| ADDED : நவ 23, 2025 12:15 AM
மும்பை: நம் நாட்டின் டிஜிட்டல் பேமென்ட் கட்டமைப்பான யு.பி.ஐ., சேவையை ஐரோப்பிய நாடுகளின் டிப்ஸ் எனும் 'டார்கெட் இன்ஸ்டன்ட் பேமென்ட் செட்டில்மென்ட்' நடைமுறையுடன் இணைப்பதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. விரைவில் இவை இரண்டும் இணைக்கப்படும் என்றும், எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனை சேவையை நடைமுறைக்கு கொண்டு வர ஐரோப்பிய மத்திய வங்கியுடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும் ஆர்.பி.ஐ., கூறியுள்ளது. யு.பி.ஐ., - டிப்ஸ் இணைப்பு தொடர்பாக ரிசர்வ் வங்கியும் என்.பி.சி.ஐ., இன்டர் நேஷனல் பேமென்ட்ஸ் நிறுவனமும், ஐரோப்பிய மத்திய வங்கியுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், சீரான மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றங்களுக்கு பின், இதை செயல்படுத்துவதற்கான பணிகளை துவங்க தற்போது சம்மதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. இது நடைமுறைக்கு வந்ததும் இரு தரப்பில் உள்ள பயனர்களும் எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனைகளை மிக வேகமாக மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனைகளை மேம்படுத்துவதற்கான ஜி - 20 நாடுகளின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.