| ADDED : நவ 28, 2025 05:51 AM
பெங்களூரு: கர்நாடகா முன்னாள் டி.ஜி.பி., ஓம்பிரகாஷ், 68, குடும்பத்துடன் பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட் பகுதியில் வசித்து வந்தார். இவரது மனைவி பல்லவி. சொத்து பிரச்னையால், ஓம்பிரகாஷை ஏப்ரல் 20ம் தேதி கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்ததாக பல்லவி கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். கொலையில் பிரகாஷின் மகள் கிருத்திக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசார், பெங்களூரு கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், 'பல்லவி மட்டுமே குற்றவாளி' என கூறப்பட்டது. அவருக்கு மன ரீதியான பிரச்னைகள் உள்ளதாகவும், கிருத்திக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால், அவரை வழக்கிலிருந்து விடுவித்து விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதனால், நிமான்ஸ் மருத்துவர்கள் குழுவினர், பல்லவியின் மன நலம் குறித்து பல சோதனைகள் செய்து வந்தனர். சோதனை குறித்த அறிக்கையை சமர்ப்பித்து உள்ளனர். அறிக்கையில், 'பல்லவி உடல் ரீதியாக ஆரோக்கியமாக உள்ளார். மன ரீதியாக சரியில்லாமல் உள்ளார். மனம் நலம் பாதிக்கப்பட்டு உள்ளார்' என கூறப் பட்டு உள்ளது.