சென்னை:ஜப்பான் நாட்டில் ஊக்குவிப்பு மையம் அமைப்பதன் வாயிலாக, அதிக முதலீடுகளை ஈர்க்க, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.சட்டசபையில் தொழில் துறை மானிய கோரிக்கையின் போது, 'ஜப்பானிய நிறுவனங்களின் முதலீடுகளை மேலும் பெருமளவில் தமிழகத்திற்கு ஈர்க்க, டோக்கியோவில் ஒரு முதலீட்டு ஊக்குவிப்பு மையம், வழிகாட்டி நிறுவனம் வாயிலாக உருவாக்கப்படும்' என, தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார்.இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜப்பான் நிறுவனங்கள், இந்தியாவில் தொழில் துவங்குவதில் தமிழகத்திற்கு முன்னுரிமை தருகின்றன. மிட்சுபிஷி, யமஹா, நிசான் உட்பட, 400க்கும் மேற்பட்ட ஜப்பான் நிறுவனங்கள் நேரடியாகவும், கூட்டு நிறுவனங்கள் வாயிலாகவும் தமிழகத்தில் முதலீடு செய்துள்ளன.ஜப்பானை சேர்ந்த நிறுவனங்கள், இந்தியாவில் கூடுதலாக முதலீடு செய்ய திட்டமிட்டு, முக்கிய நகரங்களை ஆய்வு செய்து வருகின்றன. அந்த முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்க, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம், ஊக்குவிப்பு மையம் ஒன்றை அமைக்க உள்ளது. இதன் வாயிலாக, அங்கிருக்கும் அதிகாரிகள், ஜப்பான் நிறுவனங்கள், வர்த்தக பிரநிதிகளை தொடர்பு கொண்டு, தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ள சாதகமான சூழல், அரசு சலுகைகள் உள்ளிட்டவை குறித்து தெரிவிப்பர். இதன் வாயிலாக, முதலீடுகள் ஈர்க்கப்படும். குறிப்பாக, ஜப்பானில் இருந்து மோட்டார் மற்றும் மின்சார வாகனம், எலக்ட்ரானிக்ஸ், கடல் உணவு பொருட்கள் ஆகிய துறையில் இருந்து தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.*டோக்கியோவில் முதலீட்டு மையம் அமைக்கப்படும்*இதற்கான பணிகளை அரசின் வழிகாட்டி மையம் மேற்கொள்ளும்*வாகனம், மின்னணு, கடல் உணவு பொருட்கள் துறைகளில் முதலீடுகளை ஈர்க்க திட்டம்