| ADDED : ஜூலை 07, 2024 01:57 AM
புதுடில்லி: 'பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' நிறுவனத்தின் பங்குகளை விற்கும் திட்டம் எதுவும் அரசுக்கு தற்போது இல்லை என, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.மத்திய அரசு கடந்த மார்ச் 2020ல், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 52.98 சதவீத பங்குகளை விற்க திட்டமிட்டது. எனினும், கடந்த 2022ல், அரசு இத்திட்டத்தை திரும்ப பெற்றது. திருத்தப்பட்ட வேறொரு திட்டத்தை அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளை விற்கும் திட்டம் எதுவும் இல்லை என ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: நான் அமைச்சராக பதவியேற்றபோது, அனைவரும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டினர். இதற்கு கிடைத்த வரவேற்பு, அதன் விற்பனை விலை குறித்து யோசிக்க வைத்தது. இந்நிறுவனம், கடந்த ஓராண்டில் ஈட்டிய லாபத்திற்கு நிகராக, அதன் விற்பனை விலை இருந்தது. அரசு இந்நிறுவனத்தை தன்வசமிருந்து கைவிடும் பட்சத்தில், பெரிய பிரச்னை ஏற்படும். இவ்வாறு தெரிவித்து உள்ளார்.