| ADDED : நவ 18, 2025 04:51 AM
விஜயபுரா: திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை கொலை செய்த இளம்பெண், போலீசில் சரண் அடைந்தார். விஜயபுரா நகரின் அமன் காலனியில் வசித்தவர் சமீர் என்ற இனாம்தார், 26. கோல்கும்பஸ் போலீஸ் நிலைய ரவுடி பட்டியலில் இருந்த இவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் பதிவாகியுள்ளன. இவரும், தய்யாபா, 24, என்ற பெண்ணும் நான்கு ஆண்டுகளாக, 'லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்'பில் இருந்தனர். கடந்த ஓராண்டுக்கு முன், தய்யாபாவுக்கும், சமீருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்தனர். சமீபத்தில் மீண்டும் சேர்ந்து கொண்டனர். சமீர் தேவையின்றி தய்யாபாவுக்கு, பல விதங்களில் தொந்தரவு கொடுத்தார். இதனால் வெறுப்படைந்த தய்யாபா, சமீரை கொலை செய்ய திட்டம் தீட்டினார். இதற்கு இவரது சகோதரர் அஸ்லம், 28, உதவுவதாக கூறினார். இதன்படி நேற்று முன்தினம் இரவு, வீட்டுக்கு வந்த சமீரை, இருவரும் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். நேற்று காலையில், கோல்கும்பஸ் போலீஸ் நிலையத்துக்கு வந்த தய்யாபா, கொலை செய்த விஷயத்தை கூறி, சரண் அடைந்தார். அவர் கொடுத்த தகவலின்படி, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சமீரின் உடலை மீட்டனர். கொலைக்கு உடந்தையாக இருந்த தய்யாபாவின் சகோதரரையும் கைது செய்தனர்.