| ADDED : டிச 04, 2025 03:02 AM
புதுடில்லி: - மத்திய அரசு கொண்டுவந்துள்ள நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இதனைத் தெரிவித்தார். சி.ஐ.ஐ., அமைப்பு டில்லியில் நடத்தும் 'சி.ஐ.ஐ., இந்தியா எட்ஜ் 2025' கருத்தரங்கில் அவர் பேசியதாவது: புதிய தொழிலாளர் சட்டங்களுக்கான விதிகள் வெளியிடப்பட்ட பின்னரே சட்டங்கள் நடைமுறைக்கு வரும். அதற்கு முன்பாக மத்திய, மாநில அரசுகள் வரைவு விதிகளை வெளியிட்டு, பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும். அவை விரைவில் வெளியிடப்பட இருக்கின்றன. இச்சட்டங்களுக்கான வரைவு விதிகள் ஏற்கனவே வெளியிடப்பட்டன என்றாலும், வெளியிடப்பட்டு வெகுகாலமாகிவிட்டது. எனவே, இன்றைய சூழலுக்கு ஏற்ற வகையில், அவை மாற்றியமைக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. புதிய சட்டங்களின்படியும் தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி நேரம்தான். மேலும், கட்டாய பணி நியமனக் கடிதம், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை இலவச மருத்துவப் பரிசோதனை, பெண் தொழிலாளர்களுக்கு சம ஊதியம், வெவ்வேறு ஷிப்ட்களில் பணியாற்ற அவர்களுக்கு சம வாய்ப்பு, சர்வதேச நடைமுறையான ஓவர் டைம் ஆகியவற்றை இப்புதிய சட்டங்கள் உறுதிசெய்கின்றன. முன்பு இருந்த 29 பழைய சட்டங்கள் ஆங்காங்கே துண்டுதுண்டாக இருந்தன. அவற்றை ஒன்று சேர்த்து, நவீன வடிவில், புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அடுத்தாண்டு மார்ச்சுக்குள் நாட்டில் 100 கோடி தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்குவது எனும் இலக்கு எட்டப்படும். தற்போது 94 கோடி பேருக்கு சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். புதிய தொழிலாளர் சட்டங்களுக்கான வரைவு விதிகள் வெளியிடப்பட்டு, 45 நாட்கள் பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு, பின்னர் இறுதியான விதிகள் முடிவு செய்யப்படும். தொழிலாளர் உரிமைகள் என்பது பொதுப்பட்டியலில் வருவதால், நான்கு சட்டங்களுக்கும் விதிகளை உருவாக்குவதில் மத்திய- - மாநில அரசுகள் சேர்ந்தே பணியாற்ற வேண்டியிருக்கும். என்னென்ன சட்டங்கள்? ஊதிய சட்டம்- 2019 தொழிலக உறவுகள் சட்டம்- 2020 சமூகப் பாதுகாப்பு சட்டம் -2020 தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டம்- 2020.