ஓய்வூதியம் வருவாயாக கருதப்பட்டு, அதற்கு வருமான வரி செலுத்த வேண்டியுள்ளது. ஓய்வூதியர்கள், தேசிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்து, அவர்கள் செலுத்தும் தொகைக்கு 50,000 ரூபாய் வரை கூடுதல் விலக்கு பெற முடியுமா?சி.சுப்பிரமணியன், சென்னை.பெற முடியும். தற்போது 18 வயது முதல் 70 வயது வரை, இந்திய குடிமக்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேரலாம். ஏற்கனவே இருக்கும் 1.5 லட்சம் ரூபாய் வரிக் கழிவோடு, என்.பி.எஸ். பங்களிப்புக்காக 50,000 ரூபாய் வரைகூடுதலாக கழிவு கோரலாம்.நிறைய பேர், ஓய்வு பெற்ற பின்னர் கிடைக்கும் பணப் பலன்களை, என்.பி.எஸ்.திட்டத்தில் சேமிக்கலாமா என்று யோசிக்கின்றனர். அவர்களுக்கும் இதில் வாய்ப்புண்டு. ஆனால், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வரை இத்திட்டத்திலேயே இருக்க வேண்டும் என்று 'லாக் இன்' விதிமுறை இருக்கிறது. வரி விலக்கு பெறுவதற்காக மட்டுமே என்.பி.எஸ். வசதியை நாடாதீர்கள். இளைஞர்களும் மத்திய வயதுக்காரர்களும் ஓய்வூதியத்துக்காக இத்திட்டத்தில் முதலீடு செய்வது சரி. 60 வயதுக்கு மேல், என்.பி.எஸ்., முதலீடு பெரிய லாபத்தைக் கொடுக்காது. அதிகபட்சம் 75 வயது வரை தான் என்.பி.எஸ். உண்டு. அப்போது சேகரமாகும் மொத்தத் தொகையில், 60 சதவீதத் தொகையைத் தான் எடுக்க முடியும். மீதமுள்ள 40 சதவீதத் தொகைக்கு ஓய்வூதிய திட்டம் ஒன்றை கண்டிப்பாக வாங்கிக்கொள்ள வேண்டும். இது இன்னொரு வகையான 'லாக் இன்.' முதியோர்களுக்கு பலன் இராது. எனது பான் எண்ணும், ஆதார் எண்ணும் இணைக்கப்படவில்லை. என்னால் வருமான வரி படிவம் தாக்கல் செய்ய முடியுமா?க.சரண்யன், திருச்சி.முடியும். வழக்கமாக, வருமான வரி வலைதளத்துக்குள் சென்று, உரிய விபரங்களைக் கொடுத்து, முதலீடுகளைக் காட்டி, கழிவுகளைக் கோரி அனைத்து நடவடிக்கையையும் மேற்கொள்ளலாம். இறுதியில், தாக்கல் செய்ய வரும்போது, ஆதார் ஓ.டி.பி., வாயிலாக வருமான வரி தாக்கலை சரிபார்ப்பு செய்ய முடியாது. மாறாக, இணைய வங்கி சேவை, ஏ.டி.எம்., வாயிலாக 'எலக்ட்ரானிக் வெரிபிகேஷன் கோட்' பெற்று சரிபார்ப்பை முடிக்கலாம். என்ன ஒன்று, செயல்படாத பான் அட்டையை வைத்துக்கொண்டு, ஐ.டி., சமர்ப்பிக்கும்போது, ரீபண்டு தொகை ஏதேனும் இருக்குமானால், அதைப் பெற முடியாது. ஆதாரையும் பான் அட்டையையும் இணைத்தால் தான் ரீபண்டு கிடைக்கும்.தேசிய பென்ஷன் திட்டத்தில், வரும் ஏப்ரல் முதல், புதிதாக 2 பாக்டர் ஆதன்டிபிகேஷன் அறிமுகம் செய்யப்படும் என்றுசொல்லப்படுகிறதே? இது என்ன?கே.அர்ஜுன் குமார், சீர்காழி.உங்கள் தேசிய பென்ஷன் கணக்கை, ஆன்லைன் திருடர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக, ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு முயற்சி இது. முன்பு உங்களுடைய 'யூசர் ஐ.டி.', கடவுச் சொல், 'கேப்சா'வைக் கொண்டு உள்ளே நுழைவீர்கள். வரும் ஏப்ரல் முதல், இந்த நிலைக்குப் பின்னர், ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓ.டி.பி. வரும். அதையும் உள்ளீடு செய்தால் தான், என்.பி.எஸ்., வலைதளத்துக்குள் நுழைய முடியும். உங்கள் ஆதார் அட்டையில் தவறான மொபைல் எண் இருந்தால், நீங்கள் தொலைந்தீர்கள். ஒருபக்கம் இந்தப் பாதுகாப்பு நல்லது தான். ஆனால், என்.பி.எஸ். கணக்கு வைத்திருக்கும் அனைவரும், ஒரே மொபைல் எண்ணை பல ஆண்டுகள் வைத்திருப்பார்கள் என்பது என்ன நிச்சயம்? விரைவில் பொதுமக்களின் கதறல் ஒலி கேட்கப் போகிறது, பாருங்கள்.என்னிடம் பணம் இருக்கும்போது கிரெடிட் கார்டு டியூ கட்ட முடியவில்லை. டியூ தேதியில் என் கணக்கில் பணமில்லை. டியூ தேதியை மாற்றித் தரச் சொன்னால், ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். என்ன செய்வது?இ.கோடீஸ்வரன், சென்னை.உங்களைப் போன்றவர்களுடைய சிரமங்களை மனதில் வைத்தோ என்னவோ, கடந்த மார்ச் 7 முதல் ஒரு புதிய வசதியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. நீங்கள் பணத்தை செலுத்தும் கடைசி தேதியை, உங்கள் வசதிக்கேற்ப, குறைந்தபட்சம் ஒருமுறை மாற்றியமைத்துக்கொள்ள அது அனுமதியளித்துள்ளது. இதனை நீங்கள் வாடிக்கையாளர் சேவை மையம், மின்னஞ்சல், ஐ.வி.ஆர்., இணைய வங்கி சேவை, மொபைல் செயலி உள்ளிட்ட அனைத்து வழிகளையும் பயன்படுத்தி, ஆக்டிவேட் செய்துகொள்ளலாம். மேலதிக விபரங்களுக்கு, நீங்கள் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் வங்கியை அணுகுங்கள். அவர்கள் விதிமுறைகள், வழிமுறைகளைத் தெரிவிப்பார்கள். மியூச்சுவல் பண்டுகள் 'ஸ்ட்ரெஸ் சோதனை' நடத்தச் சொல்லப்பட்டதே. அப்படியென்றால் என்ன?டபிள்யூ. டேவிட் குமார், சென்னை.ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் பங்குகளில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது வளர்ச்சியா, நீர்க்குமிழியா என்பது தான் குழப்பமாக இருக்கிறது. இந்நிலையில், முதலீட்டாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளரான 'செபி' ஒரு சோதனையைச் செய்யச் சொன்னது. அதைத் தான் மியூச்சுவல் பண்டுகளின் ஒழுங்கமைப்பான 'ஆம்பி' அனைத்து மியூச்சுவல் பண்டு நிறுவனங்களையும் செய்யச் சொன்னது. அதாவது, அவர்கள் நிர்வகிக்கும் பண்டுகளில் உள்ள மொத்தத்தொகையில் 25 சதவீதம், 50 சதவீதம் பங்குகளை விற்பனை செய்வதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்பதைக் கணிக்கச் சொன்னது. இதைத் தான் 'ஸ்ட்ரெஸ் சோதனை' என்று குறிப்பிட்டனர். அதாவது, சந்தையில் சரிவு ஏற்படுமானால், பல முதலீட்டாளர்கள் உடனடியாக மியூச்சுவல் பண்டுகளில் போடப்பட்டுள்ள பணத்தை எடுத்துவிட அவசரம் காட்டுவார்கள். அப்போது,தம்மிடம் இருக்கும் பங்குகளை விற்பனை செய்து, எவ்வளவு விரைவாக முதலீட்டைத் திருப்பித் தரமுடியும் என்பதை மதிப்பிடுவதற்கே இந்த சோதனை. குறைந்த நாட்களில் பங்குகளை விற்பனை செய்யக்கூடியவை நல்ல பண்டு திட்டங்கள் என்றோ, பல நாட்கள் ஆகும் பண்டு திட்டங்கள் அபாயகரமானவை என்றோ அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. முதலீட்டாளர்களின் அவசரத்துக்கு ஈடுகொடுக்க, மியூச்சுவல் பண்டுகள் தயாராக உள்ளனவா என்பதைக் கணிப்பதற்காகவே இந்தச் சோதனை நடத்தப்பட்டது.வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம். ஆயிரம் சந்தேகங்கள்தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும். ஆர்.வெங்கடேஷ் gmail.comph: 98410 53881