உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / 12 மாதங்களில் அவசர கால நிதியை உருவாக்கும் வழிகள்

12 மாதங்களில் அவசர கால நிதியை உருவாக்கும் வழிகள்

எதிர்பாராத நெருக்கடிகளை எதிர்கொள்ள உதவும் அவசர கால நிதியின் முக்கியத்துவம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தாலும், இந்தியர்களில் பலர் இந்த நிதியை பரமாரிக்காமல் இருப்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் தெரிய வந்து உள்ளது. அண்மையில் பினோலஜி வென்சர்ஸ் நடத்திய ஆய்வு, 75 சதவீதம் பேர் முறையான நிதி திட்டமிடல் மற்றும் அவசர கால நிதி இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கிறது. நிதி பாதுகாப்பிற்கு அவசர கால நிதி அவசியம் என்பதால், இந்த நிதியை எளிதாக உருவாக்கி கொள்வதற்கான வழிகளை பார்க்கலாம்:

மாதாந்திர செலவுகள்:

குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்கான அடிப்படை செலவுகளுக்கான தொகை அவசர கால நிதியாக கருதப்படுகிறது. இந்த நிதியை உருவாக்க முதல் படி மாதாந்திர செலவுகளை கண்காணித்து, எவற்றுக்கு எல்லாம் எவ்வளவு செலவாகிறது என்பதை அறிவது. இது சேமிப்பு இலக்கை நிர்ணயிக்க உதவும்.

சேமிப்பு கணக்கு:

மாதாந்திர செலவுகளை அறிந்த பிறகு, அவசர கால நிதிக்கான தொகையை ஒதுக்கி சேமிக்கத்துவங்க வேண்டும். இதற்கென தனி சேமிப்பு கணக்கு இருப்பதும் நல்லது. இந்த கணக்கில் மாதாமாதம் உரிய தொகையை செலுத்த வேண்டும். இது ஒரு அத்தியாவசிய தேவை என உணர வேண்டும்.

செலவு கட்டுப்பாடு:

பொதுவாக, பலருக்கும் சம்பள தினத்தன்று அதிகம் செலவு செய்யும் பழக்கம் இருக்கிறது. இதை தவிர்க்க, செலவுகளை முன்னதாக திட்டமிட வேண்டும். அத்தியாவசிய செலவுகளை பட்டியலிடுவது, வீண் செலவுகளை கண்டறிந்து தவிர்க்க உதவும். இந்த தொகையை அவசர கால நிதிக்கு ஒதுக்கலாம்.

வருமான வழிகள்:

செலவு கட்டுப்பாடு முக்கியம் என்றாலும் அது மட்டும் போதாது. வாய்ப்பிருந்தால் வருமானத்தை அதிகரிக்கும் வழிகளை நாட வேண்டும். பகுதி நேர வேலைவாய்ப்பு,பிரிலான்சிங், ஆலோசனை போன்றவை மூலம் கூடுதல் வருமானத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

கண்காணிப்பு:

இந்த வழிகளை மேற்கொண்ட பிறகு, முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். திட்டமிட்டப்படி சேமிப்பதற்கு இது உதவுவதோடு, மேலும் தொகை தேவையா என்பதை தீர்மானிக்கவும் கைகொடுக்கும். திட்டமிடுவதும், அதற்கேற்ப சேமிப்பதும் ஒரு பழக்கமான பிறகு நிதி நிர்வாகம் எளிதாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை