உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / வைப்பு நிதி முதலீட்டை தீர்மானிக்க இத்தனை வழிகளா?

வைப்பு நிதி முதலீட்டை தீர்மானிக்க இத்தனை வழிகளா?

பரவலாக அறியப்பட்ட ஏணி உத்தி தவிர, வைப்பு நிதி முதலீட்டில் வழிகாட்டும் மற்ற உத்திகள் பற்றி ஒரு அலசல்.அனைத்து வகை முதலீட்டாளர்களாலும் நாடப்படும் வைப்பு நிதி முதலீடு தற்போது மிகவும் ஈர்ப்புடையதாக அமைந்துள்ளது. வட்டி விகித போக்கு காரணமாக, தற்போது கிடைக்கும் அதிக வட்டியில் முதலீடு செய்ய இது ஏற்ற தருணமா? எனும் கேள்வியை, கடந்த சில மாதங்களாக முதலீட்டாளர்கள் பரிசீலிக்கும் நிலை உள்ளது.மேலும், 'லாக் இன்' நிபந்தனை கொண்ட அதிக கால முதலீட்டிற்கு கூடுதல் வட்டி விகித பலன் இருப்பதால், அதிக கால வைப்பு நிதியை நாடுவது ஏற்றதா? அல்லது பணமாக்கல் கொண்ட வைப்பு நிதி முதலீட்டை நாடுவது ஏற்றதா? எனும் கேள்வியும் உள்ளது.

ஏணிப்படி உத்தி

நிரந்தர பலனளிக்கும் வைப்பு நிதி முதலீடு மிகவும் எளிமையான முதலீடு வாய்ப்பாகக் கருதப்பட்டாலும், இதில் பல வகையான முதலீடு உத்திகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இவற்றை அறிந்திருப்பது, உங்கள் வைப்பு நிதி உத்தியை தீர்மானிக்க உதவும்.ஏணிப்படி உத்தி என சொல்லப்படும் உத்தி பரவலாக பின்பற்றப்படுகிறது. மொத்த தொகையையும் ஒரே நேரத்தில் முதலீடு செய்யாமல், பல்வேறு முதிர்வு கால அளவில் பிரித்து முதலீடு செய்வதாக இது அமைகிறது. குறுகிய கால தொகை முதிர்வடையும் போது மீண்டும் முதலீடு செய்யலாம். வட்டி விகித சுழற்சிக்கு ஏற்ப வெவ்வேறு கால முதலீடுகள் பலனளிக்கும். பரவலாக அறியப்பட்ட ஏணிப்படி உத்தி தவிர, 'பார்பெல்' உத்தி எனும் அணுகுமுறையும் முன்வைக்கப்படுகிறது. இடர் மற்றும் பலன் இடையே சமநிலை காணும் வகையில் இந்த உத்தி அமைகிறது. குறுகிய கால மற்றும் நீண்ட கால முதலீடு இரண்டும் கலந்ததாக முதலீடு செய்ய வேண்டும்.நடுத்தர கால முதலீடு குறைவாக இருக்க வேண்டும். இதன் மூலம், இரண்டு வகை முதலீட்டின் பலனையும் பெறலாம். பொதுவாக நோக்கும் போது, அவசர கால நிதி போன்றவற்றை குறுகிய கால முதலீட்டில் போட்டு வைக்கலாம். நீண்ட கால நோக்கிற்கு நீண்ட கால முதலீடு காலத்தை நாடலாம்.

இடர் நிர்வாகம்

ஆனால், இந்த அணுகுமுறையிலும் முதலீடு பலனை கண்காணித்து வருவது முக்கியம். அதிக வட்டி அளிக்கும் தனியார் முதலீட்டையும் பரிசீலிக்கலாம். குறுகிய காலத்தில் அதிக பணத் தேவையும், நீண்ட கால நோக்கில் குறைவான பணத் தேவையும் கொண்ட ஓய்வூதியதாரர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும் என கருதப்படுகிறது.இது தவிர, ஒரே காலத்தில் முதிர்வு கொண்டதாக அமையும் வகையில் வைப்பு நிதிகளில் முதலீடு செய்யும் தோட்டா உத்தியும் இருக்கிறது. முதிர்வு காலத்தில் அதிக பலன் கிடைக்கும் என்பதால், குழந்தைகள் கல்வி போன்ற குறிப்பிட்ட இலக்கிற்கான முதலீட்டிற்கு இந்த உத்தி ஏற்றதாக இருக்கும்.ஆனால், தோட்ட உத்தி குறைந்த விரிவாக்கம் கொண்ட முதலீட்டை அளிப்பதோடு, முதிர்வு காலத்தில் வருமான வரி பொறுப்பும் கூடுதலாக இருக்கும். வைப்பு நிதி முதலீட்டிற்கான சரியான உத்தியை தீர்மானிக்க இயலாத நிலையில், சேமிப்பு கணக்கில் தொகையை விட்டு வைப்பதை தவிர்க்க வேண்டும். அதைவிட, தானாக வைப்பு நிதிக்கு உபரித்தொகை மாற்றப்படும் வசதியை நாடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை