| ADDED : ஆக 02, 2024 12:56 AM
புதுடில்லி, ஆக. 2-ஆய்வக ரசாயனங்கள் மீதான இறக்குமதி வரியை, 150 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக மத்திய அரசு மீண்டும் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இது ஆக., 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆய்வகத்தில் மட்டும் பயன்படுத்த, 500 மில்லி லிட்டர் அல்லது 500 கிராமுக்கு மிகாத அளவில் உள்ள ரசாயன பேக்கேஜுகளின் இறக்குமதிக்கு 10 சதவீதமும், பிற ரசாயனங்களுக்கு 150 சதவீதமும் இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அரசு முன்னர் தெரிவித்திருந்தது.இதை சில இறக்குமதியாளர்கள் தவறாக பயன்படுத்தி, 150 சதவீத வரி விதிக்கப்படும் எத்தில் ஆல்கஹாலை, ஆய்வக ரசாயனம் என இறக்குமதி செய்து, முறைகேட்டில் ஈடுபட்டதை சுங்க அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து, நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், ஆய்வக ரசாயனங்கள் உட்பட, அனைத்து ரசாயனங்களுக்குமான சுங்க வரியை, 150 சதவீதமாக அரசு அதிகரித்து அறிவித்தது. இந்த வரி உயர்வினால், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் என ஆராய்ச்சியாளார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து சுங்கத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், உண்மையான பயனாளிகள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி, மேம்பாட்டு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஆய்வக ரசாயனங்கள் மீதான அடிப்படை சுங்க வரி 150 சதவீதத்தில் இருந்து, மீண்டும் 10 சதவீதமாக குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும் இது ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.