சென்னை:முருங்கைக்காய், முருங்கைக்கீரையில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதை ஊக்குவிக்க, தமிழக அரசின், 'டி.என்.அபெக்ஸ்' நிறுவனம், கரூர் மாவட்டத்தில் முருங்கை தொழில் பூங்கா அமைக்க உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள், தொழில்முனைவோரிடம் சரியான புரிதலை ஏற்படுத்தாத நிலையில், தற்போது வாஸ்து பிரச்னையை காரணம் காட்டி, தொழில் துவங்க தாமதம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. கரூர், திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், முருங்கை விளைச்சல் அமோகமாக உள்ளது. அதிக விளைச்சலின்போது, முருங்கைக்காய் விலை சரிவடைகிறது. இதனால், உரிய வருவாய் கிடைக்காமல், விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.இதையடுத்து, கரூர் மாவட்டம், புஞ்சைக்காளக்குறிச்சியில், 'சிட்கோ' எனப்படும் சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு, 52 ஏக்கரில், 100 மனைகளுடன் கூடிய தொழிற்பேட்டை உள்ளது. அங்கு முருங்கை பூங்கா உருவாக்கி, முருங்கையில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, தொழில் மனைகளை ஒதுக்க திட்டமிடப்பட்டது.இதுகுறித்து, தொழில்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:முருங்கை பூங்காவில் தொழில் துவங்க வலியுறுத்தி, பலரிடமும் பேச்சு நடத்தப்படுகிறது. சமீபத்தில் நடத்திய பேச்சில் சிலர், 'பூங்காவில் தொழில் துவங்க வாஸ்து சரியில்லை' என, கூறுகின்றனர். அவர்கள் இடத்தையே பார்க்கவில்லை என, தெரிகிறது. ஏனெனில், புஞ்சைக்காளக்குறிச்சியில் ஏற்கனவே ஜவுளி உட்பட, 26 நிறுவனங்களுக்கு மனைகள் ஒதுக்கப்பட்ட நிலையில், ஒரு நிறுவனம் உற்பத்தி துவக்கியுள்ளது. மற்ற நிறுவனங்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.முருங்கை பூங்கா அமைக்க தொழில்முனைவோர்கள் ஆர்வம் காட்டாதது குறித்து, ஆய்வு செய்யப்பட்டதில், டி.என்.அபெக்ஸ் அதிகாரிகள் நடத்திய பேச்சு, நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் இல்லை என, தெரிகிறது. இதுகுறித்து விசாரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.தொழில்முனைவோரிடம் சரியான புரிதலை ஏற்படுத்தாத நிலையில், தற்போது வாஸ்து பிரச்னையை காரணம் காட்டி, தொழில் துவங்க தாமதம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது