விருதுநகர் ஜவுளி பூங்கா ரூ.10 கோடி விடுவிப்பு
சென்னை:விருதுநகர் மாவட்டத்தில், பிரதமரின் மாபெரும் ஜவுளி பூங்கா திட்டத்தை செயல்படுத்துவதற்காக துவக்கப்பட்டுள்ள சிறப்பு முகமைக்கு, மத்திய, மாநில அரசுகள் மொத்தமாக 10 கோடி ரூபாய் விடுவித்துள்ளன.மத்திய அரசு, 'பி.எம்.மித்ரா' எனப்படும் பிரதமரின் மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவை, விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரத்தில் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக, 1,052 ஏக்கர் நிலத்தை சிப்காட் ஒதுக்கிஉள்ளது. இங்கு, ஜவுளி நிறுவனங்கள் ஆலை துவக்குவதற்காக, 2,000 கோடி ரூபாய் செலவில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. விருதுநகர் ஜவுளி பூங்கா திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து, 'பி.எம்.மெகா இன்டகிரேட்டட் டெக்ஸ்டைல் ரீஜியன்ஸ் அண்டு அப்பேரல் பார்க் தமிழகம்' என்ற சிறப்பு முகமையை துவக்கியுள்ளன.இந்த முகமை, 'மாஸ்டர் டெவலப்பர்' எனப்படும் ஒப்பந்த நிறுவனம் வாயிலாக பூங்கா அமைக்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளது. சிப்காட் நிறுவனத்தை, மாஸ்டர் டெவலப்பராக மத்திய அரசு நியமித்து சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. தற்போது, சிறப்பு முகமைக்கு மத்திய அரசு 4.90 கோடி ரூபாய்; தமிழக அரசு 5.10 கோடி ரூபாய் என, மொத்தம் 10 கோடி ரூபாயை விடுவித்துள்ளன. விரைவில் பூங்கா அமைக்கும் பணிகளை துவக்க சிப்காட் தயாராகி வருகிறது.