்க நான் தயாராக இருந்தேன். ஆனால் தரம்சிங்கை முதல்வராக்குமாறு, சோனியா வலியுறுத்தினார். சோனியாவின் வீட்டுக்கு மூன்று முறை சென்று, சித்தராமையாவை முதல்வராக்குமாறு கூறினேன். இது பற்றி சோனியாவிடம் சித்தராமையா கேட்கட்டும். அவரை முதல்வராக்க சோனியா ஒப்புக் கொள்ளவில்லை. ராமகிருஷ்ண ஹெக்டே எட்டு ஆண்டுகள் முதல்வராக இருந்தார். அவர் உங்களை நிதியமைச்சராக்கவில்லையா? நான் உங்களை நிதியமைச்சராக்கவில்லையா? நீங்கள் உச்சநீதிமன்ற வக்கீல் அல்ல; உயர் நீதிமன்ற வக்கீலும் இல்லை. மைசூரில் ஏதோ ஓரிரு வழக்குகளை வாதிட்டீர்கள். ஹெக்டே எதிர்ப்பு சித்தராமையா, எங்கள் கட்சிக்கு எந்த பங்களிப்பும் செய்யவில்லை. அவரை மாநில தலைவராக்க நான் விரும்பினேன். அப்போது என் அறைக்கு வந்த ஹெக்டே, 'இவரை தவிர, வேறு யாரையாவது ஆக்குங்கள்' என்றார். ஆனால், அவர் சொன்னதை நான் கேட்கவில்லை. ஜாலப்பாவின் அரசியலில் இருந்து வளர்ந்தவன் நான். அச்சமுதாய மக்கள் நலனுக்காக மருத்துவ கல்லுாரிக்கு ஒப்புதல் அளித்தேன். அதற்கு தேவராஜ் அர்ஸ் பெயர் சூட்ட வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், அவரோ, 'ஜாலப்பா மருத்துவ கல்லுாரி' என்று மாற்றிவிட்டார். இக்கல்லுாரி அச்சமுதாயத்துக்கான சொத்தாக இருக்க வேண்டும். இப்போது அது அவரின் குடும்ப சொத்தாக மாறிவிட்டது. இது தான் சமூக நீதியா? 'அஹிந்தா' மாநாட்டை நடத்தும்போது, அதை கட்சி மேடையில் நடத்தலாம் என்று பரிந்துரைத்தேன். அதை சித்தராமையா கேட்கவில்லை. ஹூப்பள்ளியில் தனியாக நடத்த முடிவு செய்தார். அதனால் வேறு வழியின்றி, அவரை கட்சியில் இருந்து நீக்கினேன். அதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை